தமிழ்நாடு

“விவசாயத் துறையில் தலைநிமிரும் தமிழ்நாடு” : வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 52 முக்கிய அறிவிப்புகள் இதோ !

முதலமைச்சர் அறிவுரையின்படி, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாய சங்கப்பிரதிநிதிகள், வேளாண் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

“விவசாயத் துறையில் தலைநிமிரும் தமிழ்நாடு” : வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 52 முக்கிய அறிவிப்புகள் இதோ !
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பெறுப்பேற்ற உடன் தமிழ்நாடு வரலாற்றிலேயே வேளாண்துறைக்கு கடந்தாண்டு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 -23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆற்றிய உரை பின்வருமாறு : -

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

வேளாண்மை என்பது தேடுதலாகத் தொடங்கி, நாகரிகமாக மருவி, வாழ்வாக மலர்ந்து, மக்களை வாழ்வித்த நிலை மாறி, நாளடைவில் பிழைப்பாகப் பிசகி, பிறழ்ந்த நிலையை மாற்றி, பணியாக மருவி, தொழிலாக உயர்ந்து, மீண்டும் தமிழ்நாடு எங்கும் பசுமை தழைத்தோங்க, பயிர்கள் செழித்தோங்க, ”குடியானவன் வீட்டுக் கோழிமுட்டை அதிகாரி வீட்டு அம்மியாலும் உடையாத” அளவிற்கு அவர்கள் வாழ்வு சமூகத்தில், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண்மை நிதிநிலை அறிக்கை.

உழவர்தம் உள்ளத்தையும் வறியோர் வயிற்றில் உள்ள பள்ளத்தையும் நிரப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாட்சியில் சென்ற ஆண்டு தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட்டது வேளாண் நிதிநிலை அறிக்கை. பொன்னிற நெல் நட்டால் வருகிற வருமானத்தைவிட நிலத்தில் மஞ்சள் நிறக் கல் நட்டால் வருமானம் அதிகம் வரும் என்கிற மயக்கத்தில் விளைநிலைங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகும்

பரிதாபத்தைப் போக்கி உழவுத் தொழிலே உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் தன்னம்பிக்கை ஒளிரச் செய்யும் நோக்கத்தில் இன்று இந்த இரண்டாம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்த அவையின் முன் வைப்பதில் அகம் மகிழ்கிறேன், உளம் குளிர்கிறேன்.

இத்துறைக்கு இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாய்ப்பளித்து, வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வணங்கி, எனது உரையை தொடங்குகிறேன்.

உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த நிதிநிலை அறிக்கைகள் அடிவாரத்தில் இருந்த வேளாண்மையை உச்சிக்கு அழைத்துச் செல்லும் என்ற உறுதியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

திருவள்ளுவர் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்று உழவின் உன்னதத்தை உரக்க உரைத்தார். ‘மேழிச்செல்வம் கோழைபடாது’ என்று கொன்றை வேந்தன் கூறுகிறது. ‘நெற்பயிர் விளை’ என்று ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. பண்டையத் தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும், அவற்றால் ஆற்றும் தாளாண்மை குறித்தும் எண்ணற்ற கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. நிலத்தில் நிகழும் வேளாண்மையை மனத்தில் கொண்டு குறிஞ்சி என்றும், முல்லை என்றும் மருதம் என்றும், நெய்தல் என்றும், பாலை என்றும் பாகுபாடு செய்து வாழ்க்கை நெறியை வகுத்துக் கொண்டனர் நம் பண்டைய தமிழர்கள்.

ஷேக்ஸ்பியர், நாட்டு நிர்வாகத்தையும் தோட்டத்தைப் பேணுவதையும் ஒப்பிட்டுப் பேசுகிறார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன், வேளாண்மையே சிறந்த தொழில், அதுவே உண்மையான செல்வத்திற்கும், ஒழுக்க நெறிக்கும், மகிழ்ச்சிக்கும் வித்திடுகிறது என்கிறார்.

கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கை -
ஒரு கண்ணோட்டம்
.

சென்ற ஆண்டு வாசிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை தவழ்கிற மழலையாய் நம் காதுகளில் ஒலித்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை நடக்கிற குழந்தையாய் நம்மைக் குளிர்விக்கவிருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் அது ஓடுகிற குழந்தையாய் உயரவிருக்கிறது என்பதை வாசிக்கிற விதத்தில் மட்டும் அல்ல, வழிநடத்துகிற விதத்திலும் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கிறீர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு திங்கள் அன்று அந்த நிதி நிலை அறிக்கையை வாசித்துச் செயல்படுத்த ஆறு மாதங்களே அவகாசம் இருந்தது என்பதையும் இடையில் பெருமழையும், பெருந்தொற்றும் மாநிலத்தை பெரிதும் பாதித்தன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இருப்பினும், முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஆறு அறிவிப்புகளும் நீண்ட நாள் திட்டம் என்பதனால் உட்கூறுகளை வகைப்படுத்தி திட்ட மதிப்புடன் செயல்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு விதைக்கப்பட்ட திட்டங்கள் வேரூன்றியுள்ள நிலையில் இவ்வாண்டும் அவை தழைத்து வளர்வதற்கான அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும், இவ்வாண்டு அடுத்த பரிமாண நகர்வுக்குத் தேவையான
திட்ட ங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறுவை சாகுபடிக்கென மேட்டூர் அணையைத் திறக்க குறித்த நாளான 12.06.2021 அன்று திறந்து வைத்ததோடு, ரூபாய் 61 கோடியே 9 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தையும் வழங்கினார்கள். இதனால், 4 இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 3 இலட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் உயர்ந்திட வழிவகுத்துள்ளார். இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாகும்.

மேலும், 2021 ஆம் ஆண்டில் நமது மாநிலத்தில் பெய்த பருவமழையினை திறம்பட பயன்படுத்தும் வகையில், வாய்க்கால்களை தூர் வாருதல், இடுபொருள் விநியோகம், வேளாண் விரிவாக்க சேவைகளை இந்த அரசு முடுக்கிவிட்டதால், 2021-22 ஆம் ஆண்டில் 14.03.2022 வரை, தமிழகத்தின் நெல் சாகுபடிப் பரப்பு 53 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டினைக் காட்டிலும், 4 இலட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் கூடுதலாகும்.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய முக்கியத் திட்டங்கள் ஒரு பெரும் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக, பாரம்பரிய நெல் இரகங்கள் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு, இதுவரை 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் திறனை மேம்படுத்த ஆறு வேளாண் கருவிகள் அடங்கிய “வேளாண் கருவிகள் தொகுப்பு” 15 கோடி ரூபாய் நிதியிலும், உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு 20 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 35 ஆயிரம் வேளாண் பெருமக்கள் மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக இடுபொருள் மானியமாக 154 கோடியே 69 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி விவசாயிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசினை உரிய காலத்தில் உரங்கள் வழங்கிடத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக 17 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி ஆகிய உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதிகரித்திட, வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைத்திடவும், அவர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்கும் வகையிலும் புதிய துறையாக உணவுப் பதப்படுத்தும் துறைக்கு, அரசாணை வழங்கப்பட்டு, முன்ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வேளாண் தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காண்பதற்காக, தலைமைச் செயலர் அவர்களின் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விவசாயப் பெருமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் துறைவாரியாக தொகுக்கப்பட்டு வருகின்றன.

காலநிலை மாறுபாடுகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உலக அளவில் மிகப்பெரும் சவாலாக உள்ளன. காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel for Climate Change) தனது ஆறாவது காலநிலை அறிக்கையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களை இனம் கண்டுள்ளது. அவற்றுள் பருவம் தவறியதும் மிக அதிகமானதுமான வானிலை நிகழ்வுகளால் வேளாண்மை, வன வளம், மீன் வளம், எரிசக்தி, சுற்றுலா ஆகிய துறைகள் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், வேளாண் உற்பத்தி, உடல்நலம், உணவுப் பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படுவதோடு வாழிட கட்டமைப்புகளும் அழிந்து தனிநபர் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது. புவி வெப்பம் உயர்வதால் நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் இருப்பு குறையக்கூடும் என்று அறியவருகிறது.

தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடத்தின் அமைப்பின் படி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவு உணரப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள
29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், வேளாண்மையில் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ், அதிக நீர்த்தேவை கொண்ட பயிர்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் சாகுபடியை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்திட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மானாவாரி நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களான நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் வேளாண்மையில் இந்தக் கூறுகளெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 126 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையின்படி, சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாய சங்கப்பிரதிநிதிகள், வேளாண் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை

1) கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்கள் அனைத்தும் அவற்றின் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டும் என்கின்ற இனிய நோக்கத்தை நிறைவேற்றும் திட்டம் இது. தமிழர்கள் நெஞ்சில் எழுதுகோலால் உழுது நம்பிக்கை நாற்றுகளை நட்டவரின் பெயரால் உள்ள திட்டம்.

ஒவ்வொரு சிற்றூரும் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் வேளாண்மைக்கு அனுசரணையான திட்டங்களை அரவணைத்து முழு வளர்ச்சியைப் பெற்றால்தான் புன்னகை புரிய மறந்த உழவர் பெருமக்கள் சில்லறைகளைச் சிந்தியது போல் சிரிக்க முடியும் என்பதால் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அவை முதலாம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1997 கிராமங்களில் இரண்டு திட்டங்களும் இரட்டைப் புரவிகளாக ஓடவிருக்கின்றன.

வேளாண் துறையின் மூலம் கொடுக்கப்படுகிற மானியங்கள், செயல்படுத்தப்படுகிற திட்டங்கள், அமைக்கப்படுகிற கட்டமைப்புகள், அளிக்கப்படுகிற தொழில்நுட்பம், பகரப்படுகிற பயிற்சி போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிற இந்த முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து மேற்கொள்ளும். எண்ணற்ற உலர்களங்களும், கான்கிரீட் களங்களும், நெல் கிடங்குகளும், பண்ணைக் குட்டைகளும், கசிவுநீர்க் குட்டைகளும், சிறு ஏரிகள் பாசன மேம்பாடும் சேரும்போது ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும், இரு விழிகளும் பார்க்கிறபோது பார்வை தெளிவாவதைப் போல்.

இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதோடு எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

வரும் 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டம், 3204 கிராமப் பஞ்சாயத்துக்களில் 300 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

2. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்

நிலத்தடி நீர் இல்லாத நிலங்களுக்கு, விண்ணின் மழைத் துளியும், உழவனின் வியர்வைத் துளியுமே, பயிர்களுக்கு உயிர்த் துளி. வறண்ட நிலங்களிலும் வளமான பயிர்கள் வளர, அவற்றைப் பேணும் உழவர்களின் வயிறு குளிர செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மூன்று ஆயிரம் மானாவாரி நிலத் தொகுப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மூன்று இலட்சம் மானாவாரி விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்திடும். வேளாண் இடுபொருள்களும் விதைகளும் மானியத்தில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 1. பயிர் காப்பீட்டுத் திட்டம் (Crop Insurance)

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், கடுமையான நிதி நெருக்கடியிலும், மாநில அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர்முயற்சியினால், 2020-21 ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகையாக இதுவரை 2 ஆயிரத்து 55 கோடி ரூபாய், 9 இலட்சத்து 26 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியினை இந்த அவையில் தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

 1. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

விவசாயிகளின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யவும் அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் ஏதுவாக பல்வேறு கூறுகளை உள்ளடக்கி மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடங்கும்.

 1. இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு

இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, இந்த அரசு சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பசுந்தாள் உர விதைகளும், மண் புழு உரம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர், உழவர் உற்பத்தியாளர், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திலுள்ள
100 குழுக்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியும் வழங்கப்படும். இது தவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் ஏழு ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. விவசாயிகளுக்குத் தார்பாய்கள் வழங்குதல்

உழைப்பின் பயனாக உற்பத்தி செய்தவை தூறலில் நனைந்தால் கண்களில் மழை உருவாகும். அறுவடை செய்த விளை பொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர் களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

 1. தென்னை வளர்ச்சி மேம்பாடு

தென்னையில் காய்ப்புத்திறனை அதிகரிக்கவும், எண்ணெய்ச் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வதைக் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டக்கலவை, பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை மானியத்தில் வழங்கிடவும். ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி, உயிரி பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள் வழங்கிடவும், தென்னை, மா, முந்திரி போன்ற பல்லாண்டுப்பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்த செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதற்கும் 2022-23ஆம் ஆண்டில் ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுப்பதற்காக, நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2022-23ஆம் ஆண்டில் அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும். இதற்காக,
75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு

கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 66 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி
10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 1. நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி

நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கூடுதலாக
13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்.

 1. நெல்லில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். இதற்காக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மாநில அரசு விதைப் பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து, 250 ஏக்கரில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்படும்.

 2. இயற்கை வழியில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் வருமானம் பெற்றிடவும், ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பில் வரப்புப் பயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டம் மூன்று கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 3. நெல்லில் கூடுதல் விளைச்சல் பெறுவதற்காக துத்தநாக சல்பேட், ஜிப்சம் தலா
  ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

 4. விதை விநியோகம்

2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா) மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

 1. உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல்

விவசாயப் பெருமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள “வேளாண் கருவிகள் தொகுப்பு”,
2022-23 ஆண்டிலும் அரை இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

 1. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல்

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23 ஆம் நிதி ஆண்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு
ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

 1. ஊரக இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை இலாபகரமாக மாற்ற, இரண்டு ஆயிரத்து 500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கடந்த ஆண்டைப் போலவே 2022-23 ஆம் ஆண்டிலும் வழங்கப்படும்.

 1. வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளிக்கும், பாராட்டி மகிழும்.

 1. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்

காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியைக் குளிர்விக்கும் மரகதக்குடைகள். தமிழ்நாட்டில் வேளாண்காடுகளை உருவாக்கி வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பருவநிலை மாற்றங்களைத் தாங்கி விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். 2022-23 ஆம் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்.

 1. தமிழ் நாடு சிறுதானிய இயக்கம்

அளவில் சிறுத்து, ஊட்டத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழி மொழியும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 2023 ஆம் ஆண்டினை “சர்வதேச சிறுதானிய ஆண்டாக” அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு ”சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்’‘ திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும்.

சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் ”சிறுதானிய திருவிழா” மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும். சாகுபடி முதல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது வரை அனைத்து உதவிகளையும் ஒருசேர வழங்கிடும் வகையில்,
2022-23 ஆம் ஆண்டில் 92 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை சுய உதவிக்குழு மகளிரிடையே ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 1. பயறு பெருக்குத் திட்டம்

பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதிகரித்தல், பயறுவகைகளைத் தரிசு நிலங்களில் சாகுபடியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்ட “துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்” அமைக்கப்படும். அறுவடைக்குப் பின் பயறுவகைகளை சுத்தப்படுத்தி, மதிப்புக்கூட்டி, விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2022-23 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 1. நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்

சாகுபடியுடன், கறவை மாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் 65 கோடியே 65 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 1. நீடித்த நிலையான பருத்தி இயக்கம்

புறநானூற்றில் "பன்னல்வேலி இப்பணை நல்ஊரே" என்று பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

2022-23 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம், 15 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும்.

