தி.மு.க

பெரியாரை அறிவோம் : “திராவிட இயக்கத்தின் திருப்புமுனை தந்தை பெரியார்..” - பேரா.சுப.வீரபாண்டியன் கட்டுரை !

திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

பெரியாரை அறிவோம் : “திராவிட இயக்கத்தின்  திருப்புமுனை தந்தை பெரியார்..” - பேரா.சுப.வீரபாண்டியன் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெரியாரை அறிவோம்! | எழுதி வளர்ந்த இயக்கம் -3 | பேரா. சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்வது, எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதை அறிவுரைக்கிறது இந்தத் தொடர்...

ஓர் இயக்கத்தின் வரலாறு என்பது, அந்த இயக்கம் சார்ந்த வரலாறு மட்டுமில்லை. அந்த இயக்கத்தைக் கட்டி வளர்த்த தலைவர்களின் வரலாறுகளையும் உள்ளடக்கியது. திராவிட இயக்கத் தலைவர்களின் வரிசையை நாம் அறிவோம். நடேசனார் தொடங்கி, பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர் என்று அறியப்படுகிற மாதவனார், பனகல் அரசர் முத்தையா முதலியார் என்று நீதிக்கட்சியிலும், பிறகு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என்று திராவிட இயக்கத்தில் தொடர்ந்தும், தலைவர்களினுடைய வரலாறு ஏராளமாக நம்மிடத்தில் இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் திராவிட இயக்கத்தின் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. ஆனால் அவர்தான் திராவிட இயக்கத்தின் மையப்புள்ளி என்று நாம் சொல்லலாம்.

பெரியாரை அறிவோம் : “திராவிட இயக்கத்தின்  திருப்புமுனை தந்தை பெரியார்..” - பேரா.சுப.வீரபாண்டியன் கட்டுரை !

ஒரு கட்டத்திற்குப் பிறகுதான், பெரியார் திராவிட இயக்கத்துக்குள் வருகிறார். 1919-ஆம் ஆண்டு முதல் 1925-ஆம் ஆண்டு வரையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதற்கு முன்பே நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதார் நலனுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

எனவே, பெரியார் தொடக்கமும் இல்லை, இன்று வரையில் முடிவும் இல்லை. அவர் இறந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகும், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தலைவர் தளபதி என்று இன்றைக்கும் தொடர்ந்து அந்த இயக்கம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நடுவில் வந்த பெரியார் அதைத் தாங்கி நிற்கிற அச்சாணியாக இருக்கிறார்.

தன் வரலாறு எழுதாத தலைவர்

பெரியாருடைய‌ வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, நூல்கள் பல நமக்கு வெளிப்படுத்துகின்றன. தந்தை பெரியார் தன் வரலாறு (ஆட்டோபயோகிராஃபி) என்று எதையும் எழுதவில்லை. அறிஞர் அண்ணா அவர்களும் எழுதவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள், தன் வரலாற்றை, ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் பெயரில் நாட்டின் வரலாற்றையும் சேர்த்து ஆறு தொகுதிகளாக எழுதினார்.

ஆனால், பெரியார் அவர்களின் வரலாற்றைப் பலர் எழுதி யிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க நூல்கள் இரண்டு என்று சொல்ல லாம். ஒன்று சாமி சிதம்பரனார் அவர்கள் எழுதியிருக்கிற ‘தமிழர் தலைவர்’ என்னும் புத்தகம். மிக ஆதாரப்பூர்வமான‌ செய்தி களைக் கொண்ட நூல். ஆனால், அந்த நூல்கூட பெரியாரினுடைய ஒரு குறிப்பிட்ட வயது வரையி லான வரலாற்றைத்தான் குறிப்பிடு கிறது. முழுமுதல் வரலாறு நமக்கு வேண்டாமா?

பெரியாரைப் பற்றிய முழுமையான நூல்

‘தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு’ என்னும் பெயரில் கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதியிருக்கிற மிகப் பெரிய புத்தகமான அந்த நூல், 1879-ஆம் ஆண்டில் பெரியார் பிறந்ததிலிருந்து தொடங்கி, 1973-ஆம் ஆண்டு அய்யா அவர்கள் இறந்து போன வரைக்கும், 94 ஆண்டுகால வரலாற்றை, முழுமையாக, முடிந்த வரையில் எல்லா இடங்களையும் தொட்டுக் காட்டித் தருகிற நூலாக இருக்கிறது.

அந்த நூலின் சிறப்புகள் பல உண்டு. கருணானந்தம் அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் ஈரோட்டிலேயே ‘குடிஅரசு’ இதழில் வேலை பார்த்தார். எப்படி அறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர் அவர்களும் ஈரோட்டில் பெரியாரின் வீட்டிலேயே தங்கிப் பணியாற்றினார்களோ, அதுபோல 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோட்டில் பெரியாரிடம் 40 ரூபாய் ஊதியத்துக்கு வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி, பிறகு அரசு ஊழியராக இருந்தவர் கவிஞர் கருணானந்தம்.

ஒற்றைச் சொல் இயல்கள்!

அவர் இந்த நூலில் 19 இயல்களை அமைத்திருக்கிறார். எல்லா இயல்களுக்கும் ஒற்றைச் சொல்லில் தலைப்பு கொடுத்திருக்கிறார். எந்த இயலுக்கும், எந்த இடத்திலும் இரண்டு சொற்கள் கூட கிடையாது. ஒரே ஒரு சொல்லில்தான் தலைப்பு. எடுத்துக் காட்டிற்காகச் சொல்கிறேன். முதல் தலைப்பு ‘பிறந்தார்’ என்பது. பிறந்தார், வளர்ந்தார், மணந்தார், துறந்தார், எழுந்தார், துணிந்தார் இப்படி அது தொடரும். கடைசியாக, 18- வது இயல் நிறைந்தார். 19-வது இயல் சிறந்தார் என்பது. அதுவும் மறைந்தார் என்று சொல்லாமல் கருணானந்தம் அவர்கள் ‘நிறைந்தார்’ என்று குறிப்பிடுவார்.

நிறைந்தார், சிறந்தார் என்று 19 இயல்களில் அய்யா பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுவையான நிகழ்வுகள் எல்லாவற்றையும் சேர்த்து அவர் எழுதியிருக்கிறார். வேறு பல நூல்களில் காணக் கிடைக்காத சில அரிய செய்திகளும், தகவல்களும் இந்த நூலில் இருக்கின்றன.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1956-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்து மதத்திலிருந்து நீங்கி, லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதே 56-வது ஆண்டு அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால், ஜூலை மாதம் ஈரோட்டில் அய்யா பெரியார் அவர்கள் பௌத்த மாநாட்டைக் கூட்டி இருக்கிறார் என்பன போன்று மிக அரிதாக‌ அங்கங்கு கிடைக்கக்கூடிய செய்திகளும்கூட இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

தடையில்லாத வாசிப்பனுபவம்

படிக்கத் தொடங்குங்கள். உடனடியாகப் படித்து முடித்து விடுவீர்கள். ஏனென்றால், அந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் தடையிருக்காது. பாரதிதாசனின் பாடலைப் பற்றிச் சொல்வார்களே, ‘வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்று. அதுபோல, இந்த நூலில் எந்த இடத்திலும் தடுக்கின்ற கணுக்கள் இல்லை. ஒன்றுதான் நீங்கள் செய்யவேண்டும். படிக்கத் தொடங்க வேண்டும். படிக்கத் தொடங்குங்கள். அந்தப் புத்தகம் பல செய்திகளை நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

தந்தை பெரியார், திராவிட இயக்கத்தின் மையப் புள்ளி மட்டுமன்று. திருப்புமுனையும் ஆவார். சமூகநீதியில் தொடங்கிய நீதிக்கட்சியின் பயணத்தைப் பகுத்தறிவு, அறிவியல் பார்வை, தமிழ்நாட்டின் உரிமை என்று பல கோணங்களில் எடுத்துச் சென்றவர் அவர். குறிப்பாக, பாலினச் சமத்துவத்துக்கு அய்யா பெரியார் கொடுத்த அழுத்தம் மிகுதி! அவர் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் என்பது, தமிழ்நாட்டுச் சமூக வரலாற்றில் புதிய மைல்கல் என்றே கூறலாம். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள, கருணானந்தம் அவர்களின் நூல் உதவும்!

-வாசிப்போம்

banner

Related Stories

Related Stories