தமிழ்நாடு

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக, அந்த மாநில அரசு தொடர்ந்த வழக்கில், “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘ஒரு மாநிலத்தின் அமைதியைப் பற்றி, அதன் பிரச்னைகளைப் பற்றி, அந்த மாநிலத்தின் தனித்துவமான உரிமைகளைப் பற்றி, மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு சர்வாதிகார மனநிலைகொண்ட ஆளுநரை ஏன் நாம் சகித்துக்கொள்ள வேண்டும்?’ என பிரபல தமிழ் பத்திரிக்கையான ஜூனியர் விகடன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ஏற்ற நாளிலிருந்தே, சர்ச்சைக் கருத்துகளைப் பேசி, வம்பு வளர்ப்பதை ஒரு முக்கியப் பணியாகவே செய்துவருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதில், அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. சனாதனம், மொழி, மதம், வரலாறு, மாநில உரிமைகள், கலாசாரம் குறித்தெல்லாம் அவர் இதுவரை பேசிய கன்னா பின்னா கருத்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களையும், எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் தமிழகத்தில் சந்தித்துவருகிறார்.

கண்டன ஆர்ப்பாட்டம் முதல் சட்டமன்றத்தில் அவரின் உரையின் சில பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது வரை சென்றது அவர்மீதான எதிர்ப்பு. ஆனால், கொஞ்சமும் அதை உணராமல், மேலும் மேலும் தான்தோன்றித்தனமாகப் பேசி, வீண் சர்ச்சைகளை வளர்த்துக்கொண்டேயிருக்கிறார் ரவி.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

“சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தால், அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம். இதற்கு மேல் எப்படி நாகரிகமாகச் சொல்வது?” என்று ரவி பேசியிருப்பது, அதிகாரமும் அகங்காரமும் நிறைந்த விஷ வார்த்தைகள்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்படாததால், 44 உயிர்கள் பலியாகியிருக்கும் தருணத்தில், ரவியின் இந்த வாய்க்கொழுப்புப் பேச்சு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. “ஸ்டெர்லைட் போராட்டமே வெளிநாட்டு சதிதான். மக்களைத் தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர்” என 13 பேரைப் பலிகொண்ட அந்த மக்கள் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தியிருக்கிறார். ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நிலையில், ஆளுநர் ரவியின் இந்தச் சர்ச்சைப் பேச்சு, தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடும் கூட்டம், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ராஜ் பவனில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், “மத்தியில் ஒரு கட்சியும், மாநிலத்தில் ஒரு கட்சியும் ஆட்சியில் இருக்கின்றன. சில விவகாரங்களில், அரசியல்ரீதியாக நீங்கள் எதிர்க்கப்படும்போது, எப்படி உணர்வீர்கள்?” என்று மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்குத்தான், இப்படியான பதில்களைச் சொல்லி பற்றவைத்திருக்கிறார் ரவி.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

“சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அசுர பலத்துடன் இருந்தால், அதைவைத்து அவர்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். அது சட்டம்கூட அல்ல... வெறும் மசோதா... அது அரசியலமைப்புச் சட்ட எல்லையைத் தாண்டக் கூடாது. அப்படி எல்லை தாண்டியிருந்தால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்புவதுதான், ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான கடமை.

சட்டப்பேரவை என்பது, நம்பர் ஒன் கவர்னர்... கவர்னர்... (அழுத்திச் சொல்கிறார்). நம்பர் டூ - சட்டசபை. அதாவது, கவர்னர் சட்டம் இயற்றும் அவையின் ஓர் அங்கம். எனவே, சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றினால் மட்டும் அது சட்டம் ஆகிவிடாது. ஏனென்றால், சட்டசபையும் ஓர்அங்கம் மட்டும்தான். அதனால்தான் ஆளுநருக்கு மசோதா அனுப்பிவைக்கப்படுகிறது. அப்படி அனுப்பிவைக்கப்படும்போது, ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்று, ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது, நிறுத்திவைப்பது. நிறுத்திவைப்பதற்கு (Holding), `நான் அதை நிலுவையில் வைத்திருக்கிறேன்’ என்பது மட்டும் பொருள் கிடையாது. `அது நிராகரிக்கப்பட்டுவிட்டது’ (The bill is dead!) என்பதுதான் அர்த்தம். (சிரிக்கிறார்). அதாவது, மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதை நாகரிகமாகச் சொல்லும் முறை எனலாம். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வும் இதைத்தான் சொல்கிறது” என்று அவர் பேசிய வார்த்தைகள் மட்டுமல்ல, அப்போது அவரது தொனியும் உடல்மொழியும்கூட சட்டமன்றத்துக்கான மாண்பை, மாநில உரிமைகளை அலட்சியமாக நகையாடும் விதமாகவே இருந்தன.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மசோதாமீது தனக்கிருந்த சந்தேகங்களை யெல்லாம் ஆளுநர் ரவி எழுப்பியபோது, அவற்றுக்குரிய பதில்களை தி.மு.க அரசு உடனே அளித்தது. அப்படியிருந்தும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த ரவி, ஆன்லைன் சூதாட்ட நிறுவன நிர்வாகிகளை அழைத்துப் பேசினார்.

இது கடும் கொந்தளிப்பை மக்களிடையே ஏற்படுத்திய சூழலில்தான், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கடந்த மார்ச் மாதம் திருப்பியனுப்பினார். அப்படித் திருப்பி அனுப்பியபோது, “இந்தச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை” எனக் கூறியிருந்தார். ஆனால், அவரின் கருத்தை மத்திய அரசே உடைத்தது. “ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை மாநில அரசுகளே இயற்றிக்கொள்ளலாம். அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு” என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மக்களவையில் கூறினார்.

ஆனால், அதை ஆளுநர் ஏற்றதாகத் தெரியவில்லை. ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் 44 உயிர்கள் பலியாகியிருக்கும் நிலையிலும், மசோதாவை ஏற்க மறுக்கும் ரவியின் செயல்பாடுகளிலும் கருத்துகளிலும் அவரின் ‘ஈகோ’ மனநிலைதான் தெரிகிறது.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

“வன்முறையைத் தூண்டி... அமைதியைக் குலைக்க ஆசைப்படுகிறார் ரவி!”

ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “ஆளுநர் ரவி, வேண்டுமென்றே தெரிந்துதான் பேசுகிறார். தி.மு.க அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விருப்பத்தை நிறைவேற்றவே இப்படியெல்லாம் பேசுகிறார். தான் மசோதாக்களைக் கிடப்பில் போட்டுவிட்டாலே அவை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என யூகச் செய்தி சொல்வதுபோலச் சொல்கிறார். அப்படிச் சொல்வதற்கு ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கொச்சைப்படுத்தி ஆத்திரமூட்டுவதன் மூலம், ஏதாவது வன்முறை நடக்கும், அதைவைத்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்துவிடலாம் எனப் பேராசைப்படுகிறார்” என்றார்.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ரவியின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றங்களில் பேசிவிட்டோம், உள்துறை அமைச்சரிடம் சொல்லிவிட்டோம். குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுவிட்டோம். ஆனாலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த தைரியத்தில்தான் ரவி திரும்பத் திரும்ப எல்லை தாண்டிப் பேசிவருகிறார்.

இது அராஜகமான, அடாவடித்தனமான போக்கு. மாநிலத்தின் ஆளுநர் என்ற பதவியில் இருந்துகொண்டு, சட்டத்தைப் பற்றிக் கவலையே இல்லாமல் பேசுவது சரியல்ல. மாநில அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதைச் செய்வது மட்டும்தான் ஆளுநரின் வேலை” என்றார் சூடாக.

பா.ஜ.க-வைக் காப்பாற்றப் பேசுகிறாரா ரவி?

“ரவி இப்படியான சர்ச்சைக் கருத்துகளை ஏதோ போகிறபோக்கில் பேசவில்லை. திட்டமிட்டு, மிக நிதானமாக, சீண்டும்விதமாகவே பேசிவருகிறார். ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி, தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை நிலைகுலையச் செய்யும் முயற்சியாகவே அவை இருந்துவருகின்றன. ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் நடக்கும்போது, அதை உடைக்கும்விதமாகச் சர்ச்சை வெடிகளைப் பற்றவைக்க ரவி தவறுவதில்லை.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

`ஆருத்ரா’ பண மோசடி, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி விரிசல் விவகாரங்கள் பெரிதாக விவாதிக்கப்படும் இந்தத் தருணத்தில், அதை ‘டைவர்ட்’ செய்யும்விதமாக, ‘மசோதா நிராகரிப்பு’ விவகாரத்தைக் கிளப்பியிருக்கிறார் ரவி” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வடமாநிலங்களை ஒப்பிடும்போது, தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் வளர்ச்சியும் அமைதியும் நிறைந்த மாநிலங்களாக இருக்கின்றன.

குறிப்பாகத் தமிழ்நாடு. ஆனால், அது குறித்து எப்போதும் வாய் திறக்காத ரவி, தமிழகம் பதற்ற நிலையிலும், பின்தங்கிய நிலையிலும் இருப்பதாகச் சித்திரிக்கவே எப்போதும் முயல்கிறார். அதே நிகழ்வில், ‘ஸ்டெர்லைட்’ ஆலை குறித்து அவர் பேசியது பெரும் கொதிநிலையை பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் உருவாக்கியிருக்கிறது.

அன்று, மாணவர்களுடன் அவர் பேசியபோது “நாட்டின் காப்பர் தேவையில், 40 சதவிகிதம் பங்களித்துவந்த ஸ்டெர்லைட் ஆலையை, மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர். இதில் வெளிநாட்டு நிதியும் சதியும் இருக்கின்றன” எனப் பேசினார் ரவி.

“ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியிருப்பது அபத்தத்தின் உச்சம் மட்டுமல்ல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியான 13 பேரின் இறப்பையும் கொச்சைப்படுத்துகிற செயல்” என ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

தூத்துக்குடி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, “நீங்கள் பேசுவதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறீர்களா?” எனச் சீறியிருக்கிறார்.

“ஆளுங்கட்சியும் ஆளுநருக்கு எதிராகப் பேச வேண்டும்!”

நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து ரவி பேசியிருப்பது அநாகரிகமானது. ‘வேதாந்தா நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்கிறாரோ...’ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. உழைக்கும் மக்களைக் கொச்சைப்படுத்த வேண்டும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவரிடம் இருக்கிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து அதிகார மமதையில் பேசுகிறார். அவரது இந்தச் செயல், தி.மு.க அரசுக்கு எதிரானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒட்டுமொத்தத் தமிழக மக்களையும் கொச்சைப்படுத்துகிறார் ரவி. என்னதான் எம்.எல்.ஏ-க்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், ‘நாங்கள் நினைத்தால்தான் எதுவும் நடக்கும்’ என்கிற மமதையில் பேசுகிறார் ரவி.

அவருக்கு எதிராகப் போராட்டங்கள் தன்னியல்பாக வெடிக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஆளுநரைத் திரும்பப் பெறவும், அவரைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாங்கள் மட்டும் பேசிக்கொண்டிருப்பது நல்லதல்ல. ஆளுங்கட்சியும் ஆளுநருக்கு எதிராகப் பேச வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி நீடிப்பது யாருக்கும் நல்லதல்ல” என்றார் அழுத்தமாக.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

“ரௌடிகளுக்கும் ஆதரவளிப்பாரா ரவி?”

குடிமைப்பணிக்குத் தயாராகும் இளைஞர்கள்தான், இந்த நாட்டின் அரசு இயந்திரத்தை எதிர்காலத்தில் நிர்வகிக்கவிருப்பவர்கள். அவர்கள் மத்தியில் சனாதனத்தையும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு எதிராகவும், மக்கள் போராட்டத்துக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து விஷத்தை அள்ளித் தெளித்துவருகிறார் ரவி. இது ஆபத்தான போக்கு.

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், “குடிமைப்பணி பயிலும் மாணவர்களிடம் இப்படியாகப் பேசுவதன் மூலம், மாநில அரசுகளை மதிக்க வேண்டாம் என விபரீதமான வகையில் அவர்களை மூளைச்சலவை செய்கிறார். ஆன்லைன் ரம்மிக்கு நாடே தடை கேட்டுக்கொண்டிருந்தபோது, சூதாட்ட உரிமையாளர்கள் ரவியைச் சந்தித்தார்கள்.

அதன் பிறகுதான், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை திருப்பியனுப்பினார். இப்போது ஸ்டெர்லைட் ஆலைமீது கரிசனம் காட்டுகிறார். இதன் மூலம், அந்த ஆலையின் உரிமையாளர்கள், ஆலை ஆதரவாளர்கள் ரவியைச் சந்தித்திருப்பார்களோ என்று சந்தேகம் எழுகிறது. இப்படியே போனால், ரௌடிகளும், பாலியல் குற்றவாளிகளும் சங்கம் அமைத்து ஆளுநரைச் சந்தித்து முறையிட்டால், ‘இவர்களையெல்லாம் கைதுசெய்வது தவறு’ என்று பேசவும் தயங்க மாட்டாரோ என அச்சமாக இருக்கிறது” என்றார் சூடாக.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

‘வாய்க்கொழுப்பு ரவி’ - இவரை ஏன் நாம் சகித்துக்கொள்ள வேண்டும்?

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக, அந்த மாநில அரசு தொடர்ந்த வழக்கில், “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வேலையில்தான் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ரவி.

நம்மிடம் பேசிய தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி, “அரசியலமைப்பு தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யாமல், தான்தோன்றித்தனமாக, வாய்க்கொழுப்பெடுத்து நினைத்ததையெல்லாம் பேசுகிறார் ரவி. ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக தி.மு.க-வின் தலைவர், சட்டப்பேரவை தொடங்கி பல்வேறு இடங்களில் பல வகையில் பதிலடி கொடுத்துவிட்டார். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் கோமாளித்தனங்களை மக்கள் மன்றங்களில் தொடர்ந்து எடுத்துவைத்து வருகின்றன.

அரசியலமைப்பின் மாண்பைக் கெடுத்துவிடக் கூடாது என தி.மு.க கவனமாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், ரவி அதைக் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறார். ரவியின் இந்த வாய்க்கொழுப்பு நீளுமானால், அவருக்கு எதிரான வெகுதிரள் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும். ஆளுநர் தன் வாய்க்கொழுப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார் கொதிப்புடன்.

“வாய்க்கொழுப்பு ரவி - ஆளுநரை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” : அட்டைப்படம் போட்டு வெளுத்து வாங்கிய ஜூ.வி.!

‘ஆளுநர் ரவி வழக்கமாகக் கிளப்பும் சர்ச்சைதான்’ என இதை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது; கூடாது. மக்களின் உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல் அலட்சியப் படுத்தியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். பெரும் உயிர்த் தியாகத்தில் முடிந்த மக்கள் போராட்டத்தை, ‘வெளிநாட்டுச் சதி’ எனக் கொச்சைப்படுத்தியிருக்கிறார். ‘பிரதமர் தமிழகத்துக்கு வரும் நேரம், தன் பேச்சு தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குமே...

போராட்டங்கள் வெடித்து சட்டம்-ஒழுங்கு மோசமானால் என்ன செய்வது?’ என்பதைப் பற்றியெல்லாம் துளியும் அவர் கவலைப்படவில்லை. ‘ஒரு மாநிலத்தின் அமைதியைப் பற்றி, அதன் பிரச்னைகளைப் பற்றி, அந்த மாநிலத்தின் தனித்துவமான உரிமைகளைப் பற்றி, மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு சர்வாதிகார மனநிலைகொண்ட ஆளுநரை ஏன் நாம் சகித்துக்கொள்ள வேண்டும்?’ என்பதுதான் பிரதானமான கேள்வியாக இருக்கிறது.

“ஜெயலலிதா இருந்திருந்தால் ஓர் ஆளுநர் இதுபோல, தன் இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டிருக்க முடியுமா... தலைவர் ஓர் அறிக்கையோடு நிறுத்திக்கொள்கிறாரே..?” என தி.மு.க-வினரே நொந்துகொள்ளும் அளவில்தான் இருக்கிறது முதல்வரின் எதிர்வினை. திருமாவளவன் கூறியிருப்பதுபோல, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சி துணிந்து வலுவாகப் பேச வேண்டும்; செயல்பட வேண்டும். மாநில உரிமைகளை முதன்மைக் கொள்கையாகக்கொண்ட தி.மு.க அரசு அதைச் செய்யுமா?

- நன்றி : ஜூனியர் விகடன்

Related Stories

Related Stories