தமிழ்நாடு

நீட் விலக்கு.. GST நிலுவை.. ‘தமிழ்நாட்டின் குரலாய்’ மேடையிலேயே பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த முதல்வர்!

நீட் ரத்து சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு.. GST நிலுவை.. ‘தமிழ்நாட்டின் குரலாய்’ மேடையிலேயே பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி இன்று (26.5.2022 வியாழக்கிழமை) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய மற்றும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேறனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கும் பங்கிற்கேற்ப, ஒன்றிய அரசும் தனது நிதி உதவியிலும், திட்டங்களிலும் பங்களிப்பை உயர்த்திட வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டு ஆட்சி!

தமிழ்நாடு வழங்கும் நிதி பங்களிப்புக்கு ஏற்ப, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு திட்டங்களை வழங்க வேண்டும். சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி.

தமிழ்நாடு பல்வேறு வகையிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. கல்வி, மருத்துவம், பொருளாதாரம், வேளாண்மை, ஏற்றுமதி மற்றும் திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.

* நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் ரத்து சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

* பல்வேறு மாநிலங்களில் நிதி நிலைமை சீராகாத நிலையில், GST இழப்பீடு காலத்தை ஜூன் 2022க்கு பின்னரும், குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து தரவேண்டும்.

* கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவ மக்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களில், தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் நிதி திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில், தனது பங்களிப்பை செலுத்தமுடியாத தருணத்தில் ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து அதனை சமமாக ஏற்க வேண்டும்.

* தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories