
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மூத்த மகன் மணிகண்டன். இளைய மகன் ஜெய்சூர்யா. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியூருக்குச் சென்றிருந்த தம்பி ஜெய்சூர்யாவை பேருந்து நிலையத்தில் இருந்து மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவர்கள் வாகனம் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி, அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெய்சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் இருந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சகோதரர்கள் இரண்டு பேரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








