தமிழ்நாடு

உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கான சிறப்புக்குழுவில் திருச்சி சிவா MP, கலாநிதி வீராசாமி MP, எம்.எம்.அப்துல்லா MP, டி.ஆர்.பி.ராஜா MLA ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக கடந்த 24-2-2022 முதல் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3-3-2022) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை மீட்டு, பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டுவர மாநில, மாவட்ட அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரை 3,025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தமிழ்நாட்டைச் சார்ந்த 2,223 மாணவர்கள் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த மாணவர்களோடு உக்ரைன் நாட்டிலுள்ள மாகாணங்கள் வாரியாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்து வருவதோடு, அவர்களை விரைந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான தேவையான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மீட்பு தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, ஒன்றிய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திடுமாறு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளர் கே. ராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று (3-3-2022) காலை 6 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் செலவில் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த எஞ்சியுள்ள மாணவர்களை உடனடியாக மீட்பதற்குத் தேவையான கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் விவரம் பின்வருமாறு:

  • உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.

  • உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி,
    எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. இராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி.ஜெகந்நாதன், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories