தமிழ்நாடு

“ஜூன் 3: கலைஞரின் 99ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம்”: திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

“ஜூன் - 3” - முத்தமிழறிஞர் கலைஞரின் 99-ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம் என தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“ஜூன் 3: கலைஞரின் 99ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம்”: திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், “ஜூன் - 3” - முத்தமிழறிஞர் கலைஞரின் 99-ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம் என தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுத் தெளிந்த இலட்சியப் பிடிப்பின் அடிப்படையில், தன்னைத் தமிழ் உலகிற்குப் பிரகடனப்படுத்திக் கொண்ட கொள்கைச் சிகரமாம் “தமிழினத் தலைவர்” கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளினையொட்டி, அவரது மங்காப் பெரும்புகழ் அவனியில் என்றும் பரவி, எப்போதும் நிலைத்திடும் வகையில், அவர் நாள்தோறும் சிந்தித்து சிந்தித்து பொலிவும் வலிவும் கூட்டிப் ‘‘புதிய தலைமைச் செயலக கட்டடம்” கட்டிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெருமைமிகு நிகழ்வுக்கு, கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம், நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து;

ஆறாம் முறையாக கழக ஆட்சி அமைந்திடவும், ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையினை அரசின் சார்பில் நிறுவிடவும், ஓய்வறியாச் சூரியனாய் ஒவ்வொரு நாளும் உழைத்து, ஓராண்டு சாதனைகளால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்து, இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள முதலமைச்சராக மிக உயர்ந்து நிற்கும் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நெஞ்சத்தில் ஊற்றெனப் பெருக்கெடுத்துவரும் பாராட்டுகளைத் தெரிவித்து இந்தக் கூட்டம் அளவிலா மகிழ்ச்சி அடைகிறது!

“தமிழினத் தலைவர்” கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள், தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் / பெறத் தக்க வகையில், அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்ட கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

‘‘தமிழினத் தலைவர்‘’ கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட - கிளைக் கழகங்கள் வரை, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்று விழாவையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

“ஜூன் 3: கலைஞரின் 99ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம்”: திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

‘‘என் உயரம் எனக்குத் தெரியும்‘’ என்று பொதுவாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, நாடே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளைப் படைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

14 வயது சிறுவனாகத் தன் கையில், புலி - வில் - கயல் பொறித்த, என்றும் தாழா தமிழ்க் கொடி ஏந்தி, தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து எப்போதும் தமிழ் உணர்வுடனும் உத்வேகத்துடனும், தனது இறுதி மூச்சு வரையிலும் சோர்வின்றிச் செயலாற்றிய கொள்கை தீரர் அவர்!

நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டு காலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்!

தீக்கனலும், தென்றல் குளிரிளங்காற்றும் சரியளவில் கலந்த செந்தமிழ் வித்தகர் அவர்!

பத்திரிகையாளர் - கவிஞர் - எழுத்தாளர் - திரைக்கதை உரையாடல் ஆசிரியர் - கொள்கை விளக்க நாடக நடிகர் என கலை இலக்கியத்தின் அனைத்துமுகத் திறனும் கொண்ட ஆளுமை அவர்!

இயல் - இசை - நாடகம் என முத்தமிழுக்கும் தன் படைப்புகளால் முழுமையாகப் பங்களிப்பு செய்த முத்தமிழறிஞர்!

தந்தை பெரியாரின் ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இயக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று, திராவிடப் பேரியக்கத்திற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர்!

அரை நூற்றாண்டுகாலம் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அச்சாணியாக இருந்து தமிழ்நாட்டு அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலையும் சுழலச் செய்தவர்!

தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து,

19 ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்’ திகழ்ந்தவர்.

சமூகநீதி - சமச்சீரான வளர்ச்சி - சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

இந்திய ஒன்றியத்தில் அரசியலில் நெருக்கடிகள் ஏற்பட்ட சூழல்களின் போதெல்லாம், டெல்லிப்பட்டணத்தின் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பியிருக்கிறது என்பது கடந்தகால வரலாறு.

பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி, சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல் - சமுதாயக் கொள்கையாக நிலைநிறுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில், சின்னஞ்சிறிய கிராமத்தில் - இசையையும் வேளாண்மையையும் ஊன்றுகோலாய்க் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கொள்கை உறுதியும், கூரிய இலக்கும், குறைவிலா உழைப்பும் கொண்டு, அவதூறுகள் - பழித்தூற்றல்கள் போன்ற நெருப்பாறுகளைக் கடந்து, அரசியல் - பொதுவாழ்வு - கலை - இலக்கியம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும், தூண்டா மணி விளக்காய் ஜொலித்து, வெற்றிகரமான சாதனைகள் ஏராளம் படைத்த ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு “ரோல் மாடல் (முன்மாதிரி)” - வரலாற்று நாயகர்.

“ஜூன் 3: கலைஞரின் 99ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம்”: திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காணவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும்; அவர் உயிரென எண்ணிக் கட்டிக் காத்த இயக்கத்தின் கொள்கைகளையும், அவர் வழியில் “திராவிட மாடல்” ஆட்சி நடத்தி, ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இளைய பட்டாளத்தின் இணையற்ற கைகளில், கருத்தியல் ஆயுதங்களை வழங்கிடும் வகையில் கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் இத்தகைய கூட்டங்களை அரங்குகளிலும் - இணைய வழியாகவும் தொடர்ந்து நடத்திட முறையான திட்டங்கள் வகுக்கவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழகங்கள் செய்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி - வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத - அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் எனக் கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது!” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories