தமிழ்நாடு

“இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு”: இலவசங்கள் கூடாது என அறிவுரை சொல்பவர்களுக்கு பாடம் எடுத்த முதல்வர்!

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு”:  இலவசங்கள் கூடாது என அறிவுரை சொல்பவர்களுக்கு பாடம் எடுத்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.8.2022) சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:

தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுச் சுழன்று பணியாற்றி வந்தாலும் என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வருகிறபோது நான் அடையக்கூடிய மகிழ்ச்சி என்பது ஒரு அலாதியானது.

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு

வாழும் மனிதர்க்கு எல்லாம்.

பயிற்றுப் பல கல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்த வேண்டும்" - என்று பாடினார் மகாகவி பாரதியார் அவர்கள். அந்த வகையில் ஒரு கல்லூரி. என்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு அமைந்திருப்பது என்பது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை, கூடுதல் மகிழ்ச்சி.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அந்த துறையினுடைய அமைச்சர் அனைவராலும் செயல்பாபு, செயல்பாபு என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய சேகர்பாபு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், கோரிக்கை வைக்காமலேயே நம்முடைய அமைச்சர் அவர்கள் அதை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். அதற்காக நான் அமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை இந்தத் தொகுதி மக்களின் சார்பில், இந்தத் தொகுதினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்த முறையில், முதலமைச்சராக அல்ல. அந்த வகையில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் முதல் அமைச்சரிடத்தில் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முதலமைச்சராக இருக்கக் கூடிய நான் யாரிடம் கோரிக்கை வைப்பது? அதனால் தான் பத்தில் ஒரு கல்லூரியை நான் கோரிக்கை வைக்காமலேயே நம்முடைய அமைச்சர் அவர்கள் நம்முடைய தொகுதிக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2.11.2021 ஆம் நாள் நான் தொடங்கி வைத்தேன். B.Com, BBA, BCA, B.Sc., Computer Science ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் இந்தக்கல்லூரி தொடங்கப்பட்டது. 3.12.2021 அன்று சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. முதலாமாண்டிலேயே 220 மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் முதலாமாண்டு பயில ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

தற்போது மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறைவு பெற்று பல்கலைக்கழக தேர்வுகளும் முடிவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.

இந்தக் கல்வியாண்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய நான்கு பாட பிரிவுகள் மட்டுமில்லாமல் புதிதாக B.A. சைவ சித்தாந்தம் என்ற பாட பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இருக்கக்கூடிய 240 இடங்களுக்கு 1089 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்பது நான் மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.

ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு இக்கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறையையும், கல்லூரியினுடைய முதல்வர், பேராசிரியர்கள் ஆகிய அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இரண்டாம் ஆண்டுக் கல்வியானது இன்று முதல் தொடங்குகிறது. இதனை தொடக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆண்டு புதிதாக சேரவிருக்கும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கட்டணமில்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் நீங்கள் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது. கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய உண்மையான அக்கறையின் காரணமாக, அதுவும் உண்மையான அக்கறையின் காரணமாக, இந்த அரசு செய்யக்கூடிய கடமையாக இதனை நாங்கள் கருதுகிறோம்.

“இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு” என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்லுகிறபோது நீங்கள் இதைத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி

கல்லூரிக் கனவு

நான் முதல்வன்

பள்ளிப்பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி

மக்களைத் தேடி மருத்துவம்

நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள் ஆகும்.

ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறது. “இலவசங்கள் கூடாது” என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு இப்போது புதிதாக வந்திருக்கிறார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதற்கு மேல் பேசினால் இது அரசியல் ஆகிவிடும். அதனால் இதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

ஆனால் அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்ல இருப்பது மூன்றே மூன்று தான்.

முதலில் படிப்பு, இரண்டாவதும் படிப்பு, மூன்றாவதும் படிப்பு.

உங்களது படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு ஆர்வமான தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு”:  இலவசங்கள் கூடாது என அறிவுரை சொல்பவர்களுக்கு பாடம் எடுத்த முதல்வர்!

ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியைத் தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையை பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது தான், ஏதோ சட்டமன்ற உறுப்பினராக அல்ல, முதலமைச்சராக அல்ல, உங்கள் தந்தையாகவே நின்று இந்த நேரத்தில் நான் உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத் துறையானது, இந்தக் கல்லூரிக்கு இன்னும் கூடுதலான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்றும், இதைவிடப் பெரிய கட்டிடத்தைக் கட்டித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேசுகிறபோது, எல்லாத் தொகுதிக்கும் போனேன். அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களை உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொல்லுவோம். ஆனால் இங்கே சொல்லமுடியாது என்று சொன்னார். எல்லாத் தொகுதிகளிலும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள், அங்கேயும் என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாகத் தான் எல்லாத் தொகுதிகளில் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது, இது எங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை, எங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நான் கல்லூரியின், இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது வாசலில், காரை விட்டு இறங்கிய உடன் உங்களுடைய தாளாளர் புருஷோத்தமன் அவர்கள் என்னை வரவேற்றார். அவரே கையைப்பிடித்து நீங்கள் முதலமைச்சராகி 13 முறையாக வருகிறீர்கள் என்று சொன்னார். முதலமைச்சராகி 13 முறையாக வருகிறேன், அதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது பல முறை வந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கு வருவதற்கு கணக்கே இல்லை. ஆக, அந்த அளவிற்கு இந்தத் தொகுதியோடு இரண்டற கலந்திருக்கக்கூடியவன் நான், தொடர்ந்து என் மீது பாசம் கொண்டிருக்கக்கூடியவர்கள், இந்தத் தொகுதியில் இருக்கக்கூடியவர்கள், அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் மேலும், மேலும் வளர்ச்சிப் பெற வேண்டும், முன்னேற்றத்திற்கு வழி காண வேண்டும் என்று உங்களை அன்போடு வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories