தமிழ்நாடு

“தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

“தமிழ்நாடு 3-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது, இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ் ஆக அமைந்திருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது உரையைத் தொடங்குவதற்கு முன்னால், மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய தமிழ்நாடு 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது. 14-ஆவது இடத்தில் இருந்து, இன்றைக்கு தமிழ்நாடு 3-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது, இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ் ஆக அமைந்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலயச் சாதனையை நாம் அடைந்திருக்கிறோம். இதற்கு முழுமுதல் காரணமாக அமைந்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடந்த காலங்களில் நம்முடைய கழக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து, மிக மிகச் சிறப்பாக பணியாற்றியவர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள். இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா? வேறு துறையை வழங்குவதா? என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று தொழில் துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.

கடந்த காலத்தில் மிக மிகத் தொய்வாக இருந்த இந்தத் துறையை மீட்டெடுப்பதற்கு, ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளைத் துணிச்சலாக செய்யக் கூடிய தங்கம் தென்னரசு இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அவர் பெயரை நான் ’டிக்’ செய்தேன்.

என்னுடைய தேர்வு சரியாக இருந்தது என்பதை நித்தமும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் தொழில்துறையைத் தங்கமாக மாற்றி வரும் தங்கம் தென்னரசு அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அதேபோல, இந்தத் துறையின் செயலாளர் கிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களும், அவருக்கு துணைநிற்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரையும் நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மாநாடு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு தொடங்கியிருக்கிறது. தொழில்துறை சார்பாக நடக்கும் இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதில் மிக்க பெருமையும், மகிழ்ச்சியும் நான் அடைகிறேன்.

“தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். சென்னையில் இரண்டு மாநாடுகள் நடந்திருக்கிறது. கோவையில் ஒரு மாநாடும் - தூத்துக்குடியில் ஒரு மாநாடும் - துபாயில் ஒரு மாநாடும் நடந்துள்ளது.

இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்திற்குள் ஆறு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதே ஒரு மிகப்பெரிய சாதனை.

அனைவருக்குமான வளர்ச்சி – அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி – அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ மாநிலத்தை நோக்கி இந்தியத் தொழிலதிபர்கள் - உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

இன்று இந்த மாநாட்டில், நிதி நுட்பங்களுக்கான தொழில் திட்டங்களுக்காக சிறப்பு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். 10 நாட்களுக்கு முன்புதான், மேம்பட்ட உற்பத்தி (Advanced Manufacturing) தொடர்பான ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாடுகளுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும்.

இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும்.

மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட (Made in Tamil Nadu) பொருட்கள் சென்றடைய வேண்டும்.

நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும்.

இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் அனைத்துத் தொழில் முயற்சிகளும் இந்த நான்கு இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் அடையாளம்தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவது.

“தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

தமிழ்நாடு அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து, தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் மிகவும் மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம் என்று உங்களுக்கெல்லாம் நான் உறுதி தரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைய மாநாட்டின் சிறப்பம்சமாக, நிதிநுட்பத் துறைக்காக பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மின்ணனுமயமாக்கப்பட்ட நிதிச் சேவைகள் அனைத்தும், ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மின்னணுமயமக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாமும் வளர்ந்திட வேண்டியதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.

வளர்ந்து வரும் நிதிச் சேவைகள், துறையின் ஆதரவுடன், உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பத் துறையை தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

இதற்காகவே “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021” - அறிக்கையை கோவையில் நான் வெளியிட்டேன்.

தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு நிதி நுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

டி.என்-டெக்ஸ்பீரியன்ஸ் (TN-Tecxperience) திட்டத்திற்கான இணையதளத்தினையும் நான் இன்று துவக்கி வைத்திருக்கிறேன்.

இந்தத் திட்டம் மூலம் தொழில்நுட்பச் சேவைகள், ஒரே குடையின் கீழ் அளிக்கப்படும். இதற்கான இளைய அறிவுசக்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

என்னுடைய கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தத் திட்டத்தின் குறிக்கோள்களை அடைந்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு, இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நிதிநுட்ப அறிவுச் சூழல் அமைப்பை உருவாக்க, தொழில் மற்றும் கல்வித் துறைகளுடன் இணைந்து பணியாற்றும்.

தொழில் மற்றும் கல்வித்துறைகள் இணைந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் கூட்டாக இந்த முன்முயற்சி செயல்படுத்தப்பட உள்ளது.

“தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

நிதிநுட்ப நகரம்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) சென்னையில் குறைந்தபட்சம் 10 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு நிதி நுட்ப நகரத்தை படிப்படியாக உருவாக்க இருக்கிறது. இதன் மூலம், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களான நிதிச் சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளின் மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.

தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PitchFest) இன்று துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்குத் தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு.

நிதிநுட்பத் தொழில்களை மதிநுட்பத்துடன் நம் மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற்கட்டத்திலேயே வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

இன்றைய தினம், இங்கே, 11 நிதிநுட்பத் திட்டங்களுக்கு நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழு, நிதிநுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு 2 நிறுவனங்களைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த இரு நிறுவனங்களுக்கும் இன்று ஊக்கத் தொகுப்புச் சலுகைகள் அளிப்பதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது வெறும் தொடக்கம்தான். நாங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தில், உங்கள் அனைவரின் ஈடுபாட்டையும் நான் வரவேற்கிறேன். உங்கள் நிதிநுட்பத் தீர்வைகள் மூலம், இந்த மாநிலத்தினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன்.

“தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022” மற்றும் “தமிழ்நாடு ஆராய்ச்சி & மேம்பாட்டுக் கொள்கை 2022” ஆகிய கொள்கைகளை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன். இதன்மூலம் முதலீடுகளை ஈர்த்திடும் வரையறையை, மேலும் நீட்டித்துக் கொள்ள முடியும்.

பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கும்தான். மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, நம் வளர்ச்சிப் பாதைகளை வகுத்துக் கொண்டால், நமது போட்டித்தன்மை பன்மடங்கு அதிகரிப்பதோடு, உலகளவில், நம்மால் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்க முடியும்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.

கடந்த ஆண்டு ஈர்த்த முதலீடுகளைவிட, இந்த ஆண்டு இருமடங்கு முதலீடுகளை ஈர்க்கவேண்டும். அதாவது 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டேன். தமிழகத் தொழில்துறை மீதான நம்பிக்கையால்தான் அந்தக் கட்டளையிட்டேன். அதனால் தான் இந்த இலக்கை வைத்தேன்.

அதற்கேற்றவாறே, இன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்தால், இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இது, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகள்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இங்கு சொன்னது போல, நான் மதிப்பாய்வு மேற்கொண்ட தேதியிலிருந்து, ஒன்றரை ஆண்டு நிறைவு செய்வதற்கு இந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே, தொழில்துறை இந்த இலக்கை அடைந்திருப்பது உள்ளபடியே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக, சுறுசுறுப்பாக, அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் நான் தெரிவித்திருக்கிறேன்.

பல துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்து, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பள்ளிக்கல்வி பயின்றவர்களுக்கு, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய காலணி உற்பத்தி, ஆயத்த ஆடைகள் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களை ஊரகப்பகுதிகளில் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், உயர்கல்வி பயின்றவர்களுக்கு நிதிநுட்பம், உலகளாவிய மையங்கள் (GCC) போன்ற துறைகளிலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறைகளான மின் வாகனம், லித்தியம் அயான் பேட்டரி, பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி, சூரிய சக்தி மின் உற்பத்தி ஆகியவற்றுடன், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலையையும் தூத்துக்குடி பகுதியில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் தூத்துக்குடி பகுதி “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக” (Renewable Energy Hub) உருவாகும்.

உலகளவில் அதிகமாக பேசப்பட்டு வரும் வளர்ந்துவரும் துறையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை - 25,600 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு IGSSV நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டிருக்கிறது.

அதைப் போலவே, எதிர்கால எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வளர்ந்துவரும் துறையாக பசுமை ஹைட்ரஜன் விளங்குகிறது.

52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில் ஆக்மே (ACME) நிறுவனம் தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தித் திட்டத்தை அமைக்க இருக்கிறது. இந்தத் திட்டம் தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவப் போகிறது.

இப்படி அனைத்து வகையான தொழில்களிலும் இறங்கி, முன் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்து வருவதை உங்களைப் போன்ற நிறுவனங்களைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் நன்றாக அறிவீர்கள். அதனால்தான் தமிழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறீர்கள்.

தொழில் புரிவதற்கு எளிதான சூழலமைப்பு (Ease of Doing Business) கொண்ட மாநிலங்களில், அகில இந்திய அளவில் 2020-ஆம் ஆண்டில் 14-வது இடத்திலிருந்த நம்முடைய தமிழ்நாடு, தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதற்கு இதுதான் காரணம். மூன்றாவது இடத்தில் இருந்து விரைவில் முதலிடத்திற்கு வருவோம். அதற்கான திட்டமிடுதலைத் தொடங்கி விட்டோம் என்பதன் அடையாளம் தான் இந்த மாநாடு.

இன்றைய தினம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு மாவட்டங்களில், இந்த நிறுவனங்கள் அமைய இருந்தாலும், 68% முதலீடுகள் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. பரவலான வளர்ச்சி அடைய முயற்சி செய்வோம் என்று நாங்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சொன்னதைச் செய்து வருகிறோம்.

21 திட்டங்களுக்கு இன்றைய மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் இவை தொடங்கப்பட்டுள்ளது. 17,654 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 21 திட்டங்களில், 20 திட்டங்கள் நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

அது போலவே, 1,497 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7,050 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் 12 திட்டங்கள் இப்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம்முடைய கடமை முடிந்து விடுவதாக நாங்கள் இருந்து விடுவது இல்லை. அதனால் தான் ஒப்பந்தங்கள் - நிறுவனங்களின் தொடக்க விழாவாக இது மாறி வருகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மாநாடுகளிலேயே இந்த மாநாடுதான் மிகப் பெரிய மாநாடாக அமைந்துள்ளது. வருங்காலங்களில் இதையும் விட பெரிய முதலீட்டு மாநாடுகளை நடத்த வேண்டும் என்று அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக நீதி மாநிலமான தமிழ்நாடு -

கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு -

சகோதரத்துவ மண்ணான இந்த தமிழ்நாடு -

இந்த வரிசையில் தொழில்துறையில் சிறந்த தமிழ்நாடாகவும் உயர வேண்டும்.

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் என்று கேட்கும் தமிழ்நாடாக இது உயர வேண்டும்.

தொழில்துறையின் வளர்ச்சி என்பது அந்தந்த வட்டாரத்தின் சமூக வளர்ச்சியாக மாறி தமிழ்நாடு உன்னதத் தமிழ்நாடாக, மேன்மையான தமிழ்நாடாக உயர வேண்டும். தமிழ்நாட்டு அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதி படைத்தவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களும் உருவாக வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

அதற்கு இத்தகைய முதலீட்டு மாநாடுகள் அடித்தளமாக அமையட்டும் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories