தமிழ்நாடு

நெய்வேலி NLC பணி நியமனத்தில் அநீதி.. 300 பேரில் ஒரேயொரு தமிழரை மட்டும் நியமிப்பதா? - சு.வெங்கடேசன் கேள்வி

நெய்வேலி NLC பணி நியமனத்தில் அநீதி.. 300 பேரில் ஒரேயொரு தமிழரை மட்டும் நியமிப்பதா? - சு.வெங்கடேசன் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"300 பேர் என்.எல்.சி பணி நியமனப் பட்டியலில் அநீதி. ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்" எனக் குறிப்பிட்டு ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாட் ஜோஷிக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி கேட் (GATE) மதிப்பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும் அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஏற்கெனவே என்.எல்.சி தலைவர் இராகேஷ் சர்மா அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

இதனையொத்த நிறுவனங்களில் தேர்வுத் தகுதி குறித்து முன் அறிவிப்பு தந்து தேர்வர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. 2018 இல் இதே என்.எல்.சி யில் கூட GATE மதிப்பெண் தகுதி ஆக்கப்பட்ட போது அறிவிக்கை உரிய அவகாசத்தொடு செப்டம்பர் 2017லிலேயே வெளியிடப்பட்டது.

இம்முறை இங்கேயும் உரிய முன் அறிவிப்பு தந்திருந்தால் விருப்பமுள்ள தேர்வர்கள் கேட் (GATE) தேர்வை எழுதி இருப்பார்கள். இப்படி முன் அறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது அரிதாகி வருகிறது எனக் கவலையையும் தெரிவித்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி இருந்தேன்.

தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அப்பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான்.

ஆகவே இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன் தேர்வுத் தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்”

இவ்வாறு ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories