தமிழ்நாடு

சாட்சிகள் பல்டி அடித்தும் நீதியை போராடி பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: இது சமூக நீதிக்கான போராட்டம்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், இறுதிவரையில் போராடி நீதி பெற்றுத் தந்துள்ளார்.

சாட்சிகள் பல்டி அடித்தும் நீதியை போராடி பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: இது சமூக நீதிக்கான போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று வெளியிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்ற இளைஞர், கடந்த 2015ஆம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இறந்துகிடந்தார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரான கோகுல்ராஜ், காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலிஸார் வந்தனர்.

ஆனால், இந்த வழக்கில் கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலிஸார் கைது செய்தனர். அதே காலகட்டத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு யுவராஜூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின்னர், இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் 2016ஆம் ஆகஸ்ட் மாதம் யுவராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், 2018 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது 114 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்காது என கோகுல்ராஜின் தாய் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி. இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ்.

சாட்சிகள் பல்டி அடித்தும் நீதியை போராடி பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: இது சமூக நீதிக்கான போராட்டம்!

இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது, வழக்கின் போக்கையே மாற்றியது.

தன் மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், இறுதிவரையில் போராடி நீதி பெற்றுத் தந்துள்ளார்.

இந்த வழக்கில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள வழக்கறிஞர் ப.பா.மோகன், “கண்ணகி நீதி கேட்டு போராடிய இந்த மண்ணில் ஒரு பட்டியலின இளைஞனின் படுகொலைக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதிபதிக்கும், எங்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சிறைத் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான போராட்டமல்ல, சமூக நீதிக்கான போராட்டம். சாதி பாகுபாடுகள் அழிந்து சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான நீதிப் போராட்டம். இந்த போராட்டத்திற்குத்தான் நீதி கிடைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories