தமிழ்நாடு

“இன்னும் 10 வருசத்துல எந்த விவசாயியும் பேங்க்ல கடன் கேட்கமாட்டாங்க” : அடித்துச் சொன்ன வேளாண் அமைச்சர்!

அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“இன்னும் 10 வருசத்துல எந்த விவசாயியும் பேங்க்ல கடன் கேட்கமாட்டாங்க” : அடித்துச் சொன்ன வேளாண் அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றினார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இம்மான்றத்தில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இரண்டாவது முறையாக பேசுவதற்கு வாய்ப்பை அளித்த தங்களுக்கும், இந்தளவுக்கு என்னை உயர்த்தி, அடையாளம் காட்டிய, உழைப்பின் சிகரம், எப்படி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவது, எப்படி மேயராக பணியாற்றுவது, எப்படி துணை முதல்வராக பணியாற்றுவது, எப்படி ஓர் இயக்கத்தின் தலைவராக பணியாற்றுவது என்பதற்கான ஓர் உதாரண புருஷராய் விளங்குகின்றவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள். இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று, தற்போது கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று, ஓர் இளைஞர்போல் எப்போதும் active ஆக, சுறுசுறுப்பாகவே செயல்படுகிறார். எப்போதும் அவர் ஓர் இளைஞர்தான். அவரைவிட நான் வயது குறைந்தவன்தான். ஆனால், அவருடைய உழைப்பைப் பார்த்து நாங்கள் எப்போதும் ஆச்சரியப்படுவோம். அவர் உழைப்பைப் பார்த்துதான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவர் சட்டமன்ற உறுப்பினராக எப்படி செயல்பட்டார் என்பதை கொளத்தூர் தொகுதியில் உள்ள மக்களிடம் போய் கேட்டால் தெரியும். கொளத்தூர் மக்கள் அவரை அப்படி தாங்குகிறார்கள். அவர் எல்லோருக்கும் ஓர் உதாரண புருஷனாக திகழ்ந்து வருகிறார். அவர் ஓர் உதாரண புருஷன். அத்தகைய தலைவரை நான் வணங்குகின்றேன்.

இன்றையதினம் தமிழகத்தில் அனைத்து ஊடகப் பிரிவினரும் இருக்கிறார்கள், செய்தியாளர்கள் இருக்கிறார்கள், தொலைக்காட்சி பிரிவினர் இருக்கிறார்கள், வேளாண்மை பட்ஜெட்டுக்கு இன்றையதினம் மக்கள் மனதில் எவ்வளவு பூரிப்பு இருக்கின்றது. செய்தித்தாளில் யாரும் controversy ஆக சொல்லவில்லை. அந்த அளவிற்கு முதல்வர் அவர்களை பாராட்டி, இத்திட்டங்களை விவசாயிகள் மற்றும் மக்கள் பாராட்டி மதிக்கிறார்கள். அரசாங்கம் மதிக்கின்றது, பார்க்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்கள் நிழல் பட்ஜெட், நிழல் பட்ஜெட் என்று பல வருடங்களாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிழலையும் பார்க்கவில்லை, ஒன்றும் பார்க்கவில்லை. யாரும் பார்க்கக்கூட மாட்டேன் என்று விட்டார்கள். பத்து ஆண்டுகாலமாக அவரும், ஜி.கே.மணி அவர்களும் கத்திப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் நிழல் பட்ஜெட்டிலும் நம்முடைய முதல்வர் அவர்கள்தான் அதனைச் செய்தார்கள். எதிரணியில் இருந்தாலும், அவர்களின் கருத்துகளை மதிக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு விவசாயியும், தான் என்னென்ன விளைவிக்கிறாரோ, அந்த விவசாயத்திற்குச் சார்ந்த திட்டங்கள் வந்திருக்கின்றன. அதுதான் பாராட்டக்கூடியதாகும், பாராட்டுகிறார்கள்.

கீரை விவசாயம் செய்பவர்களுக்கு கீரை விற்பதற்கான உதவிகள் கொடுத்திருக்கிறோம். நெல் விவசாயத்திற்கு நெல்லுக்கான உதவிகளைக் கொடுத்திருக்கிறோம். கரும்பு விவசாயிக்கு கரும்புக்கான உதவிகள் கொடுக்கப்படுகின்றன. ஆக, எல்லா விவசாயிகளுக்கும் - வாழைக்கும் அதற்கான உதவிகள் கொடுக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு விவசாயிகளை வாழவைக்கிறார்கள். இப்போது பத்து மாதக் குழந்தை. இது பத்து மாதக் குழந்தைதான். இரண்டு பட்ஜெட் முடிந்துள்ளது. இது வளரும்போது பத்து ஆண்டுகாலத்திற்கு பார்க்கும்போது விவசாயிகள் எந்த வங்கிகளிலும் சென்று கடன் கேட்டு நிற்கமாட்டார்கள். அதுதான் இந்த பட்ஜெட்டினுடைய நோக்கம்.

இந்த பட்ஜெட்டினால் விவசாயிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிகளில், சொசைட்டிகளில் சென்று கடன் கொடுங்கள் என்று கேட்கக்கூடிய வாய்ப்பில்லாமல் தன்னிறைவு பெற்ற விவசாயியாக மாறக்கூடிய திட்டங்களை இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இப்போதுதான் விதை விதைத்திருக்கிறார்கள். இப்போதுதான அது முளைத்து வருகிறது. அது ஆலமரம் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தத் திட்டங்கள் செல்லும்போது பொருளாதார முன்னேற்றம். உதாரணத்திற்குச் சொல்லப்போனால் 50 மரக் கன்றுகள் கொடுக்கிறோம். ஒரு குடும்பத்திற்கு தென்னங்கன்று கொடுக்கிறோம். அந்த 50 மரக் கன்றுகள் வளர்ந்து தேக்கு, மகாகனி ஆகிய விலை உயர்ந்த மரங்களாக வளரும்போது, பத்து வருடங்களுக்குப் பிறகு ஒரு தேக்கு மரம் ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 வரை உயரக்கூடிய வாய்ப்பு. இந்த 50 மரங்களும் உருவாகும்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பங்களிலும் ரூ.25,00,000/-க்கு மதிப்புள்ள மரங்களால் அவர்களின் பொருளாதார முன்னேற்றம். அதுபோல் பெண்களை ஊக்குவிப்பதற்காக மாதா மாதம் ரூ.1,000/- வரப்போகிறது. அதுவும் ATM-ல் வருவதுபோல் வரப்போகின்றது. அந்தத் திட்டங்களைப் பாராட்ட மனம் இல்லாமல்தான் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

இன்றைய தினம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறைய பதில்கள் வைத்துள்ளோம். கரும்புக்கு விலை இல்லை. நெல்லுக்கு விலை இல்லை. ரூ.4,000/- சொன்னீர்கள், ரூ.4,000/- சொன்னீர்கள்? நீங்கள் பத்து வருடங்களாக ஆட்சி செய்தீர்கள், பத்து வருடங்களில் ஒன்றுமே செய்யாமல், விட்டுவிட்டு போய், கடனில் விட்டுவிட்டுப்போய், சர்க்கரைத் தொழிலே வீணாகப்போய், ஒழிந்துபோய், அந்த இரும்புகளைக்கூட வாங்க ஆள் இல்லாமல் அந்தஅளவிற்கு நிருவாகத்தினை சீர்கெட்டுவிட்டு போய்விட்டது. ஏனென்றால், கரும்புத் துறைக்கு நிலுவைத் தொகையினை கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். தற்போது கரும்பு விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.150 கோடிதான் நிலுவைத் தொகை உள்ளது. அதுவும் தனியார் ஆலைகள். இரண்டும் மூடப்பட்ட ஆலைகள். அதுவும் நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் இரண்டு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. அடுத்து, தமிழக அரசுத் துறையில் இயங்குகின்ற கரும்பு ஆலைகளில் கிட்டத்தட்ட 680 கோடி ரூபாய் அவர்கள் வைத்துச்சென்ற கடனை நாங்கள் வந்து தீர்த்திருக்கிறோம்.

“இன்னும் 10 வருசத்துல எந்த விவசாயியும் பேங்க்ல கடன் கேட்கமாட்டாங்க” : அடித்துச் சொன்ன வேளாண் அமைச்சர்!

விவசாயிகளுக்கு தனியார் ஆலைகளிலும், அரசு ஆலைகளிலும் வழங்க வேண்டிய ரூ.2,000 கோடி அளவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டன. கரும்புக்கு பாக்கி இல்லை. இந்த ஆண்டுக்கு வருவதையும் ஒரு மாத காலத்திற்குள் நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். 2008 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் 12 சர்க்கரை ஆலைகளுக்கு co-generation மின்சாரம் உற்பத்தி செய்கின்றத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட ரூ.1,200 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்தார்கள். இந்த பத்து ஆண்டுகாலத்தில் அது முடிக்கப்படவில்லை. 5 சர்க்கரை ஆலைகளில்தான் அது முடிக்கப்பட்டு இன்றையதினம் அந்த 5 ஆலைகளில் ரூ.135 கோடிக்கு மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, அத்தகைய சூழ்நிலையில் இந்த 12 சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்போது வட்டி குட்டி போட்டுவிட்டது.

அவர்களுடைய நிர்வாக சீர்கேட்டினால் co-generation திட்டம் failure ஆகிவிட்டது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதை ஆய்வுசெய்து, மீதியுள்ள 6 ஆலைகளின் co-generation-ன் பணிகளைத் துவக்குவதற்கு ஆணை வழங்கி, இன்னும் ஓர் ஆண்டுகாலத்தில் அவையெல்லாம் இயங்கத் துவங்க இருக்கின்றது. 1,000 கோடி ரூபாய்க்குமேல் சம்பாதிக்கக்கூடிய மின்சாரம் உற்பத்தி செய்கின்ற திட்டம் அங்கே முடிந்து பழகிப்போய் விட்டது. 2 ஆண்டு காலத்தில் கரும்பு துறை, இலாபம் உள்ள துறையாக விளங்கும். கரும்புப் பயிரிடுவது குறித்து தலைவர் அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தார்கள். தலைவர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்கும்போது, வேளாண் உழவர் நலத் துறையில் 3 முக்கிய தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்தார்கள்.

ஒன்று, 10 ஆண்டுகளுக்கு கூடுதலாக 11 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச்செய்தல், 11 இலட்சம் ஹெக்டேர் கூடுதலாக பயிர்செய்தல். இந்த ஆண்டு குறுவை பயிரில் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கூடுதலாக குறுவை தொகுப்புத் திட்டத்தில் 61 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கிட்டத்தட்ட 46 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு விளைச்சல் அதிகமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 1½ இலட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த 10 மாத காலத்தில், விவசாயத்தில் 1½ இலட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டு கூடுதலாக கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவதாக-- தொலைநோக்குத் திட்டம் 2. 10 இலட்சம் ஹெக்டேராக உள்ள சாகுபடி நிலங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கே அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மூன்றாவதாக, உணவு தானியங்களான தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான வேளாண் உற்பத்தியில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகம், தேசிய அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம்.

இந்த 3 திட்டங்களையும் கண்டிப்பாக, 2 ஆண்டு காலத்தில் நாங்கள் reach செய்துவிடுவோம். 10 ஆண்டு காலம் முழுமை அடையும்போது, விவசாயத்தில் வேளாண் துறையில் இது ஒரு புரட்சியாக உருவாக்கப்படும் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கின்றேன்.

புதிய புதிய திட்டங்களையெல்லாம் இங்கே நிறைய அறிவித்திருக்கின்றோம். கரும்புக்கு ஊக்கத்தொகை, கடந்த வேளாண் பட்ஜெட்டில் கரும்புக்கு ஊக்கத்தொகை வேண்டுமென்று கேட்டோம். 100 ரூபாய் அதிகப்படுத்திக் கொடுத்தார்கள். இந்த ஆண்டுக்கு ஊக்கத்தொகை 195 ரூபாய். ஆக, 2,950 ரூபாய் அளவிற்கு உயர்த்தியிருக்கிறோம். அடுத்த ஆண்டுக்கு இன்னும் கூடுதலாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. --சொன்னவுடனே வரவில்லை, வரவில்லை என்கிறார்கள். சொல்லி 10 மாதங்கள்தான் ஆகிறது. முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், 4 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர், துணை முதலமைச்சராக இருந்தவர்கள் எல்லாம், கரும்புத்தொகையை எங்கே ஏற்றினீர்கள், 4,000 ரூபாய் என்னாச்சு, என்று நேற்று கேள்வி கேட்டார்கள். நாங்கள் வந்தபோது 3,000 ரூபாயாக கூட்டினோம். வருகின்ற ஆண்டில் அது கண்டிப்பாக 4,000 ரூபாயாக உயர்த்தப்படும். சொன்னதை செய்ய வேண்டும் என்பவர் நம்முடைய தலைவர். மக்களைச் சந்திக்கக்கூடியவர்; மக்களை தினந்தோறும் சந்திக்கக்கூடியவர். எளிமையாக பழகக்கூடியவர்; எளிமையாக சந்திக்கக்கூடியவர்.

முதலமைச்சரானதும், உடனே ஊடகம், police-ஐ அங்கே வரச் சொல்லலாம். Line-ல் நிற்பார்கள்--சென்ற வருடம் சட்டமன்றத்திற்கு வரும்போது பார்த்தால், போலீஸ்காரர்கள் எத்தனை பேர் வரிசை, வரிசையாக நின்றார்கள். இப்போது பார்த்தால் அவர்களை காணோம். இப்போது convoy போய்விட்டதா என்று நாங்களே கேட்கின்றோம். சந்தேகமாகிவிட்டது. ஆனால், மக்களுக்கும், காவல் துறைக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது (மேசையைத் தட்டும் ஒலி) என்ற காரணத்திற்காக எளிமையாக, பந்தோபஸ்துகூட தேவையில்லை என்று அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவர் போகின்றார்.

யார்யாரோ வந்தார்கள், திடீரென்று வருகின்றார்கள், line-ல் நிற்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்காத நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் உழவுத் தொழிலுக்கு கண்டிப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது; வந்துவிட்டது.--எல்லோரும் இங்கே பேசுகிறார்கள்.

அதேபோல, இப்பொழுது நெல்லுக்கான ஆதார விலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்கள்.

நெல்லுக்கு ஆதார விலை ரூ.2,500/- தருகிறோம் என்று சொன்னீர்களே! அது என்னவாயிற்று என்று கேட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, முதலமைச்சரானவுடனேயே நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்து, கடந்த பட்ஜெட்டில் ரூ.100/- கூடுதலாக அறிவிக்கப்பட்டு, அதன்படி, சன்ன ரகத்திற்கு ரூ.2,050/-ம், மோட்டா ரகத்திற்கு ரூ.2,000/-ம் கூடுதலாகக் கொடுத்திருக்கிறார்கள். வருகின்ற ஆண்டுகளில் கண்டிப்பாக ரூ.2,500/-ஐ எட்டுவதற்கு ரொம்ப காலம் ஆகாது. அதேபோல, கரும்புக்காக, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென்று கேட்டார்கள். நிலுவைத் தொகை முழுவதையும் இந்த அரசு வழங்கிவிட்டது. அதேபோல, K.A.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், ப.தனபால், அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் இதுகுறித்து பேசினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் கி.அசோக்குமார் அவர்கள் பேசும்போது, உரம் காலத்தில் கிடைக்கவில்லை என்று பேசினார்கள். தற்போது உரம் தேவையான அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான உரங்களும் கூடுதலாக வந்திருக்கின்றன. அதற்கும் முதலமைச்சர் அவர்கள் முயற்சி எடுத்தார்கள். முதலமைச்சர் அவர்கள் இரண்டு முறை ஒன்றிய அமைச்சருக்கு நேரடியாகக் கடிதம் எழுதினார்கள். அவ்வாறு கடிதம் எழுதியதன் பலனாக இன்றைக்கு தேவைக்குரிய உரங்கள் ஒன்றியத் தொகுப்பிலிருந்து நமக்கு வந்துகொண்டிருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் எடப்பாடியார் அவர்களும், முன்னாள் துணை முதலமைச்சர் அவர்களும் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000/- வழங்குவதாகச் சொன்னது என்னவாயிற்று என்று கேட்டிருக்கிறார்கள். அது வழங்கப்பட்டுவிட்டது.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி அவர்கள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு கூறினார்கள். அவர் தன்னுடைய சகோதரர் இரவு நேரத்தில் மொட்டார் போடுவதற்காகச் சென்றபோது, அங்கே பாம்பு கடித்து இறந்துவிட்டதை அவர் உணர்வுபூர்வமாகச் சொன்னார்கள். இரவு நேரங்களில் மின்சாரம் வரும்போது மோட்டார் போடுவது என்பது விவசாயிகளுக்கு பெரும் இடர்பாடானது. பல சமயங்களில் இரவு நேரங்களில் மோட்டார் போடச் செல்லும்போது அங்கிருக்கும் பாம்பு அவர்களைக் கடித்துவிடும். அதற்காக, செல்போனிலேயே activate செய்யக்கூடிய கருவியை இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் அங்கு சென்ற அனுபவம் எங்களுக்கெல்லாம் உண்டு. இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கப்படும்போது, இருட்டில்தான் மோட்டார் ஷெட்டிற்குச் சென்று மோட்டார் போட வேண்டும். வேறு வழி கிடையாது. அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு மின்சார வெளிச்சம் கிடையாது. ஆக, அத்தகைய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கும் இந்தத் திட்டம் விவசாயிகளே பாராட்டக்கூடிய ஒரு திட்டம் என்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்களே இங்கு பேசியிருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்களும் தங்கள் பகுதியில் உழவர் சந்தை வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். உழவர் சந்தைகளை தேவையான இடங்களில் தொடங்குவதற்கு அனுமதி அளித்திருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குளிர்பதனக் கிடங்கு வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். தேவையான குளிர்பதனக் கிடங்குகளின் தேவையை அறிந்து அதைக் கொடுப்பதற்கான அனுமதியும் அளித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் கரும்பு வெட்டுக் கூலி அதிகமாக இருக்கிறது, அதை அரசே ஏற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். குறைந்த விலையில் கரும்புகளை வெட்டுவதற்கான இயந்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, இந்த ஆண்டு 15 கரும்பு வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆக, நிலுவைத் தொகையையும் கொடுத்துவிட்டோம்.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. மா. சின்னதுரை அவர்கள் உழவர் பாதுகாப்பு நலத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.3,000/- வழங்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள். அதற்கான நல வாரியத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அதையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000/- கண்டிப்பாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டிருந்தது. சொல்வதைச் செய்யக்கூடிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள். ஆதார விலை ரூ.2,500/-ம் கொடுப்பார்கள். மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சுந்தரபெருமாள்புரத்தில் மலர் சந்தை வேண்டுமென்று கேட்டார்கள். மலர் அதிகமாக இருந்தால் சந்தை ஏற்படுத்தித் தரப்படும். மலர் சந்தை வைப்பது என்பது ஒரு சவாலான பணியாகும். ஏனென்றால், விடியற்காலை 4-00 மணிக்கு பூ பறிக்கச் செல்ல வேண்டும். அதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கும். ஆகவே, அதிக அளவில் பயிரிட மாட்டார்கள். கால் காணி, அரை காணி நிலத்தில்தான் பூ செடிகளை வைப்பார்கள். அதிக அளவில் மலர் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் மரவள்ளிக்கிழங்கு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு விடிவுகாலம் வேண்டுமென்றார்கள். மரவள்ளிக்கிழங்கு பயிரில் அடிக்கடி மாவுப் பூச்சி தாக்குதல் வருமென்ற காரணத்தால், தேவையான நேரத்தில் அதற்கான மருந்துகளை வைப்பதற்கு நிதி அனுமதியைப் பெறுவதற்குள் பயிர்கள் முழுவதையும் பூச்சிகள் தாக்கிவிடும். அதற்காகவே இந்த ஆண்டு முதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதற்கென்று தனியாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உடனே அவசர தேவைக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. வாழைப் பயிர் குறித்து அதற்குரிய திட்டங்களும் இங்கே பின்னர் அறிவிக்கப்படும். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் கொய்யா மதிப்புக் கூட்டு பொருளை உற்பத்தி செய்வதற்கு விரிவான திட்ட அறிக்கை வேண்டுமென்று கேட்கிறார். பண்ருட்டியில் பலாப்பழத்திற்கும் நாங்கள் கடந்த பட்ஜெட்டில் அறிவித்து, அதுகுறித்தும் வேலை தொடங்கப்படுகிறது, அதனை அறிந்து, அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேவையான விவரங்கள், கேட்பதைக் கொடுக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிற காரணத்தால் விவசாயிகளின் கோரிக்கைகள் அந்த அளவிற்கு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்திருக்கின்றீர்கள். எதிர்க்கவில்லை. இந்த பட்ஜெட்டினுடைய வெற்றியே இதுதான். அனைவரும் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்கள்; -மிகவும் கடுமையானன்விமர்சனங்கள் இல்லை. அதேபோல, ஊடகங்களும் இங்கே வாழ்த்திப் பாராட்டியிருக்கின்றன.

மக்களுடைய கருத்தாகப் பிரதிபலிக்கிற செய்தித்தாள்கள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆக எல்லோரும் இந்த வேளாண் பட்ஜெட்டிற்கு இங்கே ஆதரவளித்து மாண்புமிகு முதல்வர் அவர்களை அந்த அளவிற்கு பாராட்டியிருக்கிறார்கள். கண்டிப்பாக வேளாண் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் மிகவும் சிறப்பாக, அவர்கள் 10 ஆண்டுகால நோக்கின்போது எந்த விவசாயியும் மீண்டும் சொல்கின்றேன்; கடன் கேட்டு வங்கியின் முன்பாக நிற்கக்கூடிய நிலை இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்தளவிற்கு வாய்ப்பளித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories