தமிழ்நாடு

நில மோசடி விவகாரம்: நடிகர் சூரியிடம் 5 மணிநேரம் நீண்ட விசாரணை.. நடந்தது என்ன?

பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரி மூன்றாவது முறையாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி 110 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நில மோசடி விவகாரம்: நடிகர் சூரியிடம் 5 மணிநேரம் நீண்ட விசாரணை.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி இருமுறை இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது முறையாக நடிகர் சூரி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி போலீசாரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மதியம் 12 மணிக்கு ஆஜரான அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரியிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை மற்றும் சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் அடுத்தபடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories