தமிழ்நாடு

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தொழில் நுட்பங்களை இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பாக நடைபெறும் இந்த ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினைத் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பத்தினுடைய யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மனிதரின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பப் பொருட்கள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட் போன்றவை நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியிருக்கிறது.

தொழில்நுட்பம், இன்று உலகத்தை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒரு முனையில் நடப்பது - இன்னொரு முனைக்கு அப்போதே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய பயன்பாடு - கல்வித் துறையில்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி அறிவை நாம் தேடிப் பெற்றோம். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, விரல்நுனியில் வந்துவிட்டது; வகுப்பறைகள் நவீனமயமாகிவிட்டன.

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கையளவு செல்பேசியில் அனைத்துப் புத்தகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. மாணவர்கள் அறிவோடு மட்டுமல்ல, அறிவியலோடும் இன்றைக்கு கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என எல்லாமே இப்போது எளிமையாக வந்திருக்கிறது. தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழில்நுட்பம் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரமிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை, ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தை அரசு நிருவாகத்திலும், மக்கள் சேவையிலும் புகுத்தி, நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர்ந்திட வேண்டுமென்பதை நன்கு உணர்ந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், தனது ஆட்சிக் காலத்தில், இங்கே அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல, தகவல் தொல்நுட்பத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டினார்.

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்,

• திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அதாவது

1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார்.

• அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தை நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினிக் கல்வியைத் தந்தார்.

• 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களிலும் கணினி பாடத்தை அவர் கொண்டுவந்தார்.

• 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘Empower IT’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு சென்றார்.

• அப்போதே Mobile Governance, E-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

• தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.

• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை அவர் மாற்றிக் காட்டினார்.

• தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார்.

• கணினி என்ற பெயரைப் பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை தமிழ்நாட்டில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 1997-இல் தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.

• தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இன்றைய சாதனை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றிதான் என்று நாம் உறுதியோடு சொல்லமுடியும்.

மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னேறி இருக்கக் காரணம் தலைவர் கலைஞர் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இதே வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசும் இப்போது செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான, அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்பையும், மனித ஆற்றலையும் தமிழ்நாடு முழுமையாகக் கொண்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழுப் பயன்கள் சென்று சேர்ந்திடவும், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மனோ தங்கராஜ் அவர்கள், இதனுடைய வளர்ச்சிக்காக நித்தமும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். புதிய புதிய முயற்சிகளை துணிச்சலாக எடுக்கும் ஆற்றல் படைத்தவராக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவம், கல்வி, வேளாண்மை மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இந்தத் துறையின் அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை, வாழ்த்துகளை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

* தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

* தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருகிறது.

* 2009-ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICTACT) தொடங்கப்பட்டது.

ஆசிரியர் மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, தொழில்-நிறுவன ஆராய்ச்சி, ஆய்வு இதழ் வெளியீடுகள் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனத்தின் செயல்பாடு உள்ளபடியே பாராட்டுக்குரியது.

ஐ.சி.டி. அகாடமி முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்துவதற்கு மாநாடுகளை நடத்தி வருவது உள்ளபடியே பாராட்டத்தக்கது. இத்தகைய கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிகள் வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், மாநிலத்தில் நிலவும் திறன் இடைவெளி குறைந்திடவும் வழிவகை செய்யும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில், அதன் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த வேலைவாய்ப்பு என இரட்டைப் பலன்களை அடையமுடியும்.

”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

IT உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் மாநில குடும்ப தரவுத் தளம், பிளாக்செயின் மற்றும் இ-அலுவலகம் மூலம் SMART நிறுவனத்தை நிறுவுவதன் மூலமாக சேவைகளை மேம்படுத்திட இயலும் என்பதால், தமிழ்நாடு அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதமில்லா, வெளிப்படைத்தன்மையுடனான சேவைகளை பெற இயலும்.“தரவுகள்” எனப்படும் “Data”தான் இந்தக் காலத்தின் புதிய எரிபொருள்.

தமிழ்நாடு Data Centre பாலிசியை வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் Date Centre உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் முதல் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்திட, தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை மற்றும் நாஸ்காம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு, “எதிர்காலத்திற்கான ஆலோசனைக் குழுவை” மாநில அரசு அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில், துடிப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிட, திறன் இடைவெளியைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதனை உணர்ந்துதான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஐ.பி.எம். ஆகியவற்றின் மூலமாக 50 ஆயிரம் ஐ.டி. / கணினித் துறை மாணவர்களுக்கு 3-கிரெடிட், கட்டாயக் கற்றல் படிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயிற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் தொழில் நுட்பத்திற்கு - இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.

இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துத் துறை வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கைக்கு இந்த கருத்தரங்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர வேண்டும், அது இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய துறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொண்டு, இந்த மாநாட்டில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories