தமிழ்நாடு

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது - உறங்காது என கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையாற்றினார்.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆளுங்கட்சித் தலைவரும், அண்ணா நகர் (தெற்கு) பகுதிக் கழகச் செயலாளருமான ந.இராமலிங்கம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் இந்தச் சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் நம்முடைய இராமலிங்கம் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நடைபெற்று இருக்கும் இந்த திருமணத்தைப் பொருத்தவரையில், இது ஒரு சீர்திருத்த திருமணமாக - சுயமரியாதை உணர்வோடு நடைபெற்று இருக்கும் திருமணமாக நடந்தேறி இருக்கிறது. நான் வழக்கமாக இதுபோன்ற சீர்த்திருத்தத் திருமணங்களில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் வரலாற்றில் பதிவாகியிருக்கும் ஒரு செய்தியை தொடர்ந்து சொல்லி வருவது உண்டு. அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - புரிந்துகொள்ள வேண்டும் - மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அதை இங்கேயும் சொல்ல விரும்புகிறேன்.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

இதுபோன்ற சீர்த்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி - முறைப்படி செல்லுபடி ஆகும் என்கிற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தோம். ஆட்சியின் தலைவராக - தமிழக முதல்வராக நம்மை ஆளாக்கிய நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

பொறுப்பேற்ற முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராக நுழைந்து, சட்டமன்றத்தில் கொண்டு வந்த முதல் தீர்மானம் எந்தத் தீர்மானம் என்று கேட்டால், சீர்த்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்கிற தீர்மானம்.

எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி - முறைப்படி செல்லுபடி ஆகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்த்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்று இருக்கும் திருமணம், அதையும் தாண்டி தமிழ்த் திருமணம். இந்தத் தமிழுக்கு பெருமை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்கிற அங்கீகாரத்தை நமக்குப் பெற்றுத் தந்தார்கள்.

எனவே அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தத் தமிழ்மொழியில் சுயமரியாதை உணர்வோடு இந்தச் சீர்த்திருத்தத் திருமணம் நடந்தேறி இருக்கிறது. இந்த திருமண விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் நம்முடைய மணமக்களை வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

1965-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா அவர்கள் இருந்த காலத்தில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர்தான் இராமலிங்கம் அவர்கள். 19 வயதில் தன்னை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டு, ஒரு மன்றத்தின் செயலாளராக - அதற்குப் பின்னால் தொண்டர் படையில் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றியவர் நம்முடைய இராமலிங்கம் அவர்கள்.

1967-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இங்கிருக்கும் விருகம்பாக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காவது மாநில மாநாடு நடைபெற்ற நேரத்தில் தொண்டர் படையில் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்காக அண்ணாவின் கரத்தின் மூலமாகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர் நம்முடைய இராமலிங்கம் அவர்கள். அதே விருகம்பாக்கம் மாநாட்டில், நம்முடைய அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற வேட்பாளர் பட்டியலை அறிவித்த நேரத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு தொகுதியின் பெயரைச் சொல்லி அங்கே யார் யார் கழகத்தின் சார்பில் வேட்பாளராக நிற்கப் போகிறார்கள் என்று அறிவித்துக் கொண்டு வருகிறபோது, கடைசியாக சென்னையில் இருக்கும் தொகுதியின் வேட்பாளர் பெயர்களை எல்லாம் அறிவிக்கிறபோது சைதாப்பேட்டை என்று சொல்லுகிற போது அண்ணா நம்முடைய தலைவர் கலைஞர் பெயரை சொல்லவில்லை. ‘மிஸ்டர் 11 லட்சம்‘ என்று சொல்லி வேட்பாளரை அறிவித்தார்கள். இது வரலாறு.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், அந்தப் பொதுத் தேர்தலுக்காகத் தேர்தல் நிதி திரட்ட வேண்டும் என்று அண்ணா முடிவு செய்தபோது, அப்போது நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நிதி வேண்டும் என்று அண்ணாவிடத்தில் கலைஞர் கேட்டபோது, குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாயாவது இருந்தால்தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று அண்ணா அவர்கள் சொன்னபோது, தட்டாமல் அதை ஏற்றுக்கொண்டு, அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை நடத்தி ஊர் ஊராகச் சென்று, கிராமம் கிராமமாகச் சென்று, பட்டி தொட்டிகள்தோறும் சென்று, கொடியேற்றி பொதுக்கூட்டம் பேசி, நாடகம் நடத்தி, கொடியேற்று விழா என்று சொன்னால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட நிதி, பொதுக்கூட்டம் என்றால் அதற்கென்று குறிப்பிட்ட நிதி, நாடகத்திற்கு நிதி திரட்டி, யாருடைய வீட்டிற்காவது வந்து ஓய்வெடுக்க வேண்டும் என்றால், அங்கு சாப்பிட வேண்டும் என்றால், டீ சாப்பிட வேண்டும் என்றால், மதிய உணவு சாப்பிட வேண்டும் என்றால் என்று தனித் தனி நிதியை முடிவு செய்து ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம், ஐயாயிரம் என்று நிதி திரட்டி அண்ணா சொன்னபடி 10 லட்சம் அல்ல, 11 லட்சத்தை அண்ணாவிடத்தில் கொடுத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அண்ணா அவர்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறபோது ‘மிஸ்டர் 11 லட்சம்‘ என்று அறிவித்தார்கள்.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

எதற்காக சொல்கிறேன் என்று கேட்டீர்கள் என்றால், அந்த மிஸ்டர் 11 லட்சம் என்ற பட்டத்தை பெற்று, கலைஞர் வேட்பாளராக, சைதாப்பேட்டை தொகுதியில் நின்ற வேட்பாளருக்கு தேர்தல் வேலைகள் செய்தவர்களில் ஒருவர்தான் நம்முடைய இராமலிங்கம் அவர்கள். தேர்தல் வேலை மட்டும் அல்ல, பூத் ஏஜென்ட் ஆகவும் இருந்திருக்கிறார்.

அதற்குப் பிறகு இந்த அண்ணா நகர் தொகுதியாக மாறியதற்குப் பிறகு கலைஞர் வேட்பாளராக நின்றார். அப்போதும் நம்முடைய இராமலிங்கம் அவர்கள் பணியாற்றிய அந்தக் காட்சிகளை எல்லாம் நானே நேரடியாக பார்த்திருக்கிறேன். இங்கு அண்ணன் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னாரே, இடைத்தேர்தல் வந்தபோது இந்த தொகுதியில் சோ.மா.ராமச்சந்திரன் அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நின்றபோது, அப்போதும் எவ்வளவோ எதிர்ப்புகள், அப்போது ஆளுங்கட்சி அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.

பல்வேறு இடையூறுகள், பல்வேறு கலவரங்கள் அங்கங்கு நடந்து கொண்டிருக்கும். அப்போது துணிச்சலோடு எதிர்கொண்டு, சோ.மா. ராமச்சந்திரன் வெற்றிக்காக அவர் பணியாற்றிய விதத்தை எல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவன் நான், பெருமைப்பட்டவன் நான். இன்றைக்கு அதை நினைத்துப் பார்க்கிறேன். இப்படிப்பட்ட இராமலிங்கம் போன்ற தொண்டர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்தோடு இருக்கிறது. ஆட்சிக்கு வருவது பெரிதல்ல, ஆனால் அதையும் தாண்டிக் கொள்கையோடு நிற்கிறோம் பாருங்கள் அதுதான் மிகவும் முக்கியம்.

இன்றைக்கு ஒரு பாசிச ஆட்சியாக ஒன்றியத்தில் ஆண்டுகொண்டிருக்கும் மோடி ஆட்சியை எதிர்க்கின்ற துணிச்சல் தி.மு.க.விற்கு இருக்கிறது என்று சொன்னால் இராமலிங்கம் போன்ற தொண்டர்கள் இந்த இயக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் காரணத்தால்தான்.

எனவே அப்படிப்பட்ட இராமலிங்கம் அவர்கள், அவரே பேசுகிறபோது சொன்னார், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்கள் என்ன சொல்லுகிறாரோ, தலைமைக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்தவித மறுப்பேதும் சொல்லாமல் தன்னால் இந்த இயக்கத்திற்கு என்ன லாபம், அந்த உணர்வோடு பணியாற்றி இருக்கும் ஒரு செயல்வீரராக நம்முடைய இராமலிங்கம் அவர்கள் இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

தொடக்க காலத்தில் நான் சொன்னதுபோல, வட்டச் செயற்குழு உறுப்பினராக - பகுதி கழகப் பிரதிநிதியாக - மூன்று முறை ஒரு வட்டத்தின் செயலாளராக இருந்து பணியாற்றி, அதற்கு பின்னால் 2002-இல் பகுதி செயலாளராக, தொடர்ந்து இப்போது நான்காவது முறையாக இருக்கிறார். இந்தக் கட்சியில் வட்டச் செயலாளராக இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. உழைப்பவனைத்தான் கட்சி தேர்ந்தெடுக்கும், கட்சித் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் நான்காவது முறையாகவும் தெற்கு பகுதி கழகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரே குறிப்பிட்டார், 1996-ஆம் ஆண்டு நான் மேயர் போட்டிக்கு இந்தச் சென்னை மாநகராட்சியில் போட்டியிட்டபோது, எனக்காக - என்னுடைய வெற்றிக்காக - கழகத்தின் வெற்றிக்காகப் பணியாற்றிய வீரர் நம்முடைய இராமலிங்கம் அவர்கள். அவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினராக 1996 முதல் 2001 வரையில் நாம் மேயராக இருந்தபோது அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியிருக்கிறார்.

அதற்கு பின்னால் 2006-இல் அவர் மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுங்கட்சியின் தலைவராக இருந்து மாநகராட்சி மன்றத்தில் வழிநடத்தும் மேயருக்குத் துணைநிற்கும் வகையில் தன்னுடைய கடமையை நிறைவேற்றி, இப்போதும், அதனால்தான் சிற்றரசு அவர்கள் மாநகராட்சியை நாம் கைப்பற்றியபோது, அப்போது மாநகராட்சி மன்றத்தில் கட்சியின் நிர்வாகிகள் யார் யாரைத் தலைவராக - பொருளாளராக - துணைத் தலைவராக - கொறடாவாக நியமிக்கலாம் என்று கேட்ட நேரத்தில், நான் பட்டென்று, இராமலிங்கம் அவர்கள் பெயரைத்தான் முதன் முதலில் சொன்னேன். அதற்குக் காரணம் அவருடைய பணிகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன். அதனால்தான் மனதில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லி இன்றைக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

எனவே அப்படிப்பட்ட ஒரு சிறந்த செயல்வீரரின் இல்லத்தில் நடைபெறும் இந்த திருமணம், இன்றைக்கு கூட உண்ணாவிரத அறப்போராட்டம் ஒன்று தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பலபேர் அங்குப் போக முடியவில்லை என்ற வருத்தத்தோடு இருப்பதையும் நான் உணராமல் இல்லை. ஆனால் அழைப்பிதழில் போடப்பட்ட குறிப்பிட்ட சிலர் இங்கு வரவில்லை அதுவும் உங்களுக்கு தெரியும். எனவே எதுவாக இருந்தாலும் அதுவும் நமக்கு முக்கியமான பணி என்ற நிலையில்தான் அந்தத் தோழர்கள் சென்றிருக்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

எனவே ஆளுங்கட்சியில் இருக்கும் நேரத்தில் இந்த அறப்போரை நடத்த வேண்டியது அவசியம் நமக்கு ஏன் ஏற்பட்டது, அதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் இரண்டு பேரும் மருத்துவர்கள். இவர்களெல்லாம் நீட் எழுதி பாஸ் செய்து மருத்துவர்களாக வந்து உட்காரவில்லை. அப்போதெல்லாம் நீட் கிடையாது. அதனால் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறும் மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவராக வரும் வாய்ப்பு இருந்தது. இப்போது நீட் எழுதினால்தான், அதிலிருந்து தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராக வர முடியும் என்று நிலை இன்றைக்கு வந்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் "நாம் ஆட்சிக்கு வருகிறபோது அது நிச்சயமாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுகிற முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபடுவோம். அதை எதிர்ப்போம். அதை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவோம்" என்று நாம் தெளிவாக எடுத்துச் சொன்னோம். அதற்குப் பிறகு வெற்றி பெற்று - ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு சட்டமன்றத்தில், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் நீட் விலக்கு வேண்டுகிறோம் என்று சொல்லி தீர்மானத்தை கொண்டு வருகிறோம். எல்லா கட்சிகளும் ஆதரித்தது.

இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.கூட நாம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து, அனுப்பி வைத்தோம். கவர்னரிடத்தில் இருந்தது. அதை அனுப்பாமல் அப்படியே ராஜ்பவனில் வைத்திருந்தார். அதற்கு பிறகு அதை கடுமையாக எதிர்த்தோம். அதை வலியுறுத்தினோம், வற்புறுத்தினோம். அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக அதை மீண்டும் சட்டமன்றத்திற்கு query போட்டு அனுப்புகிறார் இப்போது இருக்கும் கவர்னர்.

எனவே அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லி மீண்டும் அவருக்கு அனுப்பி வைக்கிறோம். இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டதற்கு பிறகு, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது அது ஜனாதிபதியிடம் இருக்கிறது. எனவே அதன்மீது முடிவு செய்ய வேண்டியது ஜனாதிபதிதான். ஒன்றிய அரசு அறிவுரையைப் பெற்று, ஆலோசனை பெற்ற பிறகு, ஜனாதிபதிதான் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். அளுநருக்கு எந்த பவரும் இல்லை. நாம் அனுப்பியதை அனுப்பி வைக்கும் வேலைதான் அவருக்கு.

“நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.கழகம் ஓயாது; உறங்காது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

ஆனால் திடீரென்று சில நாட்களுக்கு முன்பு, நீட்டில் தேர்வு பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து உட்கார வைத்து ஒரு கலந்துரையால் நடத்தி இருக்கிறார். அப்போது நடத்துகிற போது சேலம் உருக்காலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு தோழர், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடைய மகள் அதில் தேர்வு பெற்று உள்ளார்.

ஒன்றிய அரசின் ஊழியராக இருப்பவர், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை கேட்கிறபோது வெளிப்படையாக தைரியமாக, துணிச்சலோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல் "என்னுடைய மகள் பாஸ் பண்ணி விட்டாள், எனக்கு வசதி இருந்தது அவள் பாஸ் செய்து விட்டாள். ஆனால் பல மாணவர்கள் அந்த நேற்று தேர்வில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நிலை எல்லாம் என்ன ஆகும். தயவு செய்து இந்த நீட்டிற்கு விலக்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கவர்னரிடத்தில் கேட்டபோது, கொதித்து எழுந்துக் கோபம் அடைந்தவர் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? "அது எல்லாம் முடியாது." அவருக்கு பவரே கிடையாது. ஆனால் இருந்தாலும் அவர் சொல்கிறார், "நான் அனுப்பி வைத்துவிட்டேன்.

இருந்தாலும், என்னிடத்தில் அது இருந்தால், நான் கொடுக்க மாட்டேன் - அதை அனுமதிக்க மாட்டேன்" என்று வெளிப்படையாகச் சொன்னார் என்றால், இதை எல்லாம் கண்டித்துதான் அந்த நீட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளாக இருக்கும் இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவர் அணி இந்த மூன்று அணிகளும் சேர்ந்து தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த அறப்போராட்டம் தொடரும் - நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது - உறங்காது என்ற அந்த உறுதியை எடுத்துச் சொல்லி, அதே உணர்வோடு உங்களுடைய உணர்வும் இருக்கும் என்று கருதி, உங்களை எல்லாம் விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டு, இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கம். தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோமா, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடலாக இந்த அரசு பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த திராவிட மாடல அரசிற்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். எப்படி 2021-இல் திமுக ஆட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் ஒரு நல்ல நிலையை - ஒரு விடியலை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்களோ, அதே போல் 2024 நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவிற்கு ஒரு விடியலை நீங்கள் பெற்றுத் தர வேண்டும் என இந்த வேண்டுகோளை மாத்திரம் எடுத்து வைத்து, மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும்; புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும் வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் நீங்கள் வாழ வேண்டும் வாழ வேண்டும் வாழ்த்தி நம்முடைய இராமலிங்கம் போன்ற தொண்டர்களும் - இயக்க தோழர்களும் இந்த இயக்கத்தில் இருக்கிறவரையில், இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, வாழ்க மணமக்கள்! வாழ்க மணமக்கள்! என்று கூறி விடைபெறுகிறேன்.” இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories