தமிழ்நாடு

“விமர்சனங்களை காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு ரகுராம் ராஜன் 5 அட்வைஸ்!

இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய ஒன்றிய அரசுக்கு ரகுராம் ராஜன் ஐந்து தீர்வுகளை பரிந்துரை செய்துள்ளார்.

“விமர்சனங்களை காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு ரகுராம் ராஜன் 5 அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று மாலை நடந்த இந்திய பட்டறையின் தொடக்க விழாவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ரகுராம் ராஜன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, “ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பின் கீழ் பேசிகையில், 5 முக்கிய வழிகாட்டுதல்களை ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

* அரசாங்கம் மக்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் பிற்பட்ட சமூகத்தினருக்கும் போதிய அளவு வாய்ப்புகள் வழங்கவேண்டும். அனைவரும் போட்டியிட பொதுவான தளம் அமைக்கவேண்டும்.

* இரண்டாவது, விமர்சனங்களை அரசாங்கம் வரவேற்கும் அணுகுறையைக் கொண்டிருக்கவேண்டும்.

* மூன்றாவது, தொழில்நுட்பங்களின் அங்கமாக விளங்கும் ‘சிப்’க்களின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முன்முயற்சிகள் எடுக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாது, குவால்காம் (qualcomm), ஸ்னாப்டிராகன் (snapdragon) போன்ற தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை நாமே வடிமைத்திருக்கவேண்டும். இந்த சிப்-க்களின் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

* நான்காவது, அனைத்து விஷயங்களிலும் கற்றல் அணுகுமுறையை அரசாங்கம் கடைபிடிக்கவேண்டும், இதன் வெளிப்பாடாக அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

அதிகார பகிர்வு என்பது மத்தியில் இருந்து மாநிலத்திற்கு வழங்குவது மட்டுமட்டுமின்றி, மாநிலங்களின் வேர்களாக செயல்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பிரிவுகளுக்கும் இருக்கவேண்டும்.

* ஐந்தாவதாக, பன்னாட்டு ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறைகளை மாற்றி அமைக்கவேண்டும். அதாவது இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வெளிநாடுகளுக்கு சென்று பயின்றால், அவர்கள் அந்த நாட்டின் பணியைத் தொடங்கும் முன்பு நம் நாட்டுக் குடிமக்கள் என்ற அடிப்படையில் தங்கள் சேவைகளுக்கான சேவை வரியைப் பெறும்படி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.

பொருட்களுக்கான ஏற்றுமதி வரி போல, சேவைகளுக்கான ஏற்றுமதி வரி என்பதற்கான திட்டம்தான் இது. சேவைகளை முன்வைத்து உலகமயமாக்கல் என்பதே இதன் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories