நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு நெல்லையில், 1ந் தேதி தொடங்கி மூன்று நாள் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளில் பேரணியைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “டிசம்பர் 6ந்தேதி சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினமாகும், அன்றைய தினம் அவரது நினைநாளை அனுசரிக்கவிடாமல், அந்த தேதியை தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்து கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர். எனவே நம் அனைத்து தொழிற்சங்கத்தினரும் டிசம்பர் 6- ந்தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும்.
இந்த மாநிலத்தில் ஒரு ஆளுநர் இருக்கிறார் ஆர்.என்.ரவி. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது, ஆனால், இதுவரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து ஒரு புகார் மனு அளிக்கிறார். அதற்கு உடனடியாக விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புகிறார்.
பிரதமரின் பாதுகாப்பை மத்திய உள்துறை அதிகாரிகள் கையில் எடுத்துவிடுவார்கள். ஆனால், ஆளுநர் தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்பது ஆளுநரின் செயல்பாடு ஓநாய், ஆட்டுக்குட்டி கதைபோல் உள்ளது. மேலும் ஆளுனர் ரவி கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார், திருக்குறள் இந்து மதத்திற்கான நூல் என்கிறார்.
ஒவ்வொரு நாடும் ஒரு மதம் சார்ந்து உள்ளது; அதுபோன்று இந்தியாவும் இந்து மதம் சார்ந்த நாடு என்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசுகிறார். இப்படி பேசும் நபரை எப்படி ஆளுநராக ஏற்றுக் கொள்ள முடியும். ஆளுநராக ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழக சட்டப்பேரவையை , தமிழக மக்களை ஆளுநர் அலட்சியப்படுத்துகிறார். அவமானப்படுத்துகிறார். இந்த மாதம் 29- ந்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுட்டு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.