 1. சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம்

2022-23 ஆம் ஆண்டில் 19 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் விளைச்சல் பெற, ஒன்றிய, மாநிலத் திட்டங்கள் வாயிலாக சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் மொத்தம் 32 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

 1. எண்ணெய்வித்துப் பயிர்களின் பரப்பு , உற்பத்தி பெருக்குத் திட்டம்

சூரியனிருக்கும் திக்கில் முகம் திருப்பிப் புன்னகை புரியும் இயல்பு கொண்டது சூரியகாந்தி. சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை அதிகரித்து தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம்பெற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததைச் செயல்படுத்திட சூரியகாந்திப் பயிரின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறன் ஆகியவை உயர்த்தப்படும். தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, கரூர், திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய்வித்துப் பயிர்களில் உற்பத்தியினை அதிகரித்திட, 28 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. மின்னணு வேளாண்மைத் திட்டம் (Digital Agriculture)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து திட்ட முன்னேற்றங்களை நிகழ்நிலையில் தெரிந்து கொள்வதற்காக, "முதலமைச்சரின் மின்னணு தகவல் பலகை" (CM Dash Board) ஒன்றை வடிவமைத்துக் கண்காணித்து வருகிறார்கள். அதேபோன்று இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, வேளாண் துறையும் மின்னணு வேளாண்மைத் திட்டத்தினை வடிவமைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விதை முதல் விளைச்சல் வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் உழவன் செயலி மூலம் பெறலாம். விளைநிலங்கள் வாரியாக விதைப்பு முதல் விற்பனை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவித்து, அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.

 1. விளைநிலங்கள் வாரியாக பயிர்த்திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக்குறியீடு (Geo Tagging) வழங்கப்படும். தொடர்ந்து, உடைமைதாரர்களின் அடிப்படை விவரங்கள், மண்வளம், சாகுபடி விவரங்கள் இணைக்கப்படும். தமிழகத்தின் ஏழு வேளாண் மண்டலங்கள், 1330 குறு வேளாண் மண்டலங்களாக பகுக்கப்பட்டு, உற்பத்திக் காரணிகளின் அடிப்படையில் புதிய சாகுபடித்திட்டம் படிப்படியாக பரிந்துரைக்கப்படும்.

 2. தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூச்சி மற்றும் நோய்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் கண்காணிக்கப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்படும்.

 3. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

 4. தானியங்கி முறையில் நீர்ப்பாசனம், நீர்வழி உரமிடல் ஆகிய நவீன தொழில்நுட்ப பயிற்சியினை விவசாயிகளுக்கு அளிப்பதற்காக, வேளாண்மை, தோட்டக்கலை அரசுப்பண்ணைகளில் உரிய அமைப்புகள் நிறுவப்படும்.

 5. “உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால் வயலிலே வளம் காண முடியாது” என்றார் பேரறிஞர் அண்ணா. அப்பெருந்தகையின் எண்ணத்திற்கு வண்ணம் தரும் வகையில் உழவனின் உள்ளத்தில் உள்ள ஏக்கத்தினை போக்கும் நோக்கோடு "தமிழ் மண் வளம்" என்ற தனி இணைய முகப்பு (Portal) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். இதனால், விவசாயிகளின் நிலங்களின் புல எண் வாரியாக மண் வளத்தினைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மண் வளப் பரிந்துரை அட்டையினையும் தாங்களே அச்சிட்டு கொள்ள முடியும் இதன் மூலம் மண் வளத்திற்கேற்ற, வேளாண், தோட்டக்கலை, மரப்பயிர்கள் பரிந்துரை செய்யப்படும்.

 6. ”தொலையுணர்தல்" (Remote Sensing) தொழில்நுட்பம் மூலம் நிலஉடைமை ,பருவம் வாரியாக பயிர்களின் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் விலை கணிக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன் மூலம் விளை பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும்.

 7. திட்ட செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை:

வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ், பயனாளிகளை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்திட, அனைத்து திட்டங்களிலும் படிப்படியாக கணினியில் பயனாளிகளைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும்.

 1. விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக்கன்றுகள், பழமரச்செடிகள், தென்னை மரக்கன்றுகளை கணினியில் முன்கூட்டியே பதிவு செய்து காலத்தே சாகுபடி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 2. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவர் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக திறன் ரீதியாக புதிய செயலியில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். இதன் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள் மூலம் போதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, விவசாயப் பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ளவும் இச்செயலி பயன்படும்.

 3. வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை

விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களைப் பெறும்போது, தங்கள் பங்களிப்புத் தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்தப்படும்.

மேற்கூறிய புதிய மின்னணு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இத்திட்டம் எட்டு கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை இந்த அவையில் பெருமையுடன் சமர்ப்பிக்கின்றேன்.

 1. தங்கப் பயறு - சோயா பீன்ஸ் சாகுபடிப் பரப்பளவை அதிகரித்தல்

குறுகியகாலப் பயிரான சோயா பீன்ஸ் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் முதற்கட்டமாக தஞ்சாவூர், சேலம், திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய, மாநில நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 1. மயிலாடுதுறையில் புதிதாக மண் பரிசோதனை நிலையம்

மண்ணில் உள்ள சத்துக்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய பரிந்துரை வழங்கினால் உரமிடுதலை சீர்படுத்தி சாகுபடி செலவினைக் குறைக்க இயலும். இந்த வகையில், புதிதாக துவக்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறையில் விவசாயிகளின் நலனுக்காக, 2022-23 ஆம் ஆண்டில் புதிய மண்பரிசோதனை நிலையம், 75 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

 1. உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகள் (Genetic Diversity Fairs)

நமக்குத் தேவையான விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் பயிர் இரகங்களைக் கண்டறிந்து இரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால், நமது பகுதிக்கேற்ற சிறந்த இரகங்களை உருவாக்க முடியும். இதற்கென, ஆண்டுக்கு மூன்று முறை உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். இத்தகைய கண்காட்சிகளில் விவசாயிகள் கலந்து கொண்டு, உயர்தர இரகங்களைக் காட்சிப்படுத்தலாம். வேளாண் விஞ்ஞானிகளும் இக்கண்காட்சிகள் வாயிலாக, வீரியமிக்க குணங்களைக் கொண்ட இரகங்களைக் கண்டறிந்து, புதிய இரகங்களை உருவாக்கலாம். இதற்காக அரசு 2022-23 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யும்.

 1. ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம்.

இவ்வரசினால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்கென 2022-23ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதலை எதிர்கொள்ள சிறப்பு நிதி

மாறி வரும் காலநிலைகளினால் பயிர்களில் திடீரென்று பூச்சி, நோய்த் தாக்குதல்கள் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. புதிய பூச்சிகள், நோய் ஆகியவற்றின் தாக்கம் தென்படத் துவங்கியவுடனே அவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஐந்து கோடி ரூபாய் கொண்ட ஒரு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு,
பூச்சி நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சர்க்கரைத் துறை

பண்டைத் தமிழர்கள் கரும்பைக் கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதைக் ‘கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்’ என்று நாலடியார் நவில்கிறது. கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி.

கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களைப் பயிரிட இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், 2022-23 ஆம் நிதியாண்டில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 1. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

 1. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம்

கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள், ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக் டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில்
10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்களை நவீனப்படுத்துதல்

சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்தும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில் அமராவதி, அறிஞர் அண்ணா, செய்யார், செங்கல்ராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி-1,
கள்ளக்குறிச்சி - 2, எம்.ஆர்.கே., மதுராந்தகம், பெரம்பலூர், சுப்பிரமணிய சிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள் மொத்தம் மூன்று கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்.

20. என்.பி.கே.ஆர்.ஆர் (NPKRR) கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் துவக்குதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரே சர்க்கரை ஆலையான நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு பற்றாக்குறை காரணமாக கடந்த 2016-17 அரவைப்பருவம் முதல் இயங்காமல் இருந்து வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும்.

 1. சர்க்கரை ஆலைகளில் நவீன தானியங்கி எடைத்தளங்கள் அமைத்தல்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பினைத் துல்லியமாக எடையிடும் வகையிலும் கரும்பிற்கான விலையினை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிடும் வகையிலும், 15 கூட்டுறவு, பொது சர்க்கரை ஆலைகளில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள எடைத்தளங்கள் கணினி மூலம் தானியங்கி முறைக்கு மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கரும்பு எடை விவரங்கள் விவசாயிகளுக்கும்,
வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், குறுஞ்செய்தியாக (SMS) உடனுக்குடன் அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும்.

தோட்டக்கலை-மலைப் பயிர்கள் துறை

தோட்டக்கலை என்கின்ற இன்னொரு இறகு மூலம் உழவர்கள் நலனை பாதுகாக்கும் பணியை இத்துறை ஆற்றுகிறது. நறுமணம் வீசும் மலர்களையும், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளையும், பல்சுவை மிகுந்த பழங்களையும் பதார்த்தங்களுக்கு வாசனை சேர்க்கும் பயிர்களையும், காலை மாலையில் பருகும் பானங்களையும் தோட்டக்கலைத் துறையே தந்து வேளாண் துறையின் மகுடத்தில் மாணிக்கப் பரலாய், மயிலிறகாய் இருக்கிறது.

 1. தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையினை மேம்படுத்த சிறப்புத்திட்டம்

தமிழகத்தில், தொகுப்பு அணுகுமுறையில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி, சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க இவ்வரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில்,
960 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 1. தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம்
  (Tamil Nadu Organic Farming Mission)

தோட்டக்கலைத் துறை மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 50 எக்டர் அளவிலான தொகுப்புகள் (Cluster based) மாவட்டத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும்.

இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வாயிலாக அங்கக சாகுபடி குறித்த புரிதலை ஏற்படுத்துதல், மண்வளம் குறித்து தகவல்கள் கொடுத்தல், உயிர் உரங்கள் குறித்த ஆலோசனையும் இடுபொருட்களையும் வழங்குதல், விளைபொருட்களில் உள்ள இரசாயனத் தன்மையினை ஆராய்வதற்கான ஆய்வகங்கள் ஏற்படுத்துதல், அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவு செய்தல், போன்ற பல செயல்பாடுகளுடன் இத்திட்டம், 30 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். மேலும், இயற்கை எருவிற்கான மாட்டுக்கொட்டகை, மண்புழு உரக்கூடங்கள் போன்றவை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.

 1. ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம்

ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்

பழப்பயிர்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் இவ்வாண்டு "பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்" செயல்படுத்தப்படும். நடவுச்செடிகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கி இத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.

தரமான மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பலா, இலந்தை, மாதுளை போன்ற நடவுச்செடிகளுக்கு முன் பதிவு செய்வது முதல் இடுபொருட்கள் விநியோகம், தரம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தல் வரை அனைத்து செயல்பாடுகளும் இணையவழியில் மேற்கொள்ளப்படும். இத்திட்டம், 20 கோடியே 21 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. உயர் விளைச்சல் பெற துல்லிய பண்ணையத் திட்டம் (Precision Farming)

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்படும். இம்முறையில், இடுபொருட்கள், பணி ஆட்களின் செலவினம் குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த விளைபொருட்கள் கிடைக்கிறது. இத்திட்டம் எட்டாயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோடி ரூபாய் மாநில நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள், விதைகள் இடுபொருட்கள் வழங்கி, உயர் தொழில்நுட்பத்துடன் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.

 1. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல்.

ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, தென்னை, மா, கொய்யா, வாழை பயிரிட்டுள்ள சிறு/குறு விவசாயிகளுக்கு “ஊடுபயிர் தொகுப்பு” வழங்கப்படும். இத்திட்டம் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 27 கோடியே
51 இலட்சம் ரூபாய்
நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி (Hi-tech Horticulture)

அதிக வருவாய் அளிக்கக்கூடிய பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள், நிலப்போர்வை அமைத்தல் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட 25 கோடியே 15 இலட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

மேலும் நகர்ப்புர மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்துப் பயன்பெறும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்துத் தோட்டத் தளைகள் (Vertical Garden) 500 பயனாளிகளுக்கு
ரூபாய் 75 இலட்சம் நிதியில் வழங்கப்படும்.

 1. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நுண்ணீர்ப் பாசன திட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழகம் (TAHDCO) மூலம் தட்கல் மின் இணைப்பு வழங்கிட தேர்வுசெய்யப்பட்ட இரண்டாயிரம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்குழாய்க்கிணறு, மின் மோட்டார், நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு
20 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. தேனீ தொகுப்புகள் உருவாக்குதல்

நூற்றுக்கணக்கான மலர்களில் உழைத்து ஒரு சொட்டுத்தேனை உற்பத்தி செய்து உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் சுறுசுறுப்பிற்கு சொந்தக்காரர்கள் தேனீக்கள். மலர்களில் மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் தூதுவர்களாகச் செயல்படுபவை. தேனீக்கள் வளர்ப்பதினால் தேன் உற்பத்தி அதிகரிக்கும், பயிர் உற்பத்தியும் பெருகும். விவசாயிகளின் வருமானமும் உயரும். இதனைக் கருத்தில் கொண்டு, 37 தேனீ தொகுப்புகள் (Cluster based) எட்டு கோடியே 58 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.

தரமான தேனீ குடும்பங்கள், உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மையங்கள் அமைத்துத்தர உதவி செய்யப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தில், இத்திட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கதர் துறையோடு இணைந்து செயல்படுத்தப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில், மூன்றாயிரத்து 350 தேனீ தொகுப்புகள்
ஒரு கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 1. மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம்

உதிரிப்பூக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. மல்லிகை சாகுபடி பரப்பு, உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மகளிரின் அன்றாட வருமானத்தை உயர்த்தவும், மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்கள் சாகுபடியை நான்கு ஆயிரத்து 250 ஏக்கரில் மேற்கொள்ள, ஐந்து கோடியே 37 இலட்சம் ரூபாய் நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

 1. உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம்

காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைக் கண்டறிந்து, சிறப்புக் கவனம் செலுத்தி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். அதன்படி இவ்வாண்டு காய்கறிகளை கூடுதலாக ஆறு ஆயிரத்து 250 ஏக்கரில் பயிரிட விதைகள், குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்கி இத்திட்டம் ஐந்து கோடி ரூபாய் நிதியில் மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிக்கவும், தொடர்ந்து கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.

 1. கிழங்கு வகை சுவை தாளித பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு

இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்

பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி

என மதுரைக்காஞ்சி இஞ்சி, மஞ்சள் பற்றி குறிப்பிடுகிறது.

உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகளில் மஞ்சள், இஞ்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உழவு, நடவுக்குரிய விதைக்கிழங்குகள், இதர இடுபொருட்களுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், ஆறு ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. பூண்டு சாகுபடிக்கு முக்கியத்துவம்

மருத்துவ குணம் நிறைந்த பூண்டு சாகுபடி, புதிதாக கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற வாய்ப்புள்ள இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆயிரத்து
250 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு எட்டு ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 1. தோட்டக்கலைப் பயிர்களில் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்தல்

தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சாகுபடி செய்யப்பட்டு வந்த பாரம்பரிய இரக பழப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் போன்றவை காலப்போக்கில் மறைந்து விட்டன. ‘இனி விதையே பேராயுதம்’ - என்ற நம்மாழ்வார் கூற்றுக்கு இணங்க தோட்டக்கலை பயிர்களின் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்து தற்சார்பினை உறுதிப்படுத்திடும் வகையில், பாரம்பரிய காய்கறிகள், பழங்களின் இரகங்களைப் பாதுகாக்க, சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும்.

சிறப்புத் தன்மைகள் கொண்ட பாரம்பரிய காய்கறிகளான கண்ணாடிக்கத்தரி, ஆண்டார்குளம் கத்தரி, கொட்டாம்பட்டி கத்தரி, வரிக்கத்தரி, வாசுதேவநல்லூர் கத்தரி போன்ற கத்தரி இரகங்களும், பள்ளப்பட்டி தேன் முருங்கை, கரும்பு முருங்கை போன்ற முருங்கை இரகங்களும், குழித்தக்காளி, கொடித் தக்காளி, அன்னஞ்சி தக்காளி போன்ற தக்காளி இரகங்களும், ஆனைகொம்பன், சிவப்பு வெண்டை போன்ற உள்ளூர் இரக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட ஊக்குவிக்கப்படும். இதற்குத் தேவையான காய்கறி விதைகள், விவசாயிகளுக்கும், வீட்டுத் தோட்டத்தில் பாரம்பரிய இரகங்களைப் பயிரிட விரும்பும் பொதுமக்களுக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படும். இத்திட்டம், ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிடத்து 500 ஏக்கர் பரப்பில் இரண்டு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல்

தமிழ்நாட்டில் தக்காளிப் பயிரானது வீட்டுத் தோட்டம், பாதுகாக்கப்பட்ட சூழல், பரந்த பரப்புகள் ஆகியவற்றில் சுமார் 53,000 எக்டரில் பயிரிடப்பட்டு
16 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதலில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், தக்காளி விவசாயிகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.

உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருட்களாக, ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், ஐந்து ஆயிரம் ஏக்கரில், இத்திட்டம் நான்கு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும். இத்தோட்டங்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடிகளை, மாணவிகள் கண்டறியவும், சாகுபடி முறைகள், அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளவும் உதவும்.

இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், மூலிகைச் செடிகள், தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு விடுதி ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் 200 விடுதிகளுக்கு முழு மானியத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 1. பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம்

பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனைமரம் விதையிட்ட நாளைத் தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் தானாய் வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.

தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்கள் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு இலட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்கள்.

எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டிலும், இவ்வரசு
10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும்
அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர,
100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு,
பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இத்திட்டம், இரண்டு கோடியே 65 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருதும் வழங்கப்படும்.

மேலும், 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி
ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ்
25 இலட்சம் பனை விதைகள் நடப்படும்.

 1. தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையில் இணையவழி சேவைகள் வாயிலாக தோட்டக்கலை வணிகம்

இணையவழி தோட்டக்கலை வணிகம் மூலம், இடைத்தரகர்கள் இன்றி தோட்டக்கலை விளைபொருட்கள் நுகர்வோருக்குச் சென்றடையும். விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு ஆகியோராலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளிலும் உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதைகள், இடுபொருட்கள், வாசனை பொருட்களான ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய், உலர் பழங்கள், யூகலிப்டஸ் தைலம், போன்றவையும் இணையம் வாயிலாக விற்க ஏற்பாடு செய்யப்படும்.

 • பொருட்களைத் தரம் பிரித்து, சிப்பம் கட்டி விநியோகம் செய்ய, மூன்று சேமிப்பு
  கிடங்குகள் சென்னை, மதுரை, கோவையில்
  ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் ஏற்படுத்தப்படும்.

 • இணைய வழி விநியோக நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் இரண்டு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

 1. அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சுவைதாளிதப் பயிர்களுக்கான (Spices and Condiments) மரபணு வங்கி

விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ற இரகங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவைதாளிதப் பயிர்களின் வகைகளும் இரகங்களும் சேகரிக்கப்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செய்து பராமரிக்கப்படும்.

முதற்கட்டமாக இவ்வாண்டு, மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்பட்டு, உள்ளூர் வகைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான உழவு, நடவு, இடுபொருட்கள், அறுவடை போன்ற பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. ஆரோக்கியத்தின் அவசியம் மூலிகை தோட்டங்கள்

உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும் தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம். 2022-23 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறை

 1. வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்

வேளாண்மையில் ஈடுபடும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்து விட்டன. உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று இன்று.

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23 ஆம் ஆண்டில்
6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப்பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு எண்ணூறு ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமார் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில்
150 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயக் கருவிகளை வாடகைக்கு வழங்கி, பெண் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 736 கருவி வங்கிகள் அமைக்கப்படும்.

 1. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்

மின் இணைப்பு இல்லாத விவசாயிகளின் கிணற்றுப்பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்திடும் பொருட்டு, பசுமை ஆற்றலான சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி வேளாண்மையில் பயன்படுத்திட முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில்
2022-23 ஆம் ஆண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூரிய சக்தியால் இயங்கும்
3,000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில்
65 கோடியே 34 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

 1. வேளாண் விளைபொருள் மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்குதல்

கடுங்காற்று எறிய போகிய துரும்புடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்

என்ற அகநானூற்றுப் பாடலில், உழவர்கள் நெல்லரிந்து, வைக்கோலில் இருந்து பிரித்தெடுத்து, தூற்றித் தூசு துரும்புகளை அகற்றி தூய்மை செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக இலாபம் பெறும் வகையில்,
292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்குவதற்கு 2022-23-ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்னும் வரிகள் மூலம் இளங்கோவடிகள் கதிரவனைச் சிறப்பித்துப் பாடுகிறார். ஞாயிறுக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமை என்பதே உண்மை.

சூரிய ஆற்றலின் வெப்ப பயன்பாட்டினைக் கொண்டு, வேளாண் விளை பொருட்களை சுகாதாரமாக, குறைந்த நேரத்தில், ஒரே சீரான முறையில் உலர்த்தி, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்து, அதன் சேமிப்பு காலத்தை அதிகரித்து, அதிக விலைக்கு விற்று, விவசாயிகளும், விவசாயக் குழுக்களும் அதிக இலாபம் பெற்றிடும் வகையில் பசுமைக் குடில் போன்ற
145 சூரிய கூடார உலர்த்திகளை 40 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் 2022-23 ஆம் நிதியாண்டில், மூன்று கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு செலவில் செயல்படுத்தப்படும்.

 1. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள்

”காலத்தே பழுதுநீக்கி உழவு செய்து விவசாயம் செழித்திட” என்பதற்கேற்ப விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் போன்றவற்றை கால விரயமின்றி அவர்களின் இருப்பிடத்திலேயே பழுதுநீக்கிப் பராமரிக்கவும், வேளாண் பொறியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற இளைஞர்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் தலா 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 சதவீத மானியத்துடன் 25 வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ஆகியவற்றைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் ஒரு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

 1. மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்

மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் 2022-23 ஆம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரித்தல்

நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளின் வரத்துக் கால்வாய்களிலும் வெளிச்செல்லும் கால்வாய்களிலுமுள்ள புதர், செடி, கொடிகளை அழித்து அதன் நீரோட்டத்தை அதிகரித்து, தூர்வாரி ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்தில், வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் அமைக்கப்பட்ட ஆயிரத்து
500 நீர்சேகரிப்பு கட்டமைப்புகளில், 2022-23 ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 1. நீர்வள நவீன மயமாக்குதல்

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்

அமிழ்தம் என்றுணரற் பாற்று” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க விவசாய நிலங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சிறந்த நீர் அறுவடைக் கட்டமைப்பாக விளங்குபவை பண்ணைக்குட்டைகள்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீன மயமாக்குதல் திட்டத்தின் கீழ், நீர்வள ஆதாரத்துறையால் தேர்ந்தெடுக்கப்படும் உபவடிநிலப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 2022-23-ஆம் ஆண்டில்,
373 பண்ணைக்குட்டைகள் 3 கோடியே 73 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

பண்ணைக்குட்டைகளின் கரைகளில் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திடும் வகையில் பழச்செடிகள், மரக்கன்றுகள் போன்றவை வளர்த்திட உதவி செய்வதுடன், மீன் வளத்துறையுடன் ஒருங்கிணைந்து இப்பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. புதிய வேளாண் இயந்திரங்கள், நடமாடும் பழுது நீக்கம் வாகனம் (Mobile Servicing Unit)

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை வலுப்படுத்துவதற்காக, மூன்று எண்கள் டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்களும், ஏழு எண்கள் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களும் கொள்முதல் செய்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களையும், கருவிகளையும் பழுதுபார்த்திட ஏதுவாக மூன்று நடமாடும் பழுது நீக்கும் வாகனங்கள் அமைக்கவும் 2022-23 ஆம் ஆண்டில் மூன்று கோடியே
54 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. டெல்டா மாவட்டங்களில் ”சி”, ”டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாருதல்

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராக கொண்டு செல்வதற்கும், சரியான நேரத்தில், தேவையான அளவில் நீர் கடைமடையை அடையவும் ”சி”, ”டி” பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாருவது மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு, காவேரி, வெண்ணாறு வடிநிலப்பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2022-23 ஆம் ஆண்டில் ஆயிரத்து ஐநூற்று எண்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி”, “டி” வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், இரண்டு இலட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஐந்து கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 1. கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்குதல்

விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டும், விவசாயியின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து
கைபேசியின் மூலம் இயக்கிடும் வகையிலும் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்க 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள 3 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி வழங்கப்படும்.

Related Stories

Related Stories