தமிழ்நாடு

செந்தில்பாலாஜி வழக்கின் இறுதி விசாரணை.. மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் அதிரடி வாதம்: ஐகோர்டில் நடந்தது என்ன?

ஆரம்பம் முதல் அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளதாகவும் கூறிய தனது வாதத்தை நிறைவு செய்தார் வழக்கறிஞர் கபில் சிபல் .

செந்தில்பாலாஜி வழக்கின் இறுதி விசாரணை.. மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் அதிரடி வாதம்: ஐகோர்டில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும் எனவும் வாதிட்டார்.

கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம் எனவும் விளக்கினார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும், ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் எனவும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதுசம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தவறானது எனவும் தெரிவித்தார். காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட கபில் சிபல், காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில், காவலில் எடுக்காததால், முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை கோர முடியாது என்றார்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது என்றார்.

நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது என நீதிபதி நிஷாபானுவும், தங்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரி அமலாக்க துறை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றார்.

ஆரம்பம் முதல் அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளதாகவும் கூறிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது எனக் கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளனர். கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம் என்றார்.

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை சரியானதல்ல என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளன எனவும், இது முறைகேடு என வாதிட்டார்.

ஜூன் 13ம் தேதி சோதனை துவங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கப் பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர் என்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது என்றார்.

அமலாக்க துறை காவலில் எடுத்திருந்தால் தான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் விளக்கமளித்தார்.

காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை என இளங்கோ குறிப்பிட்டார். மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தார், நீதிபதி கார்த்திகேயன்

banner

Related Stories

Related Stories