தமிழ்நாடு

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்த திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு நன்மைகளை உருவாக்கி தரக்கூடிய பாலமாக செயல்பட்டு வருவதாக 'செங்கை சிவம்மேம்பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஸ்டிபன்சன் சாலையில் ரூ.66 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ’செங்கை சிவம்’ உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவின்போது முதலமைச்சர் மேடையில் பேசியதாவது : -

"ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே இருந்த பழுதடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, ஓர் புதிய பாலத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவெடுத்து அதையும் குறித்த காலத்தில் கட்டிமுடித்து அந்த பாலத்தினுடைய திறப்பு விழா நிகழ்ச்சி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு கொளத்தூரையும் - வில்லிவாக்கத்தையும், வில்லிவாக்கத்தையும் - அண்ணா நகரையும் இணைக்கக்கூடிய ஒரு மேம்பாலத்தை நான் திறந்து வைத்தேன். அப்படி திறந்து வைத்த நேரத்தில் நம்முடைய மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களும், மாண்புமிகு நகராட்சித் நிர்வாகத் துறையினுடைய அமைச்சர் திரு.நேரு அவர்களும், ஸ்டிபன்சன் சாலையிலே புதிதாக கட்டப்பட்டு இருக்கக்கூடிய பாலம் தயாராக இருக்கிறது, நீங்கள் உடனடியாக தேதி தந்தால் அதை திறந்து விடலாம் என்று என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். நானும் உடனடியாக அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.

அப்போது அவர்கள் அந்தப் பாலத்திற்கு யாருடைய பெயரை சூட்டலாம் என்று ஒரு வினாவை என்னிடத்தில் தொடுத்தார்கள். நான் உடனடியாக சொன்னேன். இந்த பெரம்பூர் பகுதியில் அன்றைக்கு திரு.வி.க. நகர் பகுதி, பெரம்பூர் பகுதி என்று ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்த அந்த நேரத்தில், இந்த பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இந்த தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி மறைந்தாலும் நம்முடைய நெஞ்சமெல்லாம் இன்றைக்கும் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய செங்கம் சிவம் அவர்களுடைய பெயரை சூட்டலாம் என்று நான் அப்போது சொன்னேன். உடனடியாக அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். இந்த பாலத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று நான் சொன்னேன். அதைவிட செங்கம் சிவம் அவருடைய பெயரால் அமைந்திருக்கக் கூடிய பாலத்திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே நான் சொன்னபடி அந்த பாலத்தை திறந்து வைத்தபோது, அந்த பாலத்திற்கு தியாக மறவன் சிட்டிபாபு பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல்வேறு பாலங்களுக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த நேரத்தில் இதே சென்னை மாநகரத்தில் பல்வேறு பாலங்கள் திறந்து வைக்கப்பட்ட போது, பல்வேறு மேம்பாலங்களாக இருந்தாலும், சுரங்கப்பாதைகளாக இருந்தாலும், கட்டிடங்களாக இருந்தாலும், அந்த கட்டிடங்களுக்கு, அந்த பாலங்களுக்கு, சுரங்கப்பாதைகளுக்கெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த இயக்கத்திற்காக, குறிப்பாக திராவிட இயக்கத்திற்காக உழைத்து பல்வேறு தியாகங்களை செய்திருக்கக்கூடிய இந்தத் தியாகச் செம்மல்கள் பெயர்களையெல்லாம் சூட்டியிருக்கிறார்கள். அந்த நினைவுகளை எல்லாம் மனதில் வைத்துதான் இந்த பெரம்பூர் தொகுதியில் கழகம் வளர்க்க, கழகம் வளர, இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு அரும்பணியாற்றிய, அந்த பணிகள் எல்லாம் இன்றைக்கும் என்னுடைய நினைவில் இருக்கிறது. 1989-ல் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன்.

1996-ல் சட்டமன்ற உறுப்பினராக செங்கை சிவம் அவர்கள் சபையிலிருந்து பணியாற்றியபோது நானும் சபையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவன். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இந்த தொகுதியினுடைய வளர்ச்சிக்கு இந்த தொகுதியினுடைய முன்னேற்றத்திற்கு, இந்த தொகுதி மக்களுடைய தேவைகளுக்கு, எண்ணங்களுக்கு ஏற்ற வகையில், மிக மிக சிறப்பாக பணியாற்றியவர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடையாளமாக இருந்து பணியாற்றியவர் செங்கை சிவம் அவர்கள். அவருடைய பெயரில் இந்த பாலம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் சென்னையை வலம் வந்து பார்த்தால், நீங்கள் பார்க்கக்கூடிய பெரும்பாலான பாலங்கள் திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில், கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவாக்கப்பட்டவை!

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அண்ணா சாலையில் ஒரு காலத்தில் ஜெமினி சர்க்கில் என்று சொல்லக்கூடிய ஒரு இடம். அது இன்றைக்கு அண்ணா மேம்பாலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் மேம்பாலத்தை அந்த இடத்தில் உருவாக்கி, அண்ணா மேம்பாலம் என்று அதற்கு பெயர் சூட்டினார்கள். இன்றோடு அந்த பாலம் 50 ஆண்டு கால வரலாற்றை பெற்றிருக்கிறது.

அதேபோல, அண்ணா சாலையிலிருந்து, சைதாப்பேட்டையை கடந்து மீனம்பாக்கத்திற்கு போகின்றபோது இடையில் கத்திபாரா பாலம். அந்த பாலமும் நம்முடைய கழக ஆட்சி காலத்தில்தான் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கோயம்பேடு பாலமாக இருந்தாலும் சரி, செம்மொழிப் பூங்காவாக இருந்தாலும் சரி, ஏன் வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும் சரி, நெம்மேலியில் அமைந்திருக்கக்கூடிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாக இருந்தாலும் சரி, டைடல் பார்க்காக இருந்தாலும் சரி - இன்றைக்கு ஒரு பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் பெயரில் அமைந்திருக்கக்கூடிய மருத்துவமனை தலைமைச் செயலகம் அமையவேண்டுமென்று தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்து, பார்த்து கட்டினார்கள். அது அரசியல் சூழ்நிலையின் காரணமாக பெயர் மாற்றப்பட்டது. அதற்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. இது அரசு நிகழ்ச்சி.

மெட்ரோ ரயில் திட்டம், நம்முடைய ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டு இன்றைக்கு வெளிநாடுகளுக்கு போட்டி போடக்கூடிய அளவுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

>> கோயம்பேடு காய்கறி அங்காடி

>> கோயம்பேடு பேருந்து நிலையம்

>> அடையாறு ஐ.டி. காரிடார்

>> நாமக்கல் கவிஞர் மாளிகை

>> பாடியில் அமைந்திருக்கக்கூடிய மேம்பாலம்

>> மீனம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பாலம்

>> மூலக்கடையில் இருக்கக்கூடிய பாலம்

>> மேற்கு அண்ணாநகர் பாலம்

>> வியாசர்பாடி பாலம்

>> தொல்காப்பியப் பூங்கா பாலம்

>> தென்சென்னை முழுக்க 1400 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர்வடிகால் திட்டங்கள்

- இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னையின் தேவையை தீர்த்து வைத்தவர் இன்றைக்கு நூற்றாண்டு விழா காணக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கட்டிய அண்ணா மேம்பாலம்தான் இன்றைக்கு அரை நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வாழ்ந்து நிறைந்ததற்குப் பிறகும் பயன்தரத்தக்க எத்தனையோ நல்ல பல திட்டங்களை நமக்காக உருவாக்கிக் கொடுத்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய வழித்தடத்தில் தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

நம்முடைய சென்னையின் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று சொன்னால், மாநகரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வெள்ளம் வருகிற போதெல்லாம் மக்கள் எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்றவகையில் அந்த வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக 3184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைக்கு அந்தப் பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் அதனுடைய பயனாக, சென்ற ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்திலிருந்து எப்படி காப்பாற்றப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். முன்பெல்லாம், மழை பெய்தால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும், வீட்டிற்குள் தண்ணீர் இருக்கும். மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று பத்திரப்படுத்துவோம். அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவோம். இது ஒவ்வொரு மழைக்காலத்தில் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நிலையை மாற்றிய ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த மழைநீர் வடிகால் பணிகள் இன்றைக்கு வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மீதமிருக்கிறது. அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், அதையும் தாண்டி மெட்ரோ திட்டம் வேறு செயல்படுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அந்த சாலைகளை மேற்கொள்ளப்படக்கூடிய பணிகள் எல்லாம் விரைவில் சரிசெய்யவேண்டும், அதை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

அதேபோல, சென்னை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பூங்காக்களை அழகுபடுத்திட, அதை மேம்படுத்திட, கடந்த இரண்டு ஆண்டுகளில் 124 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மூலமாக மக்கள் குடும்பத்தோடு சென்று பொழுதுபோக்க பொது இடங்களாக நமது பூங்காக்கள் இன்றைக்கு மாற்றம் பெற்று வருகின்றன.

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இதன் தொடர்ச்சியாகதான் ஸ்டீபன்சன் சாலையில் இந்த உயர்மட்டப் பாலம் செங்கம் சிவம் பெயரால் இன்றைய நாள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு இது மிக, மிக அவசியமான பாலம்! நீங்கள் எல்லாம் பயன்படுத்தக்கூடிய உங்களுக்கு தேவையான பாலமாக இது அமைந்திருக்கிறது.

திரு.வி.க.நகர் மண்டலத்தில், புளியந்தோப்பு பகுதியையும் பெரம்பூர் பகுதியையும் இணைக்கும் பாலமாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே இருந்த பாலம் மிகமிக பழுதடைந்து இருந்த காரணத்தால் அதனை இடித்து விட்டுப் புதிய பாலத்தை இங்கே கட்டி இருக்கிறோம்.

ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 66 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 52 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலமும் - 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலத்துக்கான சாலை மற்றும் அணுகு சாலை மற்றும் பூங்காவும் - 6.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்தச் சாலையில் தேங்கும் மழை நீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் - புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர் அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலமாக பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம், வேப்பேரி பகுதி மக்கள் பயனடைய இருக்கிறார்கள். இந்தப் பாலத்தில் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் வாகனங்கள் செல்லும் என்று அதிகாரிகள் கணக்கெடுத்திருக்கிறார்கள். எனவே, இந்த வட்டாரத்து மக்களுக்குப் பயனுள்ள பாலமாக அமையப் போகிறது ஸ்டீபன்சன் சாலை பாலம்.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், நானும் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தவன்தான். உங்கள் அன்போடு, ஆதரவோடு இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் நான். அப்போதுதான் முதன்முதலில் சென்னை மாநகராட்சியின் சார்பில், பாலங்கள் கட்டக்கூடிய பணிகளை தொடங்கினோம். எப்போதுமே அரசாங்கத்தின் சார்பில்தான் பாலங்கள் கட்டுவார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை என்று அரசின் பல்வேறு துறைகளின் சார்பில்தான் கட்டுவார்கள், மாநகராட்சின் சார்பில் பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது. முதன்முதலில் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேயராக பொறுப்பேற்றதற்கு பிறகு அதற்கான முயற்சியில் இறங்கினேன். அதில் பத்து பாலங்களை கட்ட முடிவெடுத்து, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தோம். அதில் 1 பாலம் ஏன் காலம் கடந்தது என்றால், அதில் technical problem ஒன்று வந்தது. இந்த பெரம்பூர் மேம்பாலம். அதனால் கொஞ்சம் காலம் கடந்தது. ஆனால் 9 மேம்பாலங்களை குறித்த காலத்திற்கு முன்பே இவ்வளவு கோடி ரூபாயில் கட்டவேண்டும் என்று சொல்லி ஒரு மதிப்பீட்டுத் தொகை ஒன்று போடுவார்கள்.

“சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர்..” - பட்டியலிட்டு சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

எப்போதும் அரசாங்கத்தின் சார்பில், மாநகராட்சியின் சார்பில் அல்லது உள்ளாட்சித்துறையின் சார்பில், ஏதாவது ஒரு கட்டிடமோ ஒரு பணியை செய்வதற்கு முதலில் மதிப்பீடு செய்து அதற்கு ஒரு தொகையை ஒதுக்குவார்கள். ஆனால் அதை முடிக்கின்ற நேரத்தில் கொஞ்சம் தொகை அதிகமாகும். விலைவாசி சூழ்நிலை கருதி, காலமும் கடந்துவிடுகின்ற காரணத்தால் கொஞ்சம் மதிப்பீடு அதிகமாகிவிடுகிறது. நான் பெருமையோடு சொல்கிறேன். 9 மேம்பாலங்கள் நாம் கட்டியபோது மதிப்பீடு தொகையை விட குறைந்த மதிப்பிட்டில், செலவு செய்து இதுவரை சென்னை மாநகராட்சியில் இல்லாத ஒரு மிகப்பெரிய வரலாற்றை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இருந்தபோது அந்த காரியத்தை நான் செய்தேன். இது அனைவருக்கும் தெரியும்.

பாலங்களாக இருந்தாலும் சரி, சாலைகளாக இருந்தாலும் சரி, மழைநீர் கால்வாய்களாக இருந்தாலும் சரி, கழிவுநீர் கால்வாய்களாக இருந்தாலும், அனைத்தையும் இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, நாளைய தேவைகளையும் கருதி நாளைய மக்கள் தொகையையும் கணக்கிட்டு அமைத்துத் தருவதை நோக்கமாக இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது உட்கட்டமைப்பு. அந்த உட்கட்டமைப்பை நாம் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். பாலத் திறப்பு விழா நிகழ்ச்சி அதில் நான் கலந்து கொள்கிற நேரத்தில் எனக்கு ஒன்று பசுமையாக நினைவில் இருப்பது எப்போதும் மறக்கமாட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய மனதில் இருக்கிறது. என்னவென்று கேட்டால், நான் சிறு குழந்தையாக இருந்தபோது, முதன்முதலாக கோடம்பாக்கம் பகுதியில் குடியிருந்தோம்.

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலில் இருந்தாலும், திரைப்படத்திற்காக வசனம் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது பெரும்பாலும் சினிமா ஸ்டுடியோ எல்லாம் கோடம்பாக்கப் பகுதியில்தான் அதிகமாக இருக்கும். இப்போது இருக்கக்கூடிய கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. அதில் ரெயில்வே கேட் இருக்கும். அதில் பெரிய பெரிய நடிகர்களாக இருந்தாலும் சரி, இயக்குநர்களாக இருந்தாலும் சரி, தயாரிப்பாளர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்கள் யாராக இருந்தாலும் அந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் போகவேண்டும். அரை மணி நேரத்திற்கு, முக்கால் மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் வந்துகொண்டே இருக்கும். அதனால் ரயில்வே கேட்டை மூடுவார்கள். சில நேரங்களில் 1 மணி நேரம், 2, 3 மணி நேரங்கள் காக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தலைவர் கலைஞர் அவர்களும் பல முறை அந்த வழியாக போயிருக்கிறார். பலமுறை காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

நான் குழந்தையாக இருக்கும்போது வீட்டில் safety pin அதாவது hook என்று சொல்வார்கள். அது திறந்த நிலையில் கீழே கிடந்தது. கைக்குழந்தையாக இருந்தபோது தரையில் தவழ்ந்து கொண்டிருந்தபோது நான் அந்த hook-ஐ முழுங்கிவிட்டேன். இதை எப்படியாவது எடுக்கவேண்டும் என்று ஏதேதோ முயற்சி செய்கிறார்கள். வீட்டில் வாழைப்பழத்தை கொடுக்கிறார்கள், கவிழ்த்துப் பார்க்கிறார்கள், ஒன்றும் முடியவில்லை. மருத்துவரிடம் போகவேண்டும் என்று முடிவு செய்து அதற்குப் பிறகு காரில் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். கோடம்பாக்கம் கேட் அருகில் நின்றுவிட்டோம். அதற்குப் பிறகு கேட் திறந்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்று, மருத்துவம் எல்லாம் செய்தபிறகு அந்த hook-ஐ எடுத்தார்கள். ஆனால் திறந்த நிலையில் தான் அந்த hook வந்தது. அதனால் தலைவர் கலைஞர் அவர்கள் எஃக்கையே விழுங்கிவிட்டு உயிரோடு இருக்கிறான். அதனால் எஃகு உள்ளம் கொண்ட ஸ்டாலின் பெயரை தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு சூட்ட வேண்டும் என்று அப்போது முடிவு செய்தார்கள். நெஞ்சுக்கு நீதியில் தலைவர் கலைஞர் இதையெல்லாம் எழுதியிருப்பார்.

எதற்காக நான் சொல்கிறேன் என்றால், அப்போதே தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்தாராம். hook-ஐ விழுங்கிய ஒரு குழந்தையைக் கூட கொண்டு போக முடியவில்லையே, எத்தனை பேர் அவதிப்படுவார்கள். ஆகவே, இந்த இடத்தில் பாலம் கட்டினால் என்ன என்று அப்போதே முடிவு செய்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அதற்கு பிறகுதான் அந்த இடத்தில் பாலம் உருவானது. அங்குமட்டுமில்லை, இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பல இடங்களில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பல இடங்களில் எங்கெங்கு தேவைப்படுமோ அந்த இடங்களில் எல்லாம் பாலங்கள் உருவாகியிருக்கிறது. நம்முடைய சேகர் பாபு தொடக்கத்தில் சொன்னது போல, உங்களுக்கு இந்த ஆட்சி ஒரு பாலமாக நன்மைகளை உருவாக்கித் தரக்கூடிய பாலமாக இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும்.

எந்த உணர்வோடு, இந்த வட்டாரத்தில் செங்கை சிவம் அவர்கள் பணியாற்றியிருக்கிறாரோ, கட்சிக்காகவும், பொது மக்களுக்காகவும், இந்த சமுதாயத்திற்காகவும் அவர் தொண்டாற்றியிருக்கிறாரோ, அந்த உணர்வை நீங்களும் மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் கடமையை நிறைவேற்ற இந்த ஆட்சிக்கு என்றைக்கும் துணை நிற்கவேண்டும்." என்றார்.

banner

Related Stories

Related Stories