தமிழ்நாடு

“சீமைக் கருவேலம் மரத்தை அழிக்க கொள்கை முடிவு..” : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு !

தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் அதை நிறைவேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

“சீமைக் கருவேலம் மரத்தை அழிக்க கொள்கை முடிவு..” : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

அது தொடர்பாக ஜூலை 13ம் தேதி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறி அரசாணையை தாக்கல் செய்தார். மேலும், சீமைக் கருவேல மரங்களை இயந்திரம் மூலமும், ரசாயன முறை மூலமும் அகற்றக்கூடிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. முன்னேற்றம் என்பதை காகிதத்தில் மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வரப்படுகிறது.

அதனால் அரசாணை மற்றும் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அரசின் கொள்கை முடிவை தாக்கல் செய்துள்ளார். சீமைக் கருவேல மரங்கள் மற்றும் அன்னிய மரங்கள் காடுகளை அழித்து சுற்றுசூழலை பாதித்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் எல்லாம் இந்த மரங்கள் உள்ளன என்பதை பகுதி வாரியாக கணக்கெடுத்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கொள்கை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் அதை நிறைவேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இருந்த போதிலும் அரசின் நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் கண்காணிக்கும்.

எனவே, சீமைக் கருவேல மரங்கள் மற்றும் அன்னிய மரங்களை அகற்றுவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அப்போதைக்கப்போது நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். காடுகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலில் இருந்தும் இந்த மரங்களை தாமதம் இல்லாமல் அகற்ற வேண்டும்.

இதற்காக ஒரு நிதியை அரசு ஒதுக்க வேண்டும். ஏற்கனவே, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டதைப்போல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலும் இந்த திட்டத்தை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி ஒத்திவைத்துள்ளார். அன்று அரசு வகுத்துள்ள கொள்கை முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories