தமிழ்நாடு

“உச்சநீதிமன்ற கிளை.. உயர்நீதிமன்றத்தில் ‘தமிழ்’ வழக்காடு மொழியாக வரவேண்டும்” : முதல்வர் வைத்த கோரிக்கை!

“சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலாவது உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தினகரன் நாளேடு தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

“உச்சநீதிமன்ற கிளை.. உயர்நீதிமன்றத்தில் ‘தமிழ்’ வழக்காடு மொழியாக வரவேண்டும்” : முதல்வர் வைத்த கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலாவது உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தினகரன் நாளேடு தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தினகரன் நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “சென்னையில் நடந்த மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைய வேண்டும் என்பதும், உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வரவேண்டும் என்பதும் நீதித்துறைக்கு இப்போதைக்கு அவசியம் தேவையானதாகும். அவை இரண்டையும் தமிழக முதல்வர் முன்வைத்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

கடந்த காலங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்களும், கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன், இந்தியும் அலுவல் மொழியாக உள்ளது. அந்த வகையில் உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கும் வழக்காடு மொழிக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இதே கோரிக்கை அதிமுக ஆட்சிக்காலத்திலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இருமுறை இகோரிக்கையை நிராகரித்துவிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்று விட்டது. கீழமை நீதிமன்றங்களிலும் சிலர் ஆங்கிலத்தில் மனுத்தாக்கல் செய்து, ஆங்கிலத்திலேயே வாதிட்டாலும், தமிழுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பு சட்டம் 348(2)வது பிரிவில் ஒரு மாநிலத்தின் கவர்னர், குடியரசு தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கை அந்தந்த மாநிலத்தில் அலுவல் மொழியாக இருக்கலாம் என தெளிவுப்படுத்துகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இருப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இருக்க போவதில்லை. இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து நீதிபதிகள் மற்றும் வக்கீல்களின் நிலையை கருத்தில் கொண்டே பிராந்திய மொழிகளை தவிர்த்து, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுவதும் அந்த வகையில்தான். உயர்நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் வரும் நிலையில், அம்மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழி வழக்காடு மொழியாக இருந்தால், தீர்ப்புகளின் சாராம்சங்கள் அனைவருக்கும் எளிதாக புரியும்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வழக்காடு மொழியாவதற்கான கட்டமைப்புகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்மொழியில் தரமான சட்ட நூல்கள், தமிழ்மொழிக்கேற்ப சட்ட தொழில்நுட்பங்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முதல்வர் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்ப உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்றப்பட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைவதும் தமிழகத்திற்கு முக்கிய தேவையாகும். நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் செய்யப்படும் மேல் முறையீடுகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

பாராளுமன்ற நிலைக்குழுக்களும். சட்ட ஆணையங்களும் உச்சநீதிமன்ற கிளைகளை மாநிலங்களில் அமைத்திட பல்வேறு பரிந்துரைகளை ஏற்கனவே செய்துள்ளன. குறைந்தபட்சம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலாவது உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories