தமிழ்நாடு

“கே.கே.எஸ்.எஸ்.ஆர் எதையும் முடியாது என்று சொல்லமாட்டார்” : அமைச்சர் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !

சின்ன மருதுவாக நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் - தங்கம் தென்னரசு அவர்களும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கே.கே.எஸ்.எஸ்.ஆர் எதையும் முடியாது என்று சொல்லமாட்டார்” : அமைச்சர் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் பேத்தி Dr தீப்தி - விஷ்வக்சேனா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் - மாவட்டக் கழகத்தின் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை.

இது நம்முடைய வீட்டுத் திருமணம்.

அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.

நம்முடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள், அவருடைய மருமகன் டாக்டர் அருண்குமார் - அவருடைய மகள் உமா மகேஸ்வரி ஆகியோருடைய அன்புக்குரிய புதல்வி தீப்தி அவர்களுக்கும், முரளிதர் - சௌம்யா அவர்களுடைய புதல்வன் விஷ்வக்சேனா அவர்களுக்கும் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சி.

இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக - சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக – இன்னும் நாம் பெருமையோடு பேசிக் கொண்டிருக்கிறோமே, ‘திராவிட மாடல்’-இல் நடைபெறும் திருமண விழாவாக இந்தத் திருமண நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கிறது.

இந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள், நம்முடைய தோழமைக் கட்சியைச் சார்ந்திருக்கும் தலைவர் பெருமக்கள், பல அரசியல் கட்சிகளைச் சார்ந்திருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இங்கே வாழ்த்த வந்திருக்கிறீர்கள்.

"அனைவரின் சார்பில் நீ ஒருவனே வாழ்த்தினால் போதும்" என்று சொல்லி, இங்கே என்னை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரின் சார்பில் நான் மணமக்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் இருக்கிற இடத்தில் எப்போதும் விசுவாசமாக - நன்றி உணர்வோடு இருந்து பணியாற்றுபவர் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அவர் எம்.ஜி.ஆருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அதைத்தொடர்ந்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இன்றைக்கு என்னுடைய தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு - கடமையாற்றி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் - அண்ணா அறிவாலயத்தில் வந்து தலைவர் கலைஞர் அவர்கள் முன்னால் இணைந்து அந்த மாவட்டத்திற்குக் கழகத்திற்காக சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த மாவட்டத்தின் கழகச் செயலாளராக இருந்தவர் அண்ணன் தங்கபாண்டியன் அவர்கள்.

அவருக்கு உடல் நலிவுற்று அவர் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து செல்லும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டதற்குப் பிறகு, அந்த இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, உடனே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்களையே நியமிக்கலாம் என்று முடிவுசெய்து, மாவட்டச் செயலாளராக அன்றைக்கு அந்த பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார்கள்.

அதற்குப் பின்னால் கழகத்தின் வளர்ச்சிக்காக - கழகத்தின் செயல்பாட்டிற்காக அந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, தங்கபாண்டியனுடைய திருமகன், இன்றைக்கு அமைச்சராக இருக்கும் நம்முடைய தங்கம் தென்னரசு அவர்கள் ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளராகவும், இன்னொரு பகுதிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் சொன்னதுண்டு. நேரடியாகச் சொன்னதுண்டு. தென்பகுதியில் எல்லோரும் சொல்வார்கள், பெரிய மருது - சின்ன மருது என்று, அது போல பெரிய மருது – சின்ன மருதுவாக நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் - தங்கம் தென்னரசு அவர்களும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனவே அந்த அளவிற்குத் திறம்பட கழகப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டாக்டர் அருண்குமார் அவர்கள், நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவருடைய மருமகன் அருண்குமார் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரும் ஒரு நல்ல நண்பர் - இனிய தோழராக பழகக் கூடியவர்.

அவர் அடிக்கடி என்னிடத்தில் பேசுவதுண்டு - தொலைபேசியில் பேசுவதுண்டு - நேரடியாக என்னிடத்தில் வீட்டிற்கு வந்து பேசுவதுண்டு.

ஏன் என்றால் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில்தான் அவருடைய வீடும் இருக்கிறது. எனவே அடிக்கடி வந்து பேசுகிறபோது, நாட்டு நடப்புகளை எல்லாம் பேசுவார். எதார்த்தத்தை அப்படியே சொல்வார்.

எங்கெங்கு சரியில்லை - எங்கு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் தெளிவாக சொல்வார். அவர் சொல்லக்கூடிய கணக்கு சரியாக இருக்கும்.

தேர்தல் நேரத்தில் கூட, இந்த இடம் சரியில்லை, இந்த இடம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது - கொஞ்சம் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு செல்வார். எதையும் சரியாகச் சொல்வார்.

அதுமட்டுமல்ல, என்னென்ன சினிமா நன்றாக இருக்கிறது என்று அதையும் சொல்லிவிட்டுச் செல்வார். அவர் சொல்வது சரியாக இருக்கும். அவர் சொன்னால் அந்த சினிமாவை நான் தட்டாமல் பார்த்துவிடுவேன்.

அந்த அளவிற்கு எதையும் எடைபோட்டுப் பேசக்கூடியவர் - எதையும் எடைபோட்டுச் செயலாற்றக்கூடியவர்.

நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களைப் பொறுத்தவரைக்கும் இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஏதாவது பணி ஒன்றை அவரிடத்தில் சொன்னால், எதையும் முடியாது என்று சொல்லமாட்டார். "அதுதானே! பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்வார்.

அண்ணாச்சி... அண்ணாச்சி... என்று எல்லோரையும் அண்ணாச்சி என்று சொல்லி, அவரையும் அண்ணாச்சி என்று சொல்லுமளவிற்கு அந்த ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.

எனவே அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்கு, உமா மகேஸ்வரி – அருண்குமாருடைய புதல்வியாக இருக்கும் தீப்தி அவர்களுக்கு இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்த தீப்தி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களுக்கு மட்டும் பேத்தி அல்ல. எனக்கும் பேத்திதான்.

காரணம் சிறுவயதில் இருந்தே நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பவன். அதேபோல் என்னுடைய தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டபோது, இலண்டனுக்கு அழைத்துச் சென்றபோது, அப்போது அருகில் இருந்த எல்லா சிகிச்சைகளுக்கும் துணைநின்று பணியாற்றியவர் டாக்டர் அருண்குமார் அவர்கள். நான் அதை நிச்சயம் என்றைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக என்னுடைய குடும்பத்தின் சார்பில் நான் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதனால்தான் நான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்தத் திருமணத்திற்கு எப்படியும் வரவேண்டும் என்ற அந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

அதனால்தான் பெருந்தன்மையோடு எல்லோரும், நாங்கள் எல்லாம் பேசவில்லை, நீ மட்டும் பேசி முடித்துவிடு என்று சொன்னார்கள். நான் இதை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லவில்லை.

இன்றைக்கு இயற்கைச் சூழல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு நிவாரணம் காண வேண்டிய ஒரு கூட்டம் கோட்டையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நான் செல்கிறேன். அதனால்தான் நான் மட்டுமே பேசிவிட்டு மணமக்களை வாழ்க... வாழ்க... வாழ்க... என்று வாழ்த்தி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக - நாட்டிற்கு தொண்டர்களாக” வாழுங்கள்... வாழுங்கள்... என்று மணமக்களை மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories