தமிழ்நாடு

15 லட்சம் பேர்.. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.. தமிழ்நாட்டில் நடந்த ‘அறிவுப் புரட்சி’ : முரசொலி!

சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற புத்தகக்கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்குவோம் என்று முதலமைச்சர் சொன்னதும் நடக்கத் தொடங்கினால், அறிவின் பரவல் அதிகமாகும்.

15 லட்சம் பேர்.. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.. தமிழ்நாட்டில் நடந்த ‘அறிவுப் புரட்சி’ : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு 15 இலட்சம் பேர் வருகை தந்தார்கள் என்பதும், 15 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சி நடந்து கொண்டு இருப்பதன் அடையாளம் ஆகும்.

1977 ஆம் ஆண்டு பத்து உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமானது இன்று 408 நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் தமிழ்நாடு அரசால் நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக்கு இடம் வழங்கப்பட்டு சென்னை கன்னிமாரா நூலகத்தின் ஒரு பகுதியில் அது அமைந்துள்ளது.

சென்னையில் நடப்பதைப் போலவே, மதுரையில் 14 ஆண்டுகளாகவும், கோவையில் 4 ஆண்டுகளாகவும் புத்தகக் கண்காட்சியை பபாசி நடத்தி வருகிறது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் நடத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய உரிய நடவடிக்கையை எடுக்க அரசு அறிவுரை வழங்கும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

கடந்த 45 ஆண்டுகளாக சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. ஆயிரம் அரங்குகள் அமைக்க இருப்பதாக பதிப்பாளர்கள் முதலில் நினைத்தார்கள். ஆனால் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் அரசின் ஆலோசனையின் அடிப்படையில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டன. குறைவான நாட்கள் இருந்தால், மக்கள் கூட்டம் அதிகமாக ஆகும் என்பதால் புத்தகச் சந்தை திறந்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ள அரசு அனுமதித்தது. இதன்படி 19 நாட்கள் இந்த புத்தகச் சந்தை திறந்திருந்தது. விடுமுறை நாட்களில் மட்டும் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கண்காட்சியானது, இம்முறை அனைத்து நாட்களும் காலை 11 மணி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இது வாசகர்களுக்கு மிகமிக வசதியாக அமைந்தது.

இம்முறை தமிழ்நாடு அரசு மிகப்பெரிய உதவியை பதிப்பாளர்களுக்கு வழங்கியது. வழக்கமாக இப்புத்தகக் கண்காட்சிக்காக தமிழ்நாடு அரசு, 75 இலட்சம் ரூபாயை வழங்கி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அமைப்பினர் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.

கொரோனா காலத்தால் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த கண்காட்சி தள்ளிப்போனதால் அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் கொண்ட முதலமைச்சர், ஐம்பது லட்சம் ரூபாயை வழங்கினார்கள். இந்த வகையில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பதிப்பாளர் - விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. மேலும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் அவர்கள் வருகை தந்து ஒரு கருத்தைச் சொன்னார்கள். “2007 ஆம் ஆண்டு இந்த புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்த அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சென்னையில் மிகப் பிரமாண்டமான நூலகம் அமையப் போகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். அதுதான் சென்னையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.

அதேபோல் மதுரையில் கலைஞர் அவர்கள் பெயரால் 114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய தமிழக அரசு திட்டமிட்டு - இடத்தைத் தேர்வு செய்துள்ளது. மிகப் பிரமாண்டமாக மதுரையில் விரைவில் எழ இருக்கிறது. இதுபோன்ற அறிவுக் கோவில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு.

எங்கள் இயக்கமே அறிவியக்கம்தான். எங்கள் இயக்கத்தின் தலைமைக் கழக அலுவலகத்தின் பெயரே அறிவாலயம்தான். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு 10 பைசா, 30 பைசா விலையில் புத்தகம் போட்டு அச்சடித்து அறிவுப்புரட்சியை ஏற்படுத்திய இயக்கம் தாம் திராவிட இயக்கம். ‘என்னுடைய வாரிசுகள் என்பது என்னுடைய புத்தகங்கள் தான்’ என்று சொன்னார் தந்தைப் பெரியார். ‘வீட்டுக்கொரு நூலகம் அமையுங்க’ என்று உத்தரவிட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள். புத்தகத்தின் மூலமாக உலகைப் படியுங்கள் என்று கட்டளையிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அந்த வழித்தடத்தில்தான் இன்றைய தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது.” என்று சொன்னார்கள். அப்படி அரசு வழங்கிய உதவிகளும் இந்தக் கண்காட்சி இத்தகைய சிறப்புடன் நடப்பதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. இதேபோல், மிக முக்கியமான ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்பதையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பும் வெளியானால் அதுவும் அறிவுப் புரட்சிக்கு அடித்தளம் அமைப்பதாக அமையும்!

கடந்த ஆண்டு 10 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது அறிவுப்புரட்சியின் அடையாளம் ஆகும். இது மேலும் மேலும் அதிகமாக வேண்டும்.

சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற புத்தகக்கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்குவோம் என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னதும் நடக்கத் தொடங்கினால், அறிவின் பரவல் அதிகமாகும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியலியக்கம் மட்டுமல்ல, அறிவியக்கம். அந்த அறிவியக்க ஆட்சியில் அறிவுப் புரட்சி நிச்சயம் நடக்கும்!

banner

Related Stories

Related Stories