தமிழ்நாடு

"என் தந்தையினும் ஒரு படி மேலே அக்கறை காட்டுகிறார் முதலமைச்சர்".. மாணவி சிந்து நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் என் தந்தையை விட ஒருபடி மேலே யோசிக்கிறார் என மாணவி சிந்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

"என் தந்தையினும் ஒரு படி மேலே அக்கறை காட்டுகிறார் முதலமைச்சர்".. மாணவி சிந்து நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி தேவி. இந்த தம்பதிக்கு சிந்து, சுந்தேரஸ்வரா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சக்தி இரு சக்கர வாகனத்தில் சென்று டீ விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து வரும் சிந்து படிப்புடன் சேர்த்து, விளையாட்டிலும் படு சுட்டி. இவர் வாலிபால் (கைப்பந்து) விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருகிலுள்ள வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில், மாணவி சிந்துவின் கால் எலும்புகள் முறிந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி சிந்து தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து, தன்னால் நடக்க இயலாத சூழலிலும் தன் நம்பிக்கையுன் மாணவி சிந்து தேர்வு எழுதியுள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும்" என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாணவி சிந்து, "வீட்டின் அருகிலுள்ள மாடியிலிருந்து தவறி விழுந்து கால்கள் முறிந்து சிகிச்சையில் இருந்து வருகிறேன்.என் குடும்பம் ஏழ்மையான சூழலிலும் தொடர்ந்து டீ வியாபாரியான என் தந்தை எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.

என்னால் எழுந்து நடக்கமுடியுமா என எண்ணினேன்.என் தந்தை நான் எழுந்து நின்றால் போதும் என நினைத்தார். ஆனால் அதற்கும் ஒரு படி மேலே முதலமைச்சர் என்னை மீண்டும் வாலிபால் விளையாட அரசே முழு செலவையும் ஏற்கும் என கூறியது மகிழ்ச்சியாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சரின் கவனத்தின் ஏதோ ஒரு மூலையில் எங்களின் கஷ்டத்தையும் அறிந்து உதவியதற்கு மிக்க நன்றி என மாணவி சிந்து தெரிவித்துள்ளார்.

சிந்துவின் தந்தை சக்தி, "நடக்க முடியாமல் என் மகள் மிகவும் கஷ்டப்படுகிறாள். அருகில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் வியாபாரம் செய்து வரும் சிறிய தொகையில் மருத்துவச் செலவையும், குடும்பச் செலவையும் பார்த்து வருகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் நேரில் வரமாட்டார் மனித உருவத்தில் வருவார் என்பார்கள் முதலமைச்சர் எங்களுக்கு கடவுளாக தெரிகிறார்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories