தமிழ்நாடு

புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும்: நம்பிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர்தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும்: நம்பிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.09.2022) சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், “புதுமைப் பெண்” திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:

Today, we have Hon’ble Chief Minister of Delhi Thiru. Arvind Kejriwal, as the special invitee, for the launch of, three important and revolutionary schemes. He is not just the CM of Delhi. He is a FIGHTER!

He left his I.R.S job and entered public life to serve the people. With his hard work, he has become the Chief Minister of Delhi. Recently, he has made his party win in Punjab also. He is always very active. He is closely watched by everyone in the country.

We are happy that he is among us today, in Tamil Nadu. It is happy moment for Bharathi Women’s College, that, such a celebrated leader has come to your college.

When I visited Delhi this year on 1st of April, I had the opportunity to see the Government Schools there. Tamil Nadu School Education Minister Anbil Mahesh also was with me.

Just as everything else in the country is getting modernized, our class rooms also need to be modern and attractive to our children. We planned to create such schools in Tamil Nadu and requested Hon’ble Arvind Kejriwal to come as a guest for the launch. Accepting my invitation, he is here today. On behalf of all of you, I welcome him.

நிமிர்ந்த நன்னடை,

நேர்கொண்ட பார்வை,

திமிர்ந்த ஞானச் செறுக்குக்கு பெயர் பெற்றிருக்கக்கூடிய சிங்கப் பெண்களே!

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடக்கூடிய உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்!

இப்போதே, உங்கள் வங்கிக் கணக்கில், உங்களுக்கான கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. வந்திருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள். வந்தவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கையை உயர்த்தி காட்டுங்கள். பார்ப்போம். நன்றி, நன்றி.

அதற்கான குறுஞ்செய்தியை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்ற இனிய செய்தியோடு என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.

தமிழ்நாட்டினுடைய பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் மாபெரும் பாய்ச்சலாக அமையவுள்ள திட்டங்களைத் தொடங்குகிற இந்நன்நாளில், மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியையும் தொடக்கத்திலேயே உங்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன்.

76 ஆண்டுகளைக் கடந்து கல்வித் தொண்டாற்றி வரக்கூடிய, உங்கள் பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டடங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. உங்கள் தேவையினை உணர்ந்து, உடனே, ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில், 33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர் அறைகள் கொண்ட, தரைத்தளத்துடன் கூடிய 3 அடுக்குக் கட்டடம் கட்ட நான் ஆணையிட்டிருக்கிறேன். விரைவில் அந்தப் பணிகள் முடிந்து அந்தக் கட்டடம் நிச்சயமாக உங்களுடைய பயன்பாட்டுக்கு வரும்.

இந்திய நாட்டினுடைய முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக, கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களின் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நாள் இந்த நாள்.

இந்திய விடுதலைக்காகத் தனது உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்த கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், வீரமிகு வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாள் இன்று. இப்படி பல பெருமைகளை கொண்டிருக்கக்கூடிய நாள் தான், இந்த நன்னாள்!

ஆக, தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான, முத்தான திட்டங்கள் இந்த நல்ல நாளில் தொடங்கி வைக்கப்படுகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வித் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கக்கூடிய வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்

12-ஆம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய மகத்தான திட்டம் இந்தத் திட்டம்.

15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

எனது வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. அதை நினைக்கத்தக்க வகையில் மிக முக்கியமான நாளாக இது அமைந்திருக்கிறது.

கல்வி எனும் நீரோடை

ஏழை, பணக்காரர் -

உயர்ந்தவர், தாழ்ந்தவர் -

உயர்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி -

கிராமம், நகரம் - என்ற வேறுபாடும், மாறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த அடிப்படையில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்.

புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும்: நம்பிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உயர்த சாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும்; அதுவும் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்று இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி தான்.

அந்தச் சமூகநீதியை, அரசியல்ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். ஆட்சி ரீதியாக அதைக் காத்தவர்கள் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்! அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது.

இன்றைய நாள் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அது திராவிட இயக்கம் தான். அந்த திராவிட இயக்கத்தினுடைய பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன்.

1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டை இந்த நிகழ்ச்சியில் நினைவுகூர்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த மாநாட்டில் தான் பெண்களுக்குச் சொத்துரிமை, பணியுரிமை, மறுமணம் செய்துகொள்ளலாம், தாங்களே தங்கள் இணையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனப் பல புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மாநாடு தான் அந்த மாநாடு.

அதன் நீட்சியாகத்தான், 1989-ஆம் ஆண்டு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களுக்குச் சொத்தில் சமவுரிமை வழங்கக்கூடிய திட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்றித் தந்த தலைவர் தான் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம்! இன்னும் சொல்லப் போனால், பெண்கள் படித்தே ஆக வேண்டும் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது.

அந்த வரிசையில் கல்வி - சமூகநீதி - பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். உயர்கல்வியிலும் - பள்ளிக்கல்வியிலும் - சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச்சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.

இல்லம் தேடிக் கல்வி

நான் முதல்வன்

அதன் ஒரு பகுதியாக கல்லூரிக் கனவு மற்றும்

இன்று தொடங்கப்பட்டிருக்கக்கூடிய புதுமைப் பெண் - ஆகிய திட்டங்கள், நமது ஆட்சியினுடைய அடையாளங்கள்!

புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும்: நம்பிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பள்ளியில் படிக்க வரும் மகளிருக்கு, கல்லூரிக்கு வருவதற்குத் தடையும், தயக்கமும் இருக்கிறது. அந்தத் தடையை உடைப்பதற்குத்தான் இந்த புதுமைப் பெண் திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

'படிக்க வைக்க காசு இல்லையே' என்ற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது. இன்றைக்கு மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கி இருக்கிறது. இதனால், மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை செலவு மிச்சம் ஆகிறது என்று பெண்கள் சொல்கிறார்கள். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை நான் இங்கு பேசமாட்டேன். இதன் மூலமாக எத்தனை லட்சம் பெண்கள் சிறப்பு அடைகிறார்கள் என்பது தான் நம்முடைய இலட்சியம்! அந்த வகையில், அது ஒரு முதலீடுதான்!

அத்தகைய எண்ணத்தோடுதான் இந்த புதுமைப் பெண் திட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் என்று இதற்குப் பெயர்.

திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர்தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்!

அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை, அதற்காக குரல் கொடுத்தவர் தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைக் காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர்.

1938-ஆம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காகத் திருச்சி முதல் சென்னை வரை நடந்த பேரணியில் நடந்து வந்தவர் அவர். திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகள் தரவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முடிவெடுத்து, அதன் மூலமாக, முதன்முதலாக வழங்கியது மூவலூர் அம்மையாருக்குத்தான் அந்த விருது வழங்கப்பட்டது. அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நான் எப்படி, எந்த நோக்கத்துக்காக உருவாக வேண்டும் என்று சிந்தித்தேனோ அதே நோக்கத்துடன், சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார், அமைச்சர் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கீதா ஜீவன் அவர்கள். அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

அவரை நான் ஏற்கனவே தூத்துக்குடியில் பாராட்டிப் பேசுகிறபோது சொன்னேன். பெண் சிங்கம் என்று நான் பாராட்டி இருக்கிறேன். பெண்களின் வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியர்க்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது.

சமூகநீதி என்றால் என்ன என்பதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னார்...

அதாவது, மந்தைகளில் இருந்து ஆடுகளை ஓட்டி வரக்கூடிய ஒருவர், ஒரே ஒரு ஆட்டை மட்டும் தன்னுடைய தோளில் தூக்கி வருவார். அந்த ஆடு, நடக்க முடியாததாக இருக்கும். அல்லது காலில் காயம் பட்டதாக இருக்கும். அதுதான் சமூகநீதி என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படி தோளில் தூக்கி எடுத்து வருவது அந்த ஆட்டுக்குக் காட்டும் சலுகை அல்ல, அந்த மேய்ப்பவரின் கடமை! அத்தகைய கடமை, திராவிட மாடல் தமிழ்நாடு அரசுக்கு இருப்பதால்தான் நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாகத் தமிழ்நாட்டின்

கல்வி வளர்ச்சி அதிகமாகும்.

படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும்.

அறிவுத்திறன் கூடும்.

திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள்.

பாலின சமத்துவம் ஏற்படும்.

குழந்தைத் திருமணங்கள் குறையும்.

பெண்கள் அதிகாரம் பெறுவார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் சொந்தக் காலில் நிற்பார்கள்.

யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்க்க வேண்டாம்!

எந்தக் கொடுமையையும், இழிவையும் அவர்கள் சகித்துக்கொண்டு, அடங்கிப் போக வேண்டாம்!

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நமது ஆட்சியினுடைய மையக் கருத்து என்பது இதுதான். அனைவருக்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதே! அதனை மனதில் வைத்துத்தான் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாதிரிப் பள்ளிகளும், தகைசால் பள்ளிகளும் இதே நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில்தான் ஸ்மார்ட் வகுப்புகள் இருக்குமா?

அரசுப் பள்ளிகளிலும் நாம் உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் இதனை நாம் இன்றைக்கு உருவாக்கி இருக்கிறோம். பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒருமாதிரி கல்வி, அது இல்லாதவர்களுக்கு இன்னொரு மாதிரி கல்வி அல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரி கல்விதான் நம்முடைய நோக்கம்!

கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையானது மகத்தான பல சாதனைகளைச் செய்துள்ளது. இதனை நினைத்து உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன்.

இல்லம் தேடிக் கல்வி

நான் முதல்வன்

பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குச் சிறப்பு நிதி

1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்

பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடிவினா போட்டிகள்

மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி

ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்

கணித ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

வகுப்பறை உற்று நோக்கு செயலி

வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்

இளந்தளிர் இலக்கியத் திட்டம்

வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம்

கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு தரப்பட்டுள்ளது.

மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி வழங்கப்பட்டுள்ளது.

இதோ இப்போது மாதிரிப் பள்ளிகள்- தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும்: நம்பிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதல்கட்டமாக 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளியினுடைய கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்துத் திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அதாவது மாணவர்களின் பல்துறைத் திறன் வெளிக்கொண்டு வரப்படும்.

இவை அனைத்து மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும்.

பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. பள்ளி வசதி ஏற்படுத்துதல், சமத்துவம், உள்கட்டமைப்பு, கற்றல் விளைவுகள், மற்றும் நிர்வாகம் ஆகிய அளவுகோல்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதை விட அமைச்சராக இருக்கக்கூடிய அன்பில் மகேஸ் அவர்களுக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும்? பள்ளிக்கல்வித் துறை நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களின் பெயரை மட்டும்தான் நான் இங்கே சொன்னேன். இதன் பயன்களை விளக்கிச் சொன்னால் பல மணி நேரம் ஆகும்.

'இத்திட்டங்களின் மூலமாக தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது ஒளிமயமானதாக அமையும். இதனை எதிர்காலம் நிச்சயமாகச் சொல்லும்.

தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுடன் தீட்டப்படக்கூடியவை! பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டுகிறோம்.

ஒரு சிற்பி, சிலையைச் செதுக்கும்போது ஒவ்வொரு நொடியும் கவனித்து, கவனித்துச் செதுக்குவதைப் போல தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியானது கவனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த வாய்ப்பைத் தமிழ்நாட்டின் இளைய தலைமுறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்!

நீங்கள் அனைவரும் நன்கு படியுங்கள். ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாதீர்கள். உயர்கல்வியைப் படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சிகள் செய்யுங்கள். பட்டம் முடித்ததோடு நின்று விடாதீர்கள். தகுதியான வேலைகளில் சேருங்கள். பெண்களுக்குப் பொருளாதார விடுதலை என்பது மிக மிக முக்கியம். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கும் காலத்தில் திறமையாகச் செயல்படக்கூடிய பல பெண்கள், திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். கல்வி அறிவும், கலைத்திறனும், தனித்திறமைகளும் தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துக்கள்! அதனைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுக்க நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைக்கும்பொழுது, ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு நான் உங்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இன்றைக்குக் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அந்தப் புதுமைப் பெண் திட்டத்தை ஒட்டிய, அந்த அழகிய பையில், நேர்த்தியாக இருக்கக்கூடிய நலிணமும் அடங்கியிருக்கிறது. அந்தப் பையை நீங்கள் திறந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், என்பது குறித்து விளக்கமான விபரங்கள் அடங்கிய ஒரு கையேடு ஒன்று உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. அது உயர்கல்வி படிக்க உங்களுக்கு பெரிதும் உதவும். அது மட்டுமல்ல, மாதா மாதம் 1000 ரூபாய் பெறப்போகக்கூடிய நீங்கள் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தான, நிதியை எப்படி கையாளுவது குறித்தான வழிமுறை. அது குறித்தும் கையேடு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாதா மாதம் உங்களுடைய வங்கிக் கணக்கில் அது வரவு வைக்கப்படும். இந்த 1000 ரூபாயை நீங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். உங்களுடைய தாய், தந்தையரின் ஆலோசனையைப் பெற்று, ஆனால் உங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே நீங்கள் பயன்படுத்துங்கள்.

மீண்டும் சொல்கிறேன், நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் தந்தையின் இடத்தில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களைக் கொண்டு வருவோம்.

இவ்விழாவைத் தொடங்கி வைப்பதற்காக எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கக்கூடிய தில்லியினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories