தமிழ்நாடு

“புத்தகப் புரட்சியை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அறிவுலகத்தை ஆதரிக்கும் கழக அரசு”: முரசொலி பாராட்டு!

நெருக்கடிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கலங்கரை விளக்கமாகத்தான் முதலமைச்சரின் புத்தகப் பூங்கா என்ற அறிவிப்பு அமைந்திருக்கிறது.

“புத்தகப் புரட்சியை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அறிவுலகத்தை ஆதரிக்கும் கழக அரசு”: முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தகுதிசால் தமிழ்ப் பெருமக்கள் 21 பேருக்கு 21 தகுதிசால் விருதை தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வைத்து வழங்கினார்கள்.

அந்த விழாவில் பேசும்போது முதலமைச்சர் செய்த அறிவிப்பு ஒன்று, அறிவுலகத்தார் அனைவராலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. ‘அறிவுலக முதல்வரே’ என்று அவரைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. “புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். அது தேர்தல் காலமாக இருந்ததால் அன்று அதனைச் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கும் இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்டதால் - இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் -அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். அதற்குப் புத்தகப் பூங்கா என்றும் அவர்கள் பெயர் சூட்டினார்கள்.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரேஇடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரேஇடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும்” என்பதுதான் முதலமைச்சரின் மாபெரும் அறிவிப்பு ஆகும்.

முதலமைச்சர் அவர்கள் இதனை அறிவிக்கும்போது கலைவாணர் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த புத்தகப் பூங்கா அமைந்தால் அது அறிவுலகத்தின் சாட்சியாக அமையும். பொதுவாகவே பதிப்புலகம் என்பது நேர்கோட்டில் சீரான வளர்ச்சிக்குரியதாக எப்போதும் இருந்தது இல்லை. ஏறினால், உடனே இறங்கும். காகிதங்களின் விலை என்பது நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. உலகச் சந்தை மதிப்பில் காகிதங்கள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதற்காக உலகச் சந்தை அளவுக்கு புத்தகங்களின் விலையைக் கூட்டி வைக்கவும் முடியாது. இத்தகைய உலகளாவிய நெருக்கடியை உள்ளூரில் அனுபவித்து வருகிறது பதிப்புலகம்.

புத்தகங்களை வெளியிடுபவர்கள் அனைவராலும், விற்பனைக் கடைகளைப் போட முடியவில்லை. இன்னும் சொன்னால், சென்னையில் அனைவராலும் கடை திறக்கவும் முடியாது. நடத்தினாலும் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாது. திறந்த வேகத்தில் மூடப்பட்ட புத்தக் கடைகள் அதிகம். தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் சில நல்ல புத்தகங்களை வெளியிட்டுவிட்டு, அதற்கான விளம்பர வெளிச்சம் கூடப் பெற முடியாமல் அழிந்த பதிப்பகங்கள் நிறைய உண்டு. பதிப்பாளர்கள் உண்டு. அதன் பிறகு படைப்பையே நிறுத்திவிட்டுப் போன படைப்பாளிகளும் உண்டு. இந்த நெருக்கடிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கலங்கரை விளக்கமாகத்தான் முதலமைச்சரின் புத்தகப் பூங்கா என்ற அறிவிப்பு அமைந்திருக்கிறது.

சென்னையில் புத்தகப் பூங்கா அமைகிறது. இதில் சுமார் 500 புத்தகக்கடைகள் நிரந்தரமாக அமைந்துள்ளது என்றால் ஒரு புத்தகம் வெளியான மறுநாள் காலையில் இங்கு விற்பனைக்கு வந்துவிடும். அன்றைய தினமே அப்படி ஒரு புத்தகம் வெளியாகி இருக்கிறது என்ற செய்தியும் பரவிவிடும். மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை மறுநாள் காலையில் மக்கள் மனங்களின் விதைப்பதைப் போல புத்தக வரவுகளும் விதைக்கப்படும். விற்பனைக்குத் தயாராக இருப்பதை அறிவித்துவிடும்.

தலைநகரில் நமக்குக் கடை இல்லையே என்ற ஏக்கம் அனைத்துப்பதிப்பாளர்களுக்கும் போய்விடும். நம்முடைய புத்தகம், சென்னைக் கடைகளில் விற்பனைக்கு பார்க்க முடியவில்லையே என்ற கவலை படைப்பாளிகளுக்கும் பறந்து போய்விடும். படைப்புகளை எங்கெங்கோ தேடிச் செல்ல வேண்டியது இல்லை. இந்த புத்தகப் பூங்காவுக்கு வந்தால் பெறலாம். அல்லது இங்கே சொல்லிவைத்தால் பெறலாம் என்ற சூழலை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கப்போகிறார்கள். இது அறிவுலகம் கொண்டாட வேண்டிய செய்தி ஆகும்.

இந்த புத்தகப் பூங்காவின் பயன் என்பது பத்து ஆண்டுகள், கால்நூற்றாண்டுகள் கழித்துத்தான் அதிகம் தெரியும். கன்னிமரா நூலகம் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் தமிழில் அறிவுப்பரவல் தடைப்பட்டிருக்கும். அந்தத் தடையை 150 ஆண்டுகளுக்கு முன்னால் உடைத்து அறிவு வெள்ளத்தைப் பாய்ச்சுவதற்கு அந்த நூலகம் பயன்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் ஒரு நூலகமோ, பெரியார் திடலில் ஒரு நூலகமோ இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும்? திராவிட இயக்கத்தின் வரலாறு, கழகத்தின் சாதனைச் சரித்திரமே மறைக்கப்பட்டிருக்கும்.

சென்னையில் பேரறிஞர் அண்ணா நூலகத்தின் பயனை, அங்கு நித்தமும் வரும் மாணவர்கள், இளைஞர்களைக் கேட்டால் சொல்வார்கள். அதேபோல்தான் மதுரையில் அமைய இருக்கிறது முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான நூலகம். இவை எல்லாம், இந்தச் சமூகம் எத்தகைய அறிவுச் சமூகமாக இருக்கிறது என்பதன் அடையாளங்கள். இவை எல்லாம், இந்த அரசு, எத்தகைய அறிவுப்பரவலை விரும்பும் அரசாக இருக்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

இந்தப் புத்தகப் புரட்சியை மிகச் சாதாரணமாகத்தான் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக ஆனபோது, தன்னைச் சந்திக்க வருபவர்களைப் புத்தகம் கொடுக்கச் சொன்னார், பூமாலைகளை நிராகரித்தார். இன்று முதலமைச்சருக்குத் தரப்படுபவை அனைத்தும் புத்தகப் பரிசுகள்தான். புத்தக வெளியீடுகளை அரசு சார்பில் அதிகப்படுத்தி உள்ளார்.

நூலகங்களுக்கு சிற்றிதழ்கள் முதல் அனைத்து இதழ்களையும் வாங்குவதை அதிகரித்துள்ளார். பபாசி அமைப்பினருக்கு இந்த ஆண்டு ஒரு கோடியே 25 இலட்சம் நிதி வழங்கி உள்ளார். இதன் மகுடமாக, புத்தகப் பூங்கா அறிவிப்பைச் செய்துள்ளார். இப்படி ஒட்டுமொத்தமாக அறிவுலகத்தை ஆதரிக்கும் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளார். ‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்’ என்ற புரட்சிக்கவியின் வரி நடைமுறையில் நடந்ததால் இவை அனைத்தும் நடக்கிறது!

banner

Related Stories

Related Stories