தமிழ்நாடு

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நான் சொன்னபடி 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.04.2023) கொளத்தூர், அனிதா அச்சீவர்ஸ் அக்காடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.

அனிதா அச்சீவர்கஸ் அகாடமியின் சார்பில் நடைபெறக்கூடிய இந்தப் பட்டமளிப்பு விழா, ஒரு பாசமிகு விழாவாக நடைபெறக்கூடிய இந்த நேரத்தில் நானும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நல்வாய்ப்பைப் பெற்றமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதுமே இந்த கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது எந்தப் பூரிப்போடு, எந்தப் பெருமையோடு, எந்த மகிழ்ச்சியோடு நான் வருவேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அதிலும் குறிப்பாக, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சிக்கு வருகிறபோது, நான் என்னையே மறந்த நிலையிலே அந்த நிகழ்ச்சியிலே பங்கேற்பது உண்டு.

நம்முடைய திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை என்பதே கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். வளர்ச்சி என்பது, அனைவருக்குமான வளர்ச்சியாக இருந்திட வேண்டும். அந்த அடிப்படையிலே கல்வி என்பது எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும். அந்தக் கல்வி என்பது கிடைப்பதற்குத் தடை இருந்தால், அந்தத் தடையை உடைத்தாக வேண்டும். எந்தத் தடையும் அதற்கு இருக்கக் கூடாது. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அமைகிறபோதெல்லாம் கல்விக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதற்காகப் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம், திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியைப் பொறுத்தவரையில், ஏதோ நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னால் அல்ல, நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பகுதியிலே என்னைச் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தப் பொறுப்பை பயன்படுத்திச் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு என்னென்ன பணிகளை நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நான் தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

அதிலே குறிப்பாக இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட அதற்குரிய படிப்பினைப் படித்திட வழிவகை செய்யக்கூடிய நிலையில் இந்த அகடமியை நாம் தொடங்கினோம். அதுவும் யாருடைய பெயராலே? அனிதா என்கிற அந்த சகோதரியின் பெயராலே. ஏன் அனிதா என்ற பெயரை இந்த அச்சீவர்ஸ் அகாடமிக்கு சூட்டினோம் என்று கேட்டால், மருத்துவப் படிப்பு படித்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும், பணியாற்ற வேண்டும், மருத்துவராக இருந்து சாதிக்க வேண்டும் என்கிற நிலையில் பல்வேறு கனவுகளோடு ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய ஒரு சகோதரி அடித்தட்டில் இருந்து படித்து மேலே வந்த அந்த சகோதரி, தகுதி திறமை போன்ற பசப்பு சொற்களுக்கு நீட் என்ற முலாம் பூசப்பட்டு தடையாக வந்த காரணத்தால், தான் கண்ட கனவு நிறைவேற முடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளானார்.

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தன்னுடைய மருத்துவக் கனவை அந்த சகோதரி இழந்தார். அந்த ஏக்கத்தின் காரணமாக அந்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என்பது நாட்டிற்கே நன்றாகத் தெரியும். அந்த சகோதரி அனிதாவினுடைய பெயரால் இந்த திறன் மேம்பாட்டு மையம் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் பெண்களுக்கான பயிற்சி மையமாக இது தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் Tally எனும் கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் நாள் ஆண்களுக்கான தனி பயிற்சி மையமும் மகளிருக்கான இலவசத் தையல் பயிற்சி மையமும் துவக்கி வைக்கப்பட்டது. இதுவரையில் இதுவரை 8 பேட்ச் மாணவிகள் இங்கு படித்துள்ளார்கள். அதாவது 662 மாணவிகள் இலவசப் பயிற்சி முடித்து Tally சான்றிதழும் மடிக்கணினியும் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் 4 பேட்ச்களைச் சார்ந்த 37 மாணவர்கள் இலவச பயிற்சி முடித்து சான்றிதழ்களும் மடிக்கணினியும் பெற்றிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 969 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்று ஒன்பதாவது பேட்ச் மாணவிகளுக்கும் ஐந்தாவது பேட்ச் மாணவர்களுக்கும், அதாவது Tally முடித்ததற்கான சான்றிதழையும், மடிக்கணினியும் நான் இங்கு வழங்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சியில் Tally ஒன்பதாவது பேட்சைச் சார்ந்த மாணவிகள் 81 பேர், ஐந்தாவது பேட்சைச் சார்ந்த 74 மாணவர்கள் என மொத்த 155 பேர் சான்றிதழும் மடிக்கணினியும் பெறுகிறார்கள்.

நீங்கள் கற்ற படிப்பு உங்களுக்குத் துணை நிற்கும். அதற்கு இந்த மையம் உறுதுணையாக இருக்கும் என்பதற்கு அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி. இங்கே பயின்றால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு இங்கு வந்து சேருகிறார்கள். தற்போது கூட பத்தாவது பேட்சில் 75 மாணவிகளும் ஆறாவது பேச்சில் 25 மாணவர்களும் பயிற்சி பெறுகிறார்கள். அதேபோல் இதுவரை 4 பேட்சில் தையல் பயிற்சி பெற்ற 1170 மகளிருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இப்போது பேட்ச் ஐந்தில் பயிற்சி முடித்த 360 மகளிருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட இருக்கிறது. அடுத்ததாக 360 மகளிர் பயிற்சி பெறுகிறார்கள். இப்படி இங்கு பயிற்சி பெறுபவர்களுடைய வாழ்க்கை ஒரு அடி முன்னேறினாலும் இந்த மையத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி நம் எண்ணத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி. நீங்கள் அடுத்தடுத்து முன்னேறுவதற்கான படியாக முதல் படியாக, இங்கிருந்து நீங்கள் இன்னும் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல வேண்டும். அதற்கு இங்கு நீங்கள் கற்ற கல்வி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் மனதார உங்கள் அத்தனை பேரையும் வாழ்த்துகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள், அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எத்தனையோ திட்டங்களை இங்கே தொகுத்து தொடக்கத்திலே வரவேற்புரை ஆற்றிய அருமை சகோதரி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சாதனைகளை சொன்னால், நேரம் போதாது என்று சொன்னார். உண்மைதான். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான். அதற்காகத்தான் சொல்லுகிறோம், இது ஒரு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு எத்தனையோ நற்சான்றிதழ்கள் ஊடகங்களாக இருந்தாலும் பத்திரிகைகளாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய ஆங்கிலப் பத்திரிகைகளாக இருந்தாலும், நம்முடைய ஆட்சியை இன்றைக்குப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள், வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நான் பல முறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்; இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருவதற்கான எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன் என்று ஆட்சி பொறுப்பேற்ற அன்றே குறிப்பிட்டுச் சொன்னேன். தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகள் எல்லாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிற போது, பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது.

நம்முடைய கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றுகளை நான் வந்து வாங்கிக் கொண்டு நேராக நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவினுடைய நினைவிடத்திற்கும் நம்முடைய உயிரோடு கலந்து இருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று அங்கே வணக்கம் செலுத்திவிட்டு மரியாதை செய்துவிட்டு, வெளியிலே வருகிறபோது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, “ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள், என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்டபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன். அதோடு நிறுத்தவில்லை, வாக்களித்தவர்கள் பெருமைப்படத்தக்க வகையில், அவர்கள் என்னை பாராட்டக்கூடிய வகையிலே ஆட்சியை நடத்துவது மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் நாம் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும் என்று அப்போதே நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் சி.எம்., என்று அந்தப் பாராட்டை நான் பெற்றிருந்தாலும் அப்போதும் நான் சொன்னேன், நம்பர் ஒன் சி.எம்., என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்று நான் சொன்னேன், அது வந்திருக்கிறது.

” 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஆகவே அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், மாநகராட்சி நிகழ்ச்சிகள், அடிக்கல் நாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள் அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு இன்று நிறைவாக நடைபெறக்கூடிய இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெறக்கூடிய இந்தச் சிறப்பான விழாவிலே பங்கேற்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். இதுபோன்ற இந்த நிகழ்ச்சிகள் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து நடைபெற வேண்டும், நடைபெறப் போகிறது என்ற உறுதியையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, குறிப்பாக நம்முடைய மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள், எதை நடத்தினாலும் அதில் ஒரு முத்திரை இருக்கும். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவருடைய துறையைச் சார்ந்த அறநிலையத்துறையாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதிக்கக்கூடிய ஒரு ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய சேகர்பாபு அவர்கள்.

அப்படிப்பட்ட ஆற்றலை பெற்றிருக்கக்கூடிய மாவட்டச் செயலாளரை, அமைச்சரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று சொல்வதை விட நாங்களும் பெற்றிருக்கிறோம் என்று சொல்வதிலேதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல, இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சிறப்பாக நடைபெறுவதற்கு இது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையிலே தொடர்ந்து அயராது உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த அச்சீவர்ஸ் அகாடமிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய சகோதரி ஹெலன் அவர்களுக்கும் நரேன் அவர்களுக்கும் இந்த நேரத்திலே இந்தத் தொகுதியினுடைய, மன்னிக்க வேண்டும், நம்முடைய தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே நானும் அவருக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories