“கோட்டையில் இருந்து அரசு எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை முறையாக நிறைவேற்றித் தரும் பெரும் பொறுப்பு பேரூராட்சித் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருப்பவர்களின் கைகளில்தான் இருக்கிறது! ஒவ்வொரு பேரூராட்சியும் 'மாதிரி பேரூராட்சி' என்று சொல்லத்தக்க வகையில் மக்களுக்கான பணி அமையட்டும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
“உள்ளாட்சிகளிலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு, உங்களுடைய பணியில், உங்களுடைய தொண்டில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலே, இந்தப் பயிற்சி முகாமில் நம்முடைய பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சியினுடைய துணைத் தலைவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டுள்ளீர்கள்.
சில நாட்களுக்கு முன்னால் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், நகராட்சித் துணைத் தலைவர்களுக்கு இதே போன்ற ஒரு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத் தான் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு காலையிலிருந்து நடைபெற்றிருக்கிறது.
இங்கு வந்திருக்கக்கூடிய உங்களில் அனுபவம் வாய்ந்தவர்களும் இருக்கிறீர்கள்; ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி இருக்கிறீர்கள்; அதேபோல, பலர் முதன்முறையாக இந்தப் பதவிகளுக்கு, இந்தப் பொறுப்பிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் அதிகம் இப்போது பொறுப்பிற்கு வந்திருக்கிறீர்கள். இதைப் பார்க்கும்போது, ஒரு காலத்திலே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொண்டிருந்த நீங்கள் போகிற போக்கைப் பார்த்தால், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிற நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஆகவே, அந்த அளவிற்கு இன்றைக்கு பெண்களுக்கு தந்தை பெரியார் எதை எண்ணினாரோ அதை இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதன் மூலமாக சீரான, ஒன்றுபட்ட, சிறப்பான செயல்பாட்டை உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதற்காகத் தான் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கோட்டையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு, என்னதான் திட்டங்களைத் தீட்டினாலும், அந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், அதை மக்களுடைய உள்ளத்தில், மக்களுடைய கையில் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்று சொன்னால், அது உங்களால் தான் முடியும். அந்தப் பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களை நம்பி அரசினுடைய திட்டங்களை நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். அதற்கான நிகழ்ச்சி தான் இந்தப் பயிற்சி முகாம் என்கிற இந்த நிகழ்ச்சி.
மக்களாட்சியின் மாண்புகளையும், ஜனநாயகத்தின் நெறிமுறைகளையும் காப்பதில், இந்த அரசு எப்போதும் முதன்மையான மாநிலமாக இருக்கும், முதன்மையான அரசாக இருக்கும் என்பதை உறுதியோடு உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எப்போதெல்லாம் ஜனநாயகம் அல்லது மக்களாட்சி தத்துவத்திற்கு ஊறு விளைகிறதோ, அப்போதெல்லாம் நம்முடைய கழக ஆட்சி அதை சரிசெய்வதோடு, களத்திலே உங்களில் ஒருவராய் இந்த அரசு நிச்சயம் நிற்கும்.
உள்ளாட்சித் தேர்தல்களைக் கூட முறையாக நடத்துவது என்பது ஜனநாயகம், அந்த ஜனநாயகத்தை காப்பதுதான்.
யாரோ சிலருக்கு பதவி கிடைக்கும் என்பதற்காக இத்தகைய தேர்தல்களை நடத்துவது இல்லை. மக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்றுவதற்கான மக்கள் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல்களை நாம் நடத்துகிறோம். அதுவும் முறையாக நடத்துகிறோம். இப்போது நடந்த தேர்தலில் கூட எந்தவித குறைபாடும் இல்லாமல், முறைகேடும் இல்லாமல், எந்தவித புகார் இல்லாமல், எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இந்தத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம் என்பது வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய சாதனை.
ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் என்பது ஐந்து ஆண்டுகள். அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். இப்படித்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 74-ஆவது திருத்தம் சொல்கிறது, அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், முதலாவது தேர்தல் 1996-ஆம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தத் தேர்தல் நடந்தது. அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடத்தப்படவில்லை.
இப்போது நம்முடைய கழக அரசு அமைந்ததும் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். இந்தத் தேர்தல் மூலமாக
21 மாநகராட்சிகள் -
138 நகராட்சிகள் -
489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது.
இதன் மூலமாக 1373 மாநகராட்சி உறுப்பினர்களும் -
3842 நகராட்சி உறுப்பினர்களும் -
7604 பேரூராட்சி உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அதைப்போல மறைமுகத் தேர்தல் மூலமாக 21 மேயர்கள் -
21 துணை மேயர்கள் - 138 நகராட்சித் தலைவர்கள் - 136 நகராட்சித் துணைத் தலைவர்கள் - 487 பேரூராட்சித் தலைவர்கள் - 483 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் - தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படி மக்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் கைகளில் உள்ளாட்சிகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. நான் கொஞ்சம் உரிமையோடு, பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், நானும் உள்ளாட்சி மூலமாகத் தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் சென்னை மாநகரத்தின் மேயராக மறைமுகமாக அல்ல, நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போது மேயர் தேர்தல் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக பொறுப்பு வகித்தேன். அதற்குப் பிறகு 2001ஆம் ஆண்டு அப்போது நாம் ஆட்சியில் இல்லை, அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தலில் என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று எவ்வளவோ திட்டமிட்டு பணியாற்றினார்கள். நான் அந்தப் பிரச்சனைக்கு எல்லாம் அதிகம் செல்ல விரும்பவில்லை. அது உங்கள் பல பேருக்குத் தெரியும். ஆனால், அதிமுக ஆட்சியிலே இருந்த நேரத்திலேயே இரண்டாவது முறையாக சென்னை மாநகரத்தின் மக்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
இதை என்னுடைய பெருமைக்காக நான் சொல்கிறேன் என்று நினைத்துவிடக்கூடாது. எப்படி இரண்டாவது முறையும் நான் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததென்றால், எவ்வளவோ முறைகேடுகள் எல்லாம் நடந்தது, அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அந்தப் பொறுப்பிற்கு வந்தேன். ஆனால், வந்ததற்குப் பிறகு, ஏன் தான் வெற்றி பெற்றேனோ என்று அப்போது நான் நினைத்தேன், ஏனென்றால் எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை. எதையும் செய்வதற்கு அன்றைக்கு இருந்த அரசு இடம் கொடுக்கவில்லை. எவ்வளவோ சங்கடங்கள், இடையூறுகள் எல்லாம் நடந்தது. ஆனால் இரண்டாவது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு காரணம் என்னவென்று கேட்டால், மக்களோடு மக்களாக நான் இருந்தேன், மக்களோடு மக்களாக நான் இணைந்தேன், மக்களுக்காக பணிகளை ஆற்றினேன். அதுதான் அதில் இருக்கக்கூடிய சிறப்பு.
அதனால் தான், நான் இன்னும் கூட சொல்ல வேண்டுமென்றால், நான் கட்சியிலே ஒரு பொறுப்பில் இருக்கின்ற காரணத்தால் நான் மேயராக இருந்தபோதும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது முதலமைச்சராக இருக்கும் இந்த நேரத்திலும் கூட, என்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு எப்படியும் வாரத்திற்கு ஒரு முறை, பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது அங்கு சென்று விட்டுதான் வருவேன், என்னுடைய கொளத்தூர் தொகுதிக்கு போகாமல் நான் இருந்தது கிடையாது. நான் வெளியூர் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வருவேன், வந்துவிட்டு காலையில் முதல் வேலையாக தொகுதிக்குச் சென்று விடுவேன். தலைவர் அறிவாலாயத்தில் அல்லது கோபாலபுரத்தில் உட்கார்ந்து கொண்டு ஸ்டாலின் வந்துவிட்டாரா என்று கேட்பார். மாலையோ, இரவோ சந்திக்கச் செல்லும்போது "என்னப்பா ஊரிலிருந்து வந்தவுடன் பார்த்துவிட்டுச் செல்லக்கூடாதா?" என்று கேட்பார். தொகுதிக்குச் சென்றிருந்தேன் என்று கூறுவேன். தொகுதியில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்பார். அதுமட்டுமல்லாமல், நீ தான் மறுபடியும் அங்குபோய் நிற்கப் போகிறாயா என்று கேட்பார். அய்யா, நம் கட்சி வெற்றி பெற வேண்டும், உதயசூரியன் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வேன்.
எதற்காக சொல்கிறேன் என்றால், மக்களோடு மக்களாக நாம் இருந்தால்தான் நம் மீது நம்பிக்கை வைத்து நமக்கு தொடர்ந்து அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்பதற்காகத் தான் சுட்டிக்காட்டினேனே தவிர, என்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்கான நான் சொல்லவில்லை.
அதைத்தான் நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். பதவி என்பதை பொறுப்பாக நினைத்து நாம் கடமை ஆற்ற வேண்டும். நான் பல கூட்டங்களில், நிகழ்ச்சிகளில், தலைவர் கலைஞர் அவர்கள் என்னிடத்தில் அடிக்கடி சொல்வார். "உனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பதவி மேயர் பதவி அல்ல, மேயர் பொறுப்பு, பொறுப்போடு நீ பணியாற்ற வேண்டும், பொறுப்பாக இருந்து பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும், அப்போது தான், பொறுப்பாக மக்கள் உன்னை கவனிப்பார்கள் என்று அடிக்கடி எடுத்துச் சொன்னது உண்டு.
இப்பயிற்சியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய அரசியல் நுழைவு எப்படியென்றால் உள்ளாட்சிப் பிரதிநிதியாகத் தான் உள்ளே வருகிறார். எனவே, அவருக்கும் இந்த உள்ளாட்சிப் பொறுப்புக்கும் எவ்வளவோ தொடர்பு உண்டு, கரைத்துக் குடித்து வைத்திருப்பவர். எனவே, இப்படிப்பட்ட சின்னச்சின்ன விவரங்களைக் கூட எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்னால், அதற்கு அடித்தளமாக இருந்தது உள்ளாட்சி தான். ஆக, எங்களுடைய வளர்ச்சியும், எங்களுடைய அரசியல் வளர்ச்சியும் இந்த உள்ளாட்சி பொறுப்பிலிருந்து தான் வளர்ந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். அதுபோல் நீங்களும் வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. உள்ளாட்சி அமைப்புகளில் நாங்கள் பணியாற்றிய காலம்தான் ஒரு பொற்காலமாக நாங்கள் கருதிக் கொண்டிருக்கிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுடைய தற்சார்புடைய நிறுவனங்களாக முன்னேற்றுவது தான் நமது அரசின் மிக முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. மக்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும், சேவைகளையும், பல்வேறு வழிகளில் பேரூராட்சிகள் நிர்வாகம் திறம்பட செயல்படுத்துகிறது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளாக இருக்கக்கூடிய,
பாதாள சாக்கடை,
மழைநீர் வடிகால் அமைப்புகள்,
மேம்படுத்தப்பட்ட சாலைகள்,
பேருந்து நிறுத்தங்கள்,
தரமான குடிநீர்,
திடக்கழிவு மேலாண்மை,
குடிசை பகுதிகளை மேம்படுத்துதல்,
நகர்ப்புற ஏழைகள் வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது,
சாலையோர வியாபாரிகளின் நலன் காப்பது,
வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் அமைத்து பராமரித்தல்
தனிநபர் மற்றும் சமுதாய கழிப்பிடம் அமைத்தல் போன்றவையுடன் இன்னும் பலவிதமான சேவைகளை நகராட்சி நிர்வாகத்துறை மேற்கொண்டு வருகிறது.
இவற்றை பொதுமக்களுக்கு சரியாக நாம் செய்து கொடுத்தாலே மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். இத்தகைய அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதில் உங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்காக ஒவ்வொரு பேரூராட்சித் தலைவரும், எங்கள் பேரூராட்சிக்கு இத்தனை கோடி தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது பயிற்சி முகாம் தான். ஆனால் இங்கு கோரிக்கை வைக்கக்கூடிய நிலையில் ஒரு அடையாளத்திற்காக பேச அழைத்தவுடன், இங்கே ஒரு சகோதரி வந்து பேசினார்கள். இங்கு பயிற்சி முகாம் கூட்டம் என்பதையே மாற்றி, அந்தப் பயிற்சி பற்றி பேச வந்தவர்கள் ஒவ்வொருவரும் கோரிக்கை வைத்துத்தான் அதிகம் பேசியிருக்கிறார்கள். இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை கேட்கும்போது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆகவே, பொறுப்பிற்கு வந்தவுடனேயே இதையெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு இந்த அரசு உதவி செய்ய வேண்டும், நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும்போது உள்ளபடியே உங்களுடைய உரிமையை, நியாயமாக கேட்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, இங்கு பேசிய இளையாங்குடி பேரூராட்சித் தலைவர் சகோதரி பல கோரிக்கைகளை வைத்தார்கள். அதில் முக்கியமான ஒன்றை இந்தக் கூட்டத்தில் நான் இப்போது அறிவிக்கப் போகிறேன்.
பேரூராட்சியினுடைய பொது நிதியிலிருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். பணிகளை விரைவாக செயல்படுத்திடும் வகையில், உச்சவரம்பு இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு 4 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாகவும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு 8 இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாயாகவும், உதவி இயக்குநர் அளவிலே 20 இலட்சம் ரூபாயிலிருந்து 30 இலட்சம் ரூபாயாகவும், மாவட்ட ஆட்சியருக்கு 30 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாகவும், உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதேபோன்று நீங்கள் வைக்காத கோரிக்கை மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் உரிய மதிப்பூதியம் வழங்குவது குறித்தும் இந்த அமைப்புகளின் நிதி நிலையை ஆராய்ந்து உரிய ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிட இருக்கிறது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது திட்டங்களை முறையாக செயல்படுத்துவது உங்களுடைய கடமை. நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாக நீங்கள் கருத வேண்டும்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் அதிக நகர்ப்புற மக்கள் தொகை (48 விழுக்காடு) கொண்ட மாநிலமாகும். நகர்ப்புறங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மக்கள் தொகைக்கேற்ப நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை பல்வேறு திட்டங்களின் மூலமாக மேம்படுத்தி அனைத்து மக்களுக்கும் சீரான, நீடித்த, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுப்பது தான் இத்துறையின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
ஒருபுறம் நிதிப்பற்றாக்குறை - இன்னொரு புறம் மக்கள்தொகை அதிகரிப்பு - இதற்கிடையில்தான் நாம் நம்முடைய மக்களுக்கு நன்மைகள் செய்தாக வேண்டும். இத்தகைய காரணங்களை மட்டுமே நாம் பேசிக் கொண்டு இருந்துவிட முடியாது. செயல்களைச் செய்தாக வேண்டும்.
பேரூராட்சிகளின் வளர்ச்சியில் பேரூராட்சி மன்றங்களின் பங்கு மகத்தானது, மிகவும் முக்கியமானது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்திடவும், சுற்றுப்புற சூழலை தூய்மையாகப் பேணவும், நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்திடவும், நேர்மையான, திறமையான நிர்வாகம் அமைந்திடவும், சட்ட விதிகளுக்குட்பட்டு தீர்மானங்களை நிறைவேற்றி நல்ல முறையில் செயல்படுத்தி தமிழக அரசிற்கு நீங்கள் நல்ல பெயரைப் பெற்றுத் தர வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல்,
தரமான குடிநீர் வசதி,
தெருவிளக்குகள் அமைத்தல்,
சாலைகள் மேம்படுத்துதல்,
பாதாள சாக்கடை திட்டப்பணிகள்,
மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைத்தல் ஆகிய பணிகளை பேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுச் சுகாதாரம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்புற நடைபெறுதலை கண்காணித்திட வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பணிகளை மக்கள் இயக்கமாக நீங்கள் மாற்ற வேண்டும்.
நெகிழி கழிவு மேலாண்மையை நீங்கள் முறையாக செயல்படுத்த வேண்டும்.
நமது அரசால் துவங்கி வைக்கப்பட்டுள்ள ‘மஞ்சப்பை திட்டம்’ தங்களது எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு பேரூராட்சி பகுதியிலும் தீவிரமாக செயல்படுத்துவதை நீங்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.
மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றிட வேண்டும். அண்ணா அடிக்கடி சொல்வார், "மக்களிடம் செல், மக்களோடு சேர்ந்து வாழ், மக்களுக்காக பணியாற்று, மக்களுக்காக திட்டங்களைத் தீட்டு" அதை மனதிலே வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
பேரூராட்சியின் சேவைகள் மக்களை எளிதில் சென்றடையக்கூடிய வகையில் தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
தமிழகம் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி செய்திட முழுமையான ஈடுபாட்டோடு செம்மையான நிர்வாகம் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 74-வது திருத்தச் சட்டம் 1992-ல் அமலுக்கு வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி வெளிப்படையான, திறமையான நிர்வாகம் அமைந்திட உறுதி செய்ய வேண்டும். நீங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமை சேர்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்றிட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
நேற்றைய தினம், சேலம் பகுதியைச் சார்ந்த நரசிங்கபுரம் நகராட்சி திமுக கவுன்சிலர் புஷ்பாவதி அவர்களுக்கு ஒரு பாராட்டை நான் சொல்லி இருந்தேன். நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள், தொலைக்காட்சியில் வந்தது, பத்திரிகையில் வந்தது. அந்த அம்மையார் கவுன்சிலர் புஷ்பாவதி அவர்கள் ஒரு தள்ளுவண்டி கடையில் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த புஷ்பாவதி என்ற சகோதரி இப்போது மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலராக நின்று, சேலத்தில் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். கவுன்சிலர் ஆனபிறகும் அதே வியாபாரத்தை எளிமையான வகையில் நடத்தி வருகிறார். இன்றைக்கும் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார். அதனால்தான் அவரை நான் பாராட்டி இந்த செய்தியை வெளியிட்டிருந்தேன்.
கவுன்சிலர் ஆகிவிட்டோம் என்று நினைத்து - பழசை மறந்து விட்டு அவர் இருந்துவிடவில்லை. மக்களோடு மக்களாக இருந்து அவர் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து வருகிறார். இதுதான் முக்கியமானது. மக்களுக்கு தொண்டாற்ற நமக்கு கிடைத்த வாய்ப்பாக இதனை நீங்கள் கருத வேண்டும். ஏதோ பெரிய பதவி கிடைத்துவிட்டது என்று சொல்லி, மக்களிடம் இருந்து நீங்கள் அந்நியப்பட்டு விடக்கூடாது.
என்ன செய்கிறோம் என்பதை விட எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு நாட்கள் பதவியில் இருந்தோம் என்பதை விட அந்தப் பதவியில் என்னென்ன காரியங்களை செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார். இந்தியாவே கிராம ராஜ்யமாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர் காந்தி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் கிராமம் - நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் - கிராமங்கள் அனைத்தும் சிறுசிறு நகரங்களாக மாற வேண்டும் என்று சொன்னார்கள்.
அதனைத் தான் அனைவருக்குமான வளர்ச்சி - அந்த வளர்ச்சி என்பது திராவிட மாடல் வளர்ச்சியாக தமிழக அரசு இன்றைக்கு முன்மொழிந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய 'திராவிட மாடல்' வளர்ச்சியை உங்களது ஒவ்வொரு பேரூராட்சியும் அடைய வேண்டும்.
ஒவ்வொரு பேரூராட்சியும், மாதிரி பேரூராட்சி என்று சொல்லத்தக்க வகையில் அமைய வேண்டும். நீங்கள் தான் அதனை நடத்திக் காட்ட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கான வீடுகளைக் கட்டி இருப்பீர்கள். அதனை உங்கள் கனவுகளுக்கு ஏற்ப கட்டி இருப்பீர்கள். இப்படியெல்லாம் திட்டமிட்டு, நீங்கள் முடிவு செய்து என்னென்ன வசதிகள் வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்டி இருப்பீர்கள். இப்போது உங்கள் கையில் ஒரு பேரூராட்சி, உங்களை சார்ந்திருக்கக்கூடிய பேரூராட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை உங்களது கனவுகளைச் செயல்படுத்தும் பேரூராட்சியாக நீங்கள் மாற்றிக் காட்டுங்கள்.
இதுதான் ஒற்றை வரியில் நான் வைக்கக்கூடிய வேண்டுகோள். அத்தகைய பெருமைமிகு பேரூராட்சிகளை நீங்கள் நிச்சயம் அமைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக இருக்கிறது.
அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுவோம், காப்பாற்றுவதற்கு நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்போம் என்ற உறுதியை எடுத்துச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.