தமிழ்நாடு

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.08.2022) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” திருப்பூர் மண்டல மாநாட்டைத் தொடங்கி வைத்து, தொழில் முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

விடுதலைப் போராட்ட காலத்திலும் - திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த திருப்பூர் நகரத்தில் இந்தச் சிறப்பான நிகழ்ச்சி குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி திருப்பூருக்கு பல சிறப்புக்கள் உண்டு.

அப்படிப்பட்ட சிறப்புக்குரிய இந்தத் திருப்பூருக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே தான் திருப்பூர் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அந்த மாநாகராட்சியை உருவாக்கித் தருவதற்காக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமல்லாமல், இதே திருப்பூருக்கு நேரடியாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வருகை தந்து அந்த மாநகராட்சியை அவர்தான் தொடங்கி வைத்தார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன், காரணம், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரம். அந்த நிகழ்ச்சியிலே தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள், அரசியல்வாதிகள், பெரியோர்கள், தொழிலதிபர்கள் ஒரு கோரிக்கையை அழுத்தந்திருத்தமாக எடுத்து வைத்தார்கள், இதை தனி மாவட்டமாக உருவாக்கித் தர வேண்டும் என்று. அதே மேடையில், திருப்பூர் மாநகராட்சியின் தொடக்கவிழா மேடையிலேயே இந்த மாவட்டம், திருப்பூர் மாவட்டமாக, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற அந்த அறிவிப்பையும் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான் அறிவித்தார்கள் என்பது வரலாறு. அப்படிப்பட்ட இந்த திருப்பூர், பல சிறப்புக்களை பெற்றிருக்கக்கூடிய மாவட்டமாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்று குறிப்பாக இந்த மாவட்டத்திற்கு இந்த ஓன்றேகால் ஆண்டு காலத்திற்குள்ளாக நான் நான்காவது முறை வந்திருக்கிறேன். இன்னும் வருவேன், வந்துகொண்டே இருப்பேன், அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

வந்தாரை வாழ வைக்கக்கூடிய திருநகராக இந்த திருப்பூர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - ஆகிய மூன்றும் முக்கியம் என்பார்கள். அதில் முக்கியமாக, உடுக்க உடை என்றால், அதில் திருப்பூர் இல்லாமல் இருக்க முடியாது. இந்தியாவின் பின்னலாடையின் தலைநகரமாக இருப்பது இந்த திருப்பூர். திருப்பூர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது பின்னலாடைதான். அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் திருப்பூருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது.

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி

இன்றைய தொழிலாளி - நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்களாக அமைந்திருக்கிறது!

திருப்பூரில் இப்போது தொழிலதிபர்களாக உள்ள பெரும்பாலானோர் தொழிலாளர்களாக இருந்து தொழிலதிபர்களாக முன்னேறி வந்திருக்கக்கூடியவர்கள். அதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

திருப்பூரின் மொத்த பின்னலாடை உற்பத்தி ஏறத்தாழ 60,000 கோடி ரூபாய். இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 57,900 MSME நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் எட்டு லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

பின்னலாடை மட்டுமல்லாமல்

காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் அரிசி ஆலைகள்,

வெள்ளக்கோவில், காங்கேயம் பகுதிகளில் சமையல் எண்ணெய்,

ஊத்துக்குளியில் நெய்,

காங்கேயம், தாராபுரம், உடுமலைபேட்டை பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள்,

திருப்பூர், அவினாசி, பல்லடம் பகுதிகளில் அட்டைப்பெட்டி, விசைத்தறி மற்றும் தானியங்கி விசைத்தறி.

திருமுருகன்பூண்டி மற்றும் அவினாசி பகுதிகளில் கற்சிற்பம் மற்றும் வெட்கிரைண்டர் அரவை கற்கள்

பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி ஆலைகள்

என பல்வேறு தொழில்களில் திருப்பூர் முன்னணியில் விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் குறு, சிறு நடுத்தரத் தொழில்களின் மையமாகவே இந்த திருப்பூர் மாவட்டம் இருக்கிறது.

இது போன்றே மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்று முதலமைச்சர் என்கின்ற முறையில் நான் ஆசைப்படுகிறேன்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாகிறார்கள். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வு செழிக்கத் தொடங்குகிறது.

பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் இதில் நாம் தனிக்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

“தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற முழக்கத்தோடு MSME நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இத்தகைய தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழ்நாடு அரசானது, தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நாம் நடத்தி வருகிறோம்.

கடந்த 15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு,

அதன்மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 MSME நிறுவனங்களும் இதில் அடங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் 1522 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியைத் தொடங்கி 1909 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது.

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நான் நேரில் சென்று தொழில்முனைவோர்களை, தொழிலதிபர்களைச் சந்தித்து அவர்களின் தேவையை அறிந்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறேன். அந்த வகையில் நான் இன்று உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

இன்றைய நாள் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாகப் பெறலாம். இணையத் தளம் மூலம் இத்திட்டம் இயங்கும். முதல் கட்டமாக ஆறு வங்கிகளை இணைப்போம். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடிக்கான தளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்கள், காலதாமதங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. நடைமுறை மூலதனக் கடன் தேவையைக் குறைப்பதற்கு இது பயன்படும். அரசு தரும் உத்தரவாதம் காரணமாக வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, மிகக் குறைந்த வட்டியில் கடன்களை அளிப்பார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களூக்கான வங்கிக் கடனுக்கான சொத்துப் பிணையம் பத்திர பதிவு செய்திட ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்தின் மீது கடன் பெற்றதை பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் வங்கிகளிலிருந்தே ஆன்லைன் மூலமே உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்திடும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பட்டியலின பழங்குடியின மக்களுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தொழில் துறையில் சமூகநீதியை நிலைநாட்டும் பணியாக இதனை நாங்கள் நினைக்கிறோம்.

வங்கிகள் மூலமாக எளிதில் கடன் கிடைக்க தாட்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் இதன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2092 நிறுவனங்களுக்கு 2113 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு MSME நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன்தொகையை பொறுத்தமட்டில் 86 விழுக்காடு தொகை MSME நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மனைகள், குறைந்த விலையில் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் பேட்டைகளில் மனைகளின் மதிப்பீட்டு விலை குறைக்கப்பட்டு இருப்பது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.

கோவையில் சொலவம்பாளையம் கிராமத்தில் புதிய தொழில் பேட்டை அமைக்க இன்று நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 42.42 ஏக்கரில் இது அமைய இருக்கிறது.

சிட்கோ மூலம் 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் 81.85 ஏக்கர் மொத்த பரப்பில் அமைய இருக்கின்றன.

சென்னையில் அம்பத்தூர், கிண்டி தொழில் பேட்டைகளில் 150 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்கு மாடி தொழில் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

MSME நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகவும், இந்நிறுவனங்களின் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கவும், அரசு பெருங்குழுமத்திட்டம் மற்றும் குறுங்குழுமத் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெருங்குழுமங்களுக்கான பொது வசதி மையங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும், தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற அந்த நோக்கோடு சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவில் 75 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாநில புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களைக் கொண்ட பல்வேறு குழுமங்களை அமைக்க முடிவெடுத்திருக்கிறோம்.

திருப்பூர் மாவட்டம், நாராணாபுரத்தில் 15 கோடியே 34 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக பொது வசதி மையம் அமைக்கப்பட்டு தொழில் முனைவோர்களின் உபயோகத்திற்காக இன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் 24 கோடியே 55 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் 100 தொழிற்கூட அலகுகள் கொண்ட அடுக்குமாடி உற்பத்தி வளாகம், காட்சி மையம் மற்றும் பொது வசதி மையம் அமைப்பதற்கு இன்று என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஈரோட்டில், மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம்,

ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம்,

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குழுமம்,

காஞ்சிபுரத்தில் நரிக்குறவர் பாசிமணி குழுமம்,

விருதுநகர் தளவாய்புரத்தில் மகளிர் நெசவுக் குழுமம்,

கோயம்புத்தூரில், அலுமினியம் டை காஸ்டிங் குழுமம்,

மதுரையில், பொம்மைக் குழுமம்

தூத்துக்குடியில், ஆகாயத்தாமரை கைவினைப் பொருட்கள் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சியுடன் இத்தொழில்களுக்குத் தேவையான பணியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் பணியையும் செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் படிப்பில் மட்டுமின்றி அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய நான்காம் தொழில் புரட்சிக் காலத்தில் புதிய தொழில் நுட்பங்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதற்கு வழிகாட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு கைகோர்த்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத் தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்.

MSME நிறுவனங்கள், திறன் வாய்ந்த பொருளாதார முன்னேற்றங்களை அடைவதற்கு அடித்தளமாக செயல்பட்டு, அந்நிறுவனங்களை சர்வதேச அரங்கில் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்கோடு எம்-டிப் அமைப்பினை Re-branding செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து ஃபேம் டி.என் (FaMe-TN) (Facilitating MSMEs of Tamil Nadu) என இன்று Re-branding செய்யப்பட்டுள்ளது.

ONDC (Open Network for Digital Commerce) எனப்படுகின்ற திறந்த வலைப்பின்னல் இணைய வர்த்தக தளம் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த ONDC தளத்தில் தமிழ்நாட்டிலுள்ள MSME நிறுவனங்கள் இணைந்திட வழிகாட்டிடும் வகையில் FaMe-TN நிறுவனமும் ONDC நிறுவனமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனை நமது MSME நிறுவனங்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என நான் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒற்றைச் சாளர இணையத் தளம் 2.0-வை நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை, MSME நிறுவனங்களிடமிருந்து 10,555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த விண்ணப்பங்களில் 87 விழுக்காடு என்பதை பெருமையோடு நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் ஒரு முக்கிய பொருளாதார முன்னேற்றத்திற்கான தொழிலாக விளங்குகிறது. தமிழகம் முழுவதும் கயிறு குழுமங்கள் உருவாக்கி கயிறு தொழிலை மேம்படுத்துவதன் மூலம், தொழில் முனைவோர்கள் மட்டுமல்லாமல், தென்னை விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற அந்த நோக்கோடு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்.

15 மாதத்தில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 3 லட்சம் பேருக்கு வேலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை இங்கு வெளியிடலாம் என நினைக்கிறேன்.

ஹோம் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஆண்டொன்றுக்கு 8000 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகைப் பொருள்கள் தயாரிப்பை சிறப்பு வகைத் தொழில்கள் (Thrust Sector) பிரிவில் சேர்த்து, MSME துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. சிறப்பு வகைத் தொழில்கள் (Thrust Sector) பிரிவில் சேர்க்கப்பட்டு, முதலீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கிறேன்.

இதனால் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு செவிமடுக்க இந்த அரசு எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறது.

உங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்கித் தருவதற்காகவே நாங்கள் இருக்கிறோம்.

நாங்கள் இத்தகைய பொறுப்பை வகிக்கிறோம்.

புதிய புதிய தொழில்களை அறிமுகம் செய்யுங்கள்.

இருக்கும் தொழில்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுங்கள்.

அதன் மூலமாக உங்கள் வட்டாரத்தின் சமூக, பொருளாதாரச் சூழலை வளர்த்தெடுங்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து மாநிலத்தையும், ஒட்டுமொத்தமாக இந்திய நாட்டையும் அது நிச்சயமாக வளர்க்கும், அந்த நம்பிக்கையோடு உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories