தமிழ்நாடு

"கலைஞரின் விருப்பம்.. நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்" : புத்தகப்பூங்கா அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு!

முதலமைச்சரின் புத்தகப்பூங்கா குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

"கலைஞரின் விருப்பம்.. நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்" : புத்தகப்பூங்கா அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

“புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும்.” என்றும் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புத்தகப்பூங்கா குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக தமுஎகச மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதை தமுஎகச மனதார பாராட்டி வரவேற்கிறது.

அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கவும் அனைத்துப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகவிரும்பிகளும் ஒரே இடத்தில் சந்திக்கவும் ஏதுவாக புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் முன்பொரு முறை வெளிப்படுத்திய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவதாக இன்றைய முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த புத்தகப் பூங்காவிற்கான நிலத்தைத் தேர்வு செய்து அரசு வழங்குவதுடன், தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் அரசு  செய்யும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது, தமிழ்ப் பதிப்புத்துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் என தமுஎகச கருதுகிறது.

இதன் தொடர்ச்சியில் மாவட்டத் தலைநகரங்களிலும் மாநகராட்சிகளிலும் நிரந்தர புத்தக விற்பனை வளாகங்களை அமைப்பதற்கும்  தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories