தமிழ்நாடு

”சாதியால் மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது” : முதலமைச்சர் ஆவேச பேச்சு!

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”சாதியால் மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது” : முதலமைச்சர் ஆவேச பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவியர்களுக்கு “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை வழங்கி ஆற்றிய உரை:-

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை, நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” உங்களால் மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடைய அன்போடு, ஆதரவோடு முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டைப் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா, எடுத்துக் கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் மூன்று பேர்.

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழ் மக்களை - திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரையில் ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமுதாயமாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.

”சாதியால் மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது” : முதலமைச்சர் ஆவேச பேச்சு!

சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சி அமைத்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிக் காட்டக்கூடிய சாதனைகளை, திட்டங்களை, அதன் மூலமாக ஆட்சி என்பதற்கான இலக்கணம் என்ன என்பதை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இவர்கள் மூன்று பேரையும் மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்களோடு அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் உள்ளிட்டவர்களும் என் மனதில் தோன்றினார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் தானாக எனக்கு வந்து விட்டது.

மக்களுக்காகப் பணியாற்றுவது என்பது எனக்குப் புதிதல்ல. பிறந்து வளர்ந்ததே பொதுவாழ்க்கையுடைய அத்தனை தன்மைகளையும் எதிர்கொண்ட கோபாலபுரம் வீட்டில்தான்! சிறுவனாக, இளைஞனாக வளர்ந்தபோதே திராவிட இயக்கத்துக்கு என்னை ஒப்படைத்துக் கொண்டு, தலைவர் கலைஞருடைய கட்டளையை மீறாமல் பணியாற்றி வந்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன், பல சோதனைகளை நான் சந்தித்திருக்கிறேன்.

"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. "இதையும் தாங்கிப் பழகு" என்று எனக்கு கற்றுக் கொடுத்தார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

”சாதியால் மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது” : முதலமைச்சர் ஆவேச பேச்சு!

தன்னைத் தாக்குபவர்களையும் தாங்கி நிற்கிற நிலம் போன்றது நம்முடைய திராவிட இயக்கம். அதனால்தான், சட்டமன்றத் தேர்தலில் நான் வெற்றிபெற்று, அந்த வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய ஓய்விடத்திற்குச் சென்று அங்கே அதைக் காணிக்கையாக்கி, அப்போது நான் சொன்னேன், "எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்படக்கூடிய அரசாக எங்கள் அரசு இருக்கும்" என்று பத்திரிகையாளர்களிடம் அன்றைக்கு நான் சொன்னேன்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதலமைச்சர். இது தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றிப் பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன்.

அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் பேசுகிற வார்த்தைகளில் கவனிக்கிறேன். நீங்கள் காட்டுகின்ற அன்பில் கரைகிறேன். நீங்கள் என்னை நம்பி ஒப்படைத்த பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய அரசு நிறைவேற்றிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கே பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையும் உதட்டிலிருந்து வரவில்லை, அவர்களுடைய இதயத்தில் இருந்து வருகிறது.

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மகிழ்ச்சியும் உங்களுடைய புன்னகையுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது திராவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது! தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும்! மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையை செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளளார்.

banner

Related Stories

Related Stories