தமிழ்நாடு

“நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

எந்த இடத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரோ அந்த இடத்தில் இப்போது நிற்கிறார். நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்!

“நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்!

அவர் நின்ற இடம் அது!

அமர்ந்த நிலையில் அய்யா பெரியாருக்குச் சிலை வைத்தவர் கலைஞர். ஆட்காட்டி விரலைக் காட்டியபடி அண்ணாவுக்கு அந்த இடத்தில் சிலை வைக்கலாம் என்று சொன்னவர் கலைஞர். (சிலையை நிறுவிய எம்.ஜி.ஆர். முதலில் தேர்ந்தெடுத்த இடம் பூக்கடை. அங்கே வேண்டாம் என்று சொல்லி இடத்தை மாற்றியவர் கலைஞர்! ) அந்த வகையில் அய்யாவுக்கும் அண்ணாவுக்கும் மத்தியில் நிற்கிறார் கலைஞர்.

நிற்க வேண்டிய இடத்தில்தான் நிற்கிறார் கலைஞர். ஏனென்றால் அது அவர் நின்ற இடம். கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்கள். 1976 ஜூன் 3. அவசர நிலைக் காலம். இன்றைய முதல்வர் - அன்றைய தளபதி உள்ளிட்ட தி.மு.க. தளகர்த்தர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்ட காலம் அது. வெளியில் இருந்தபடி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தார் கலைஞர். “என் அன்னையைவிட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்’’ என்று தனது பிறந்தநாள் அறிக்கையில் கலைஞர் எழுதினார். ‘முரசொலி’க்கு அனுப்பினார். தணிக்கைத் துறையில் இருந்ததக்கை மனிதர்கள் அதனை ஏற்கவில்லை.

ஜூன் 2 காலையில், தணிக்கைத் துறை அதிகாரி அலுவலகத்துக்கு முன்னால் உண்ணா விரதம் இருக்க கலைஞர் முடிவு செய்தார். ‘எழுத்துச் சுதந்திரம் பெற நடைபெறும் ஜனநாயகப் போர் இது’ என்று கைப்பட எழுதி அதனை ரகசியமாக பிளாக் எடுத்து அதனையே துண்டுப்பிரசுரமாக அச்சடித்து எடுத்துக் கொண்டு கோபாலபுரத்தில் இருந்து கிளம்பினார். ஆயிரம் விளக்கில் இருந்து அண்ணா சாலையில் நடந்தார். அண்ணா சிலைக்கு முன்னால் நின்றார். பீடத்தின் அடியில் நின்று அனைவர்க்கும் கொடுக்கத் தொடங்கினார்.

“நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

‘சர்வாதிகாரம் வீழ்க - ஜனநாயகம் வாழ்க’ என முழங்கினார். கையில் கழகக் கொடி இருந்தது. காவல்துறை அவரைக் கைது செய்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் அவர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும் - அமைச்சர் பணியாற்று என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவர் என் தம்பி’ என்று அண்ணா சொன்னதை அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் நிறைவேற்றியவர் கலைஞர். அதே அண்ணா சிலைக்கு அருகில் - அதே திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே கலைஞர் நிற்கிறார். நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்!

* * * * *

நிற்க வேண்டிய இடத்தில் தான் நிற்கிறார் கலைஞர். ஏனென்றால் அது அவர் நின்ற இடம். கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்கள். 1977 - முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவர் ஒரு கூட்டத்தில் பேசினார். “அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை உள்ளது. அது அங்கே இருக்கலாமா கூடாதா என்பதை கோர்ட் தீர்மானிக்கும். ஆனால் ஆத்திரத்தில் யாரும் எதையும் செய்துவிட வேண்டாம்” என்று பேசினார். எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைக் கலவரத்தில் கலைஞரின் சிலை உடைக்கப்பட்டது.

‘இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும்’ குறளோவியக் கலைஞராய் இருந்து கவிதை எழுதினாரே தவிர, புதுச்சிலை வைக்க அனுமதிக்கவில்லை. அவரது பெருந்தன்மையே அந்த இடத்தில் நிழலாக நின்று கொண்டு இருந்தது. இப்போது அதே இடத்துக்கு அருகில் நிற்கிறார் கலைஞர். நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்!

* * * * *

கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்கள். இப்போது சிலையாக அவர் நிற்கும் இடத்துக்குப் பின்னால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்தது. தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டமோ, கூட்டணிக் கட்சிக் கூட்டமோ அங்குதான் நடக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பழைய விடுதியானது, பழைய அட்மிராலிட்டி ஹால் என்று சொல்லப்பட்ட பங்களாவில் இருந்தது. 1948க்கு முன்பு வரை சென்னை ஆளுநர்களின் வீடு என்பது அதுதான். அதன்பிறகுதான் கிண்டிக்கு மாறினார்கள்.

“நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

இதன் முதல் தளத்தில் சட்டமன்றக் கட்சிகளின் அலுவலகமாக இயங்கியது. தி.மு.க. அலுவலகத்துக்கு முன்னால் சுவரொட்டி ஒட்டுகிறார்கள், போர்டிகோவில் கார் நிற்கிறது என்று சொல்லி தி.மு.க. அலுவலகத்தை காலி செய்யச் சொன்னார்கள். வெளியில் காரை நிறுத்தி விட்டு கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் நடந்தே உள்ளே வருவார்கள். ஆனாலும் இதனை எம்.ஜி.ஆர். அரசு ஏற்கவில்லை. அலுவலகத்தை காலி செய்யச் சொன்னார்கள். மறுத்தார் கலைஞர்.

1985 மே 30 ஆம் நாள் தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து பொருள்களை எடுத்து வெளியில் வீசினார்கள். கலைஞருடன் இன்றைய முதல்வரும், இன்றைய பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களும், இன்றைய பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்க்காடு வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டமற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது கலைஞர் முடிவெடுத்தார். கழகத்துக்கான ஒரு தலைமைக் கழகக் கட்டடம் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். அடுத்த வாரமே பணிகளைத் தொடங்கினார். அப்படி உருவாக்கப் பட்டதுதான் இன்று கம்பீரக் காட்சி தரும் அண்ணா அறிவாலயம். எந்த இடத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரோ அந்த இடத்தில் இப்போது நிற்கிறார். நிற்க வேண்டிய இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார்!

* * * * *

கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்கள்!

2001 - ஜூன் 29 - தமிழகமே அய்யோ - அய்யோ என்று அலறிய நாள். நான்கு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரின் வீடு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டு - கோடிக்கணக்கானவர்களை தனது குரலால் ஈர்த்த தலைவரின் கழுத்து அமுக்கப்பட்டு - 15 படிகளில் தரதரவென இழுத்து வரப்பட்டார் கலைஞர். தமிழ்நாட்டின் வரலாற்றில் கெட்ட காட்சிகளில் அதுவும் ஒன்று. வீட்டில் இருந்து எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று தெரியாமல் கலைஞர் அழைத்து வரப்பட்டதும் - இதே அரசினர் தோட்டம் - அட்மிராலிட்டி ஹாலுக்குத்தான். அப்போது சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அங்குதான் இருந்தது. உள்ளே கலைஞர் அவர்கள் இறக்கிவிடப்பட்டார்களே தவிர, அழைத்துச் செல்லப்படவில்லை. எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் நிற்பார். கதவு மூடப்பட்டுவிட்டது. கதவைத் திறங்கள் என்று அன்றைய ஒன்றிய அமைச்சர்களான முரசொலி மாறன் அவர்களும் டி.ஆர்.பாலு அவர்களும் முழக்கமிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

உள்ளே சில மணிநேரங்கள் கலைஞர் அவர்கள் வைக்கப்பட்டு இருந்தார். அந்தக் கட்டடமே - அந்த அட்மிராலிட்டி ஹாலே இன்று இல்லை. இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. இழுத்துச் சென்ற காட்சிகளை வீடியோவில் போட்டுப் பார்த்து ரசித்த பெண்மணி, எப்படி இறந்து போனார் என்பதே இந்த உலகத்துக்குத் தெரியவில்லை. ஆனால் கலைஞர் நிற்கிறார். நிற்க வேண்டிய இடத்தில் தான் கலைஞர் நிற்கிறார்.

* * * * *

கொஞ்சம் முன்னோக்கி நினைத்துப் பாருங்கள்!

வைக்க வேண்டியவரை முதலமைச்சராகச் சரியான இடத்தில் வைத்ததால், நிற்க வேண்டிய இடத்தில் நிற்க வைக்கப்பட்டார் கலைஞர்!

Related Stories

Related Stories