மு.க.ஸ்டாலின்

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது” : முப்பெரும் விழா குறித்து உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது!” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது” : முப்பெரும் விழா குறித்து உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்!.” எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா மடல்.

செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும்.

ஆம்! இது நமக்கான மாதம்; திராவிடர்க்கான மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம்தான். அவருடைய இலட்சியப் படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான். தந்தை பெரியாரின் புதுமைக் கருத்துகளையும், புரட்சிகரமான கொள்கைகளையும், அரசியல் களத்தில் அனைவர்க்கும் அறிமுகம் செய்து, அறிவொளி ஏற்றி, அமைதி வழியில் வென்றெடுக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான். அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது” : முப்பெரும் விழா குறித்து உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து, கழகத்தின் கொள்கை, பார்மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி, நமக்கெல்லாம் நல்வழி காட்டியிருக்கிறார். கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம் உள்ளிட்ட இன்னும் பல வழிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் நேரடியான எழுச்சிப் பங்கேற்புடன் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள் எத்தனையெத்தனை! அத்தனையும் அவரைப் போலவே, நம் நெஞ்சை விட்டு சற்றும் நீங்காமல் பசுமையாகவே இருக்கின்றன.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இயங்கி வந்த கழக அலுவலகத்தை, அரசியல் காழ்ப்புணர்வால் - தீராப் பகையால் அன்றைய ஆட்சியாளர்கள் ஆணவத்தோடு அகற்றியபோது, அதே அண்ணா சாலையில் கழகத்திற்கெனத் தனி அலுவலகத்தை அமைத்திடுவேன் எனச் சூளுரைத்த நம் உயிர்நிகர் தலைவர் அவர்கள், ஒவ்வொரு உடன்பிறப்பின் இரத்தமும் வியர்வையும் கலந்த ‘அண்ணா அறிவாலயம்’ எனும் கம்பீரமான கழக அலுவலகத்தை அமைத்துக் காட்டினார். அறிவாலயம் திறக்கப்பட்டதும் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள்தான்.

முப்பெரும் விழாவின் ஒரு விழாவாக, உடன்பிறப்புகளின் உணர்வுப் பிரவாக விழாவாக அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோதுதான், கழகத்தின் இளைஞரணி சார்பில் வெண்சீருடையில் அணிவகுப்பை நடத்திக் காட்டினோம். அதுவரை ஊர்வலம் என அழைக்கப்பட்டு வந்த கழக அணிவகுப்புகள், அன்று முதல் பேரணி என்ற நிரந்தரப் பெருமையைப் பெற்ற வரலாறும் முப்பெரும் விழாவுக்கு உண்டு. இளைஞரணியின் செயலாளராக இருந்த என்னுடைய பங்கும் அதில் உண்டு என்பதில் உடன்பிறப்பாக - உங்களில் ஒருவனாக மன மகிழ்ச்சி கொள்கிறேன்.

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது” : முப்பெரும் விழா குறித்து உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!

சமூகநீதியை இலட்சியமாகக் கொண்டு, ஜனநாயக வழியில் நித்தமும் பயணித்திடும் திராவிட முன்னேற்றக் கழகம், கடந்து வந்த நெருப்பாறுகள், தாண்டிவந்த கொந்தளிப்பான கடல்கள், நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட புயல்கள், நிறைய இருக்கின்றன. தங்கள் இன்னுயிர் தந்தும், வாழ்க்கையை அப்படியே ஒப்படைத்தும் கழகத்தை வளர்த்த ஆயிரமாயிரம், இலட்சோப இலட்சம், அரிமாக்களை ஒத்த தோழர்களைக் கொண்ட தூய இயக்கம் இது.

கழகம் காத்திட, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்தம் திருப்பெயர்களில் விருதுகள் வழங்கிடும் நிகழ்வை நம் உயிர்நிகர் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, ஆண்டுதோறும் தொடர்ந்து அவற்றை வழங்கி வந்தார். அதன் தொடர்ச்சியாக, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும், நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இத்தனை சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது. கல்விக் கண் தந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த பெருமைக்குரிய விருதுநகர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் மதித்துப் போற்றிய பெருந்தலைவர் அவர். ‘குணாளா.. குலக்கொழுந்தே’ எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருந்தலைவரை வாழ்த்திய சொற்கள் வரலாற்றின் பக்கங்களில் பதிந்திருக்கிறது.

விருதுநகரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை, ‘மருதிருவர்’ போல, கழகத்தை அந்த மண்ணில் வளர்த்தெடுக்கும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும், இரவு-பகல் பாராது மேற்கொண்டு வருகின்றனர். விழா ஏற்பாட்டுப் பணிகளை உங்களில் ஒருவனான நானும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். விழா பிரம்மாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை.

“வெற்றிச் சரிதம் எழுத, விருதை அழைக்கிறது” : முப்பெரும் விழா குறித்து உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!

ஆயிரமாயிரமாய், இலட்சோப லட்சமாய் திரண்டுவரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.

செப்டம்பர் 15, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, கழகத்தின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது. சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கிவைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன்பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் ‘விருதை’ அழைக்கிறது.

முப்பெரும் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும் கலங்கி நிற்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள்.

பதவிப் பொறுப்புகளைவிட கழகக் கொள்கை வழிப் பயணமே இலட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை திரு. இரா.மோகன் அவர்கள், அண்ணா விருது பெறவிருக்கிறார்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கண்ணசைவுக்கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றி இன்று கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற திரு. டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள், கலைஞர் விருது பெறவிருக்கிறார்.

அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தினை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய புதுச்சேரி திரு. சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார்.

கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் திரு. சீனிவாசன் அவர்கள், பேராசிரியர் விருது பெறவிருக்கிறார்.

இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் கழகத்தின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

முத்தாய்ப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில்தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது.

‘உடன்பிறப்பே..’ என்று அவர் அழைத்தால், செவிமடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ!

எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது!

நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்!

banner

Related Stories

Related Stories