தமிழ்நாடு

“சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாகவேண்டும்.

“சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.09.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப்படுத்தவும், ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமனை ஆணைகளையும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கி வாழ்த்தினார்.

“சிற்பி” திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“நான் சிறப்புரை ஆற்ற வரவில்லை, சுருக்க உரை ஆற்றத்தான் வந்திருக்கிறேன். காரணம், உடனடியாக உரையாற்றி விட்டு விமான நிலையத்திற்குச் சென்று மதுரைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிற காரணத்தால், சுருக்கமாக இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பற்றி தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் மிக விளக்கமாக உங்களிடத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதைத்தான் நான் இந்த நேரத்தில் வழிமொழிகிற நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

“சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மிக முக்கியமான, பொறுப்புமிகுந்த நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி. அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். காவல்துறையை - மக்களின் நண்பன் என்று சொல்கிறோம்! அதற்கேற்ப, மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல, எல்லோருடைய எண்ணமும் அப்படித்தான் இருக்கும்.

காவல்துறையும் - மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களைப் போல இது ஒரு முக்கியமான திட்டமாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது. இதனுடைய பொருள் Students in Responsible Police Initiatives (SIRPI).

ஆக, சிற்பி என்ற இந்தத் திட்டத்திற்கு பெயரைச் சூட்டி அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு நான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை, நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சிற்பி - என்கிற இந்தத் திட்டம், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தை, கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

“சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அறிவித்த நேரத்தில் சொன்னேன், ரூபாய் நான்கு கோடியே இருபத்தைந்து லட்சம் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்த இருப்பதாக நான் அறிவித்தேன்.

சென்னை மாநகரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்கேற்கக்கூடிய வகையில் இந்தத் திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறது.

சிறுவர்களை இளமைக் காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க இந்தத் திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட,

குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு,

போதிய குடும்ப வருமானம் இல்லாமை,

ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது,

வேலைவாய்ப்பின்மை

போன்றவை பெரும்பாலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் இன்று ஒரு பக்கத்திலே சில சமூகப் பிரச்சனைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்தாக வேண்டும், அதைத் தடுத்தாக வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு

குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்

சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல்

அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல்

சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல்,

பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல்

பொதுமக்களோடு தொடர்பு

இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாகவேண்டும்.

“சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இதுகுறித்து காவல்துறையின் உயரதிகாரிகளிடம் நான் சில தகவல்களைக் கேட்டேன். இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

இந்தச் செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள்.

மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஓன்று வழங்கப்படும்.

இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், இம்மாணவ, மாணவியர்கள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடத்தில் சொன்னார்கள். இங்கே நீங்கள் படக்காட்சியாக தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதைக் கேட்டபோது எனக்கு மனநிறைவு அளிப்பதாக இருந்தது.

"ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் பையனே

நாடு காக்கும் தலைவனாய்

நாளை விளங்கப் போகிறாய்" - என்று பாடினார் குழந்தைக் கவிஞர்

அழ. வள்ளியப்பா அவர்கள்.

அத்தகைய எதிர்காலத்தை நம்முடைய சிறுவர்களைச் சமூக ஒழுக்கங்களோடு வளர்த்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமை! அவர்களை சிறப்பாகச் செதுக்கியாக வேண்டும். அப்படி உருவாகும் இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள், செதுக்குவார்கள். இந்தப் பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது. அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம்.

ஆகவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மீண்டும் ஒரு முறை என்னுடைய நன்றி தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

banner

Related Stories

Related Stories