புதுச்சேரி சேதராப்பட்டு காவல்நிலைய போலிஸார் துத்திப்பட்டு - வழுதாவூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார், அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் உருண்டையாக மர்மப் பொருள் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, கிரிக்கெட் விளையாட பந்து எடுத்துச் செல்வதாக அந்த வாலிபர் போலிஸாரிடம் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலிஸார் டேங்க் கவரில் இருந்த பொருளை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலிஸிடம் வசமாக சிக்கியதை உணர்ந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலிஸார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் சுமன் என்ற பிரதீப் (29) என்பது தெரியவந்தது. இவர் மீது 5 கொலை வழக்கு 5-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல், திருட்டு, கூட்டு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் சுமனை கைது செய்து அவரிடமிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.