தமிழ்நாடு

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதி கொடுங்கள்” : வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் கோரிய முதலமைச்சர்!

"பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பத் தயாராக உள்ளோம். விநியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்."

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதி கொடுங்கள்” : வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் கோரிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (7-4-2022) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு. இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார்.

அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories