தமிழ்நாடு

“சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க...” : அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய இணை ஆணையர் ரம்யா பாரதி!

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக சென்னை மாநகர வடக்கு மண்டல காவல்துறை சார்பில் பள்ளிச் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

“சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க...” : அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய இணை ஆணையர் ரம்யா பாரதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தண்டையார்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி கலந்துகொண்டு பேசினார்.

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக சென்னை மாநகர வடக்கு மண்டல காவல்துறை சார்பில் பள்ளிச் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த சரண்யா ஜெயக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பள்ளியில் படிக்கும் 1,000 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இணை ஆணையர், சிறுமிகளாகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும். தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடக்கூடாது. உங்களுக்கு பிரச்சினை ஒன்று வந்தால் அதனை எதிர்கொள்ள துணிவு வேண்டும். அதைக் கண்டு அஞ்சக்கூடாது. சில தவறான நண்பர்கள் மூலம் போதை பழக்கங்களில் ஒரு சிலர் ஈடுபடுகிறார்கள். அப்படி உள்ளவர்களை சக மாணவிகளாகிய நீங்கள் தடுக்கவேண்டும். உங்களுக்கும் உங்களுடைய நண்பர்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை பெற்றோரிடமும் குழந்தைகள் நல அமைப்புகளிடமும் புகார் தெரிவிக்கலாம்.

அதன்மூலம் காவல்துறை உங்களுக்கு உதவியாகச் செயல்படும். உங்களுடைய வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. அதனை எப்படி நடத்த வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். போக்சோ குறித்தும் போதைப் பழக்கம் ஏற்படாமல் இருப்பது குறித்தும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

செல்போன் மூலம் தவறு நடக்கிறது என்று சொல்ல முடியாது. பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றை எடுத்துக் கூறி இருக்கிறோம். ஒரு பிரச்சனையில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகளில் தவறு நடந்தால் புகார் தெரிவிப்பது குறித்தும் தெளிவாக அறிவுறுத்தி வருகிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories