தமிழ்நாடு

“சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை மக்கள் முகத்திலும் காண உழைக்கிறோம்” : முதலமைச்சர் சிறப்புரை!

சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியைத்தான், தமிழ்நாடு மக்கள் அனைவரது முகத்திலும் காண நாங்கள் உழைத்து வருகிறோம்” என பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

“சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை மக்கள் முகத்திலும் காண உழைக்கிறோம்” : முதலமைச்சர் சிறப்புரை!
cm office
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.2.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் 4-வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு, “பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் நான்காவது மாநாட்டில் மதுரைக்கு வந்து நேரில் கலந்து கொள்ள விரும்பினேன். ஆனாலும், பல்வேறு அரசு பணிகள் இருந்த காரணத்தால் நேரில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும், காணொலியிலாவது நீங்கள் கலந்து பேசியாக வேண்டும் என்று கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் – என்னுடைய இனிய நண்பர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அதனடிப்படையில், காணொலி மூலமாக கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!

மதுரைக்கே வந்தாலும் - சென்னையில் இருந்தபடியே பேசினாலும், என்றும் உங்களோடு இருப்பவன் - உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும், அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது இயேசு காவியத்தில் எழுதிய வரிகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்....

“சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை மக்கள் முகத்திலும் காண உழைக்கிறோம்” : முதலமைச்சர் சிறப்புரை!
cm office

“அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்

ஆடல் பாடல் அணுகாது இருந்தும்

இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்

ஈகை உதவி இதயம் மலர்ந்தும்

உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்

ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்

என்றும் தந்தை எதைச் சொன்னாலும் ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்

ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்

ஒத்த வயதே உடையோர் இடத்து

ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்

கன்னித் தாயின் காலடி வணங்கியும்

காலம் அறிந்து கணக்குற வாழ்ந்தும்

கிட்டா தாயின் வெட்டென மறந்தும்

கீழோர் மேலோர் பேதம் இன்றியும்

குணத்தில் தேவகுமாரன் என்று உலகம்

கூப்பி வணங்கக் குறைகள் இலாமலும்

கெட்ட பழக்கம் எட்டா நிலையில்

கேடுகள் எதையும் நாடா தளவில்

கைத்தலத்து உள்ளே காலத்தை அடக்கியும்

கொஞ்சி வளர்ந்து குழந்தையில் இருந்து

கோமகன் வயதில் ஆறிரண்டடைந்தார்!

- என்று இயேசு பெருமான் குணத்தைப் பற்றி எழுதினார்.

அ, ஆ, இ, ஈ... வரிசையிலும், க, கா, கி, கீ ... வரிசையிலும் அமைந்த சிறப்பான பாடல் இது. கவிதைச் சிறப்புக்காக இதனை நான் சொல்லவில்லை! எத்தகைய பண்புகளை மக்கள் பெற வேண்டும் என்பதும் இந்தப் பாடலில் அடங்கி இருக்கிறது.

கிறித்துவ நெறி அதிகம் வலியுறுத்துவது அன்பைத்தான்!

‘அன்பு செலுத்து! அன்பைப் பெறு!’ என்பதே வெவ்வேறு சொற்களில் சொல்லப்படுகின்றன.

'உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்றுதான் இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்பது தான் சமத்துவம்.

‘யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே’ என்பது தான் சகோதரத்துவம்.

‘அனைவருடனும் சேர்ந்து வாழ்’ என்பது தான் ஒற்றுமை.

‘ஏழைகள் மீது கருணை காட்டு’ என்பதுதான் இரக்கம்.

‘அநீதிக்கு எதிராக குரல் கொடு’ என்பதுதான் நீதி.

‘மற்றவர்களுக்காக வாதாடு’ என்பதுதான் தியாகம்.

‘உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு கொடு’ என்பதுதான் பகிர்தல்.

இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால், அதுதான் சமத்துவ நாடாக அமையும்!

இந்திய நாட்டினுடைய 74-ஆவது குடியரசு நாளை முன்னிட்டு உரையாற்றிய மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றித்தான் அதிகமாகப் பேசி இருக்கிறார்.

“பலதரப்பு மக்களைக் கொண்டிருந்தபோதிலும் ஒரு நாடாக இருப்பது என்பது வரலாறு காணாதது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற மையக்கருதான் அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமாக இருந்து காலத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடித்திருக்கிறது.

அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வைதான் நமது குடியரசைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. ஏழ்மை, கல்வியறிவில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி, உலக அரங்கிலேயே தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஒரு தேசமாக இந்தியா மாறியிருக்கிறது.

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரும், அவருக்குப் பிறகு வந்தவர்களும் நமக்கான தார்மீகக் கட்டமைப்பையும் – பாதையையும் உருவாக்கித் தந்துள்ள நிலையில், அதில் தொடர்ந்து பயணிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது" – என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அவர்கள்.

இத்தகைய பன்முகத்தன்மைதான் இந்திய நாட்டை மட்டுமல்ல, நாட்டு மக்களின் பண்பாட்டையும் காக்கும். மொழிகள் - மதங்கள் – இனங்கள் வேறு வேறாக இருந்தாலும் இணைப்பது மனிதம்.

அத்தகைய மனிதக் கூறுகளை பின்பற்றுபவர்களாக மானுடம் திகழ வேண்டும். நாமும் வளர வேண்டும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் காலம் காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய தமிழர் பண்பாடு! அனைவரையும் இணைக்கும் ஆற்றல் மொழிக்கு உண்டு!

“சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை மக்கள் முகத்திலும் காண உழைக்கிறோம்” : முதலமைச்சர் சிறப்புரை!

அந்த வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் நமது அரசு தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படை நோக்கம்!

கடந்த ஓராண்டு காலத்தில்

* கல்வி

* சுகாதாரம்

* தொழில் வளர்ச்சி

* வேளாண்மை

* மகளிர் மேம்பாடு

* குழந்தைகள் நலன்

* விளிம்பும் நிலை மக்களின் நலன்

* சிறுபான்மையினர் நலன்

* பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள்

* விளையாட்டு

* சுற்றுலா

* தொழிலாளர்கள் நலன்

* நகர்ப்புற வளர்ச்சி

* கிராமப்புற மேம்பாடு

* உள்கட்டமைப்பு வசதிகள்

என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கும் பணிகளைச் செய்து வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.

குறிப்பாக, கிறித்துவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை கழக அரசு செய்து கொடுத்துள்ளது.

* தேவாலயங்களைச் சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

* கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலம் பெறுவதை எளிமையாக ஆக்கி இருக்கிறோம்.

* சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது.

* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.

* கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் கிறித்துவ சமூக மக்களுக்கு கடந்த இருபது மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ள நலத் திட்டங்கள்!

“சிறுமி டானியா முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை மக்கள் முகத்திலும் காண உழைக்கிறோம்” : முதலமைச்சர் சிறப்புரை!

கழக அரசைப் பொறுத்தரையில் நீங்கள் கோரிக்கை வைத்துத்தான் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. நாங்களாகவே பல்வேறு திட்டங்களை, நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசு.

எனது, நமது திராவிட மாடல் தலைமையிலான அரசு ‘சொல்வதையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்’ என்று இயங்கக்கூடிய அரசு!

இங்கே பேராயர் எடிசன் அவர்களால் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் நம்முடைய இனிகோ இருதயராஜ் அவர்களும் என்னிடத்தில் தேதி பெறுகிற நேரத்திலேயே அதுபற்றியெல்லாம் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். அது பற்றி நிச்சயம் ஆலோசனை செய்து, நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் என நான் உறுதி அளிக்கிறேன்.

அரசையும், என்னையும் பாராட்டி நீங்கள் பேசிய சொற்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, அதுவும் மக்கள் பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன்.

நமது அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால், தமிழ்நாட்டு மக்கள் பயனடைந்து, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறபோதெல்லாம், எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

இன்று காலையிலே கூட, திருவள்ளூர் மாவட்டத்தில் நான் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அந்த நிகழ்ச்சியை முடித்ததற்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன்னால் ஊடகங்களில் வந்த செய்தியில், ஆவடி அருகே முகச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். நலமடைந்த அந்தச் சிறுமி டானியாவை நான் மீண்டும் சந்திக்க, அந்தக் குழந்தையின் இல்லத்திற்கே சென்றேன். அப்போது அந்தக் குழந்தையின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியைத்தான், தமிழ்நாடு மக்கள் அனைவரது முகத்திலும் காண நாங்கள் உழைத்து வருகிறோம்.

எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ அதைவிட அதிக நம்பிக்கையை இந்த இருபது மாத காலத்தில் பெற்றிருக்கிறோம். இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருப்பது உழைப்பு. அந்த உழைப்புக்குப் பின்னால் இருப்பது உண்மை. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்தப் பாராட்டுகள் அதிகம் உழைக்கத் தூண்டுகோலாக அமையும்.

இது எனது அரசு அல்ல, நமது அரசு. உத்தரவிடுங்கள். நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories