
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மேலும் கால்பந்து வீராங்கணையான பிரியா மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு மூட்டுவலி ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரியாவின் கால் மூட்டுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். மேலும் கால்வீக்கம் அதிகரித்து, ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதால் உயிரிக்கு ஆபாத்து ஏற்படும் என்று காலை அகற்றியுள்ளனர்.

முன்னதாக கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்து அமைச்சர் மா. சுப்ரமணியம் உத்தரவிட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியம், “பிரியாவுக்கு உயர் தொழிற்நுட்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், மருத்துவர்கள் கட்டுக்கட்டுவதில் ஏற்பட்ட கவனக்குறைவால், ரத்த ஓட்டம் நின்றுள்ளது. இது அரசின் கவனத்திற்கு வந்தவுடனே நான் நேரில் சென்று பிரியா குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியா நலமாகவே காணப்பட்டார்.

இதனிடையே பிரியாவுக்கு பெங்களூருவில் உள்ள பிரபல பேட்டரி காலை பொறுத்துவற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் அடுத்ததடுத்து பாதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியாவின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
சிகிச்சையின் மீது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பிரியாவின் குடும்பத்தினருக்கு உடனடியாக 10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் பிரியாவின் 3 சகோதாரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.








