தமிழ்நாடு

கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞரை அடித்துக் கொன்ற ஊழியர்.. நள்ளிரவில் நடந்த சோகம் - 3 பேர் கைது!

கடையில் திருட வந்ததாக நினைத்து வாலிபரை கடை ஊழியர் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞரை அடித்துக் கொன்ற ஊழியர்.. நள்ளிரவில் நடந்த சோகம் - 3 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மெரினா பொது பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் படுகாயங்களுடன் கிடப்பதாக அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று வாலிபர்களையும் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்த போது ஒரு வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் போலிஸார் கொலை வழக்குபதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் இறந்த நபர் ஆவடியை சேர்ந்த விக்னேஷ்(20) என்பதும் படுகாயமடைந்த நபர்கள் அரவிந்தன் (22) மற்றும் சஞ்சய் (18) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இன்று சஞ்சய் என்பவருக்கு பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட நேற்றிரவு அவரது நண்பர்களான விக்னேஷ், அரவிந்தன் உட்பட பலர் இருசக்கர வாகனத்தில் மெரினா பொதுப்பணித்துறை அருகே சென்றுள்ளனர்.

அப்போது சர்வீஸ் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று சஞ்சயின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடிவிட்டு பின்னர் 2.30மணியளவில் வீட்டிற்கு கிளம்புவதற்காக வந்துள்ளனர். அப்போது சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ள கடையின் அருகே விக்னேஷ் வைத்த ஹெல்மெட்டை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட கடை ஊழியர்கள் திருட வந்திருப்பதாக நினைத்து, அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் கடை ஊழியர்கள் அங்கிருந்த கட்டையால் விக்னேஷ், சஞ்சய் மற்றும் அரவிந்தன் ஆகியோரை தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதில் மூவரும் படுகாயமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்து அண்ணாசதுக்கம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories