தமிழ்நாடு

ஒரு சதம்; ஒரு ஹாட்ரிக்; ஒரு 5 விக்கெட்ஹால்; டி20 யின் அழகியலை உணர்த்திய போட்டி!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு சதம்; ஒரு ஹாட்ரிக்; ஒரு 5 விக்கெட்ஹால்; டி20 யின் அழகியலை உணர்த்திய போட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி-தோல்வியை விட இந்த போட்டி சிறப்பாக அமைய வேறு சில காரணங்களும் இருந்தன. இந்த போட்டியில் ஒரு வீரர் சதமடித்திருக்கிறார். ஒரு ஹாட்ரிக் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு 5 விக்கெட் ஹால் எடுக்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே இப்படி ஒரு சதம், ஹாட்ரிக், 5 விக்கெட் ஹால் எல்லாம் ஒரே போட்டியில் நிகழ்ந்ததே இல்லை. அது இந்த போட்டியில்தான் முதல் முறையாக நிகழ்ந்திருக்கிறது.

ராஜஸ்தான் அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. பேட்டிங்கில் அந்த அணி அதிகமாக ஜாஸ் பட்லரைத்தான் நம்பியிருக்கிறது. அவரும் ஒவ்வொரு போட்டியிலுமே அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே, மும்பைக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்த ஜாஸ் பட்லர், இந்த போட்டியில் மீண்டும் ஒரு சதத்தை அடித்திருந்தார். காட்டாற்று வெள்ளமாக அணை போட முடியாத வகையில் அடித்து வெளுத்தார். உமேஷ் யாதவ், சிவம் மவி, நரைன், வருண் என கொல்கத்தாவின் அத்தனை பௌலர்களையும் பறக்கவிட்டார். யாராலுமே பட்லரின் பலவீனம் என்ன என்பதை அறிந்து வீசி அவரை மடக்கவே முடியவில்லை. இந்த விஷயத்தில் இந்த போட்டியில் என்றில்லை.

எல்லா போட்டியிலுமே எல்லா அணியின் பௌலர்களுமே பட்லருக்கு எதிராக திணறிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவரின் அதிரடியை தடுக்கவே முடியவில்லை. அதை தடுப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நூறு நூறாக அடித்து வெளுக்கும் பட்லருக்கு எதிராக பௌலர்கள் தங்களின் 100% வெளிக்காட்டினால் மட்டுமே அவரை தடுக்க முடியும். ஒரு யார்க்கர் வீசினால் சரியான டைட்டான லெந்தில் நல்ல வேகத்தில் 100% சரியாக வீச வேண்டும்.

ஒரு ஷார்ட் பால் வீசினால் கிடுக்குப்பிடியான லைன் & லெந்த்தில் 100% சரியாக வீச வேண்டும். இப்படி 100% சரியாக வீசும் டெலிவரிக்கள் மட்டுமே பட்லரின் விக்கெட்டை எடுத்துக் கொடுக்கும். பௌலர்களே விக்கெட்டை எடுக்க வேண்டுமானால் இதைத்தான் செய்ய வேண்டும். மற்றபடி அவராக விக்கெட்டை வாரி கொடுப்பதற்கு இது செட் ஆகாது. ஆனால், அவராக விக்கெட்டை கொடுப்பார் என காத்திருந்தால் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஆட்டத்தையே மாற்றியிருப்பார். கொஞ்சம் பிசகினாலும் பட்லர் தன் வேலையை காட்டிவிடுவார். இந்த போட்டியில் கொல்கத்தா பௌலர்களுக்கு நிறையவே பிசகிவிட்டது. இதனால் எளிதாக சதத்தை கடந்த பட்லர் 61 பந்துகளில் 103 ரன்களை எடுத்திருந்தார்.

ராஜஸ்தான் அணி பந்துவீசும் போது பெரிய டார்கெட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணு சௌகரியமாகவே டார்கெட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. ஆட்டமும் அவர்கள் பக்கமே இருப்பதாக தோன்றியது. அந்த சமயத்தில்தான் 17 வது ஓவரை சஹால் வீசினார். இந்த ஒரு ஓவரில் மட்டும் ஹாட்ரிக்குடன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தனது கூக்ளி மற்றும் லெக் ப்ரேக்குகளை சரியாக மிக்ஸ் செய்த சஹால், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் ரொம்பவே முக்கியமானது. 85 ரன்களை அடித்திருந்த ஸ்ரேயாஸ் நின்றிருந்தால் ஆட்டத்தையே வென்றிருப்பார். அவரை மிகச்சரியான தருணத்தில் சஹால் lbw ஆக்கினார். இந்த விக்கெட்டுகள் மூலம் சஹால் தனது 5 விக்கெட் ஹாலையும் எடுத்த்தார்.

ஒரு சதம்; ஒரு ஹாட்ரிக்; ஒரு 5 விக்கெட் ஹால் என டி20 இன் உச்சபட்ச அழகியல் அம்சங்கள் எல்லாம் ஒரே போட்டியில் அரங்கேறியிருந்தது சுவாரஸ்யமான விடயமாக இருந்தது. மேலும், சதமடித்த பட்லர்தான் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறார். 5 விக்கெட் ஹால் எடுத்த சஹால்தான் பர்ப்பிள் தொப்பியை வைத்திருக்கிறார். இரண்டும் ஒரே அணியின் தலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories