தமிழ்நாடு

ஒரு ரூபாய் செலவில்லாமல் அறுவைசிகிச்சை.. மீண்டெழுந்த ஜிம்னாஸ்டிக் வீரர் - அரசு மருத்துவர்கள் அசத்தல்!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில், விளையாட்டு வீரருக்கு நரம்பு மாற்று அறுவை சிகிச்சை, 4 டாக்டர்கள் குழு தலைமையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் செலவில்லாமல் அறுவைசிகிச்சை.. மீண்டெழுந்த ஜிம்னாஸ்டிக் வீரர் - அரசு மருத்துவர்கள் அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் மேல ஆனுப்பானடியைச் சேர்ந்தவர் பாலு. 19 வயதாகும் இவரது மகன் ஆறுமுக கமலேஷ் மாநில, தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன் பட்டம் பெற்றவர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, ஆறுமுக கமலேஷ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, மூட்டு விலகியுள்ளது.

உடனே மூட்டு விலகியதை அவரது பயிற்சியாளரே சரிசெய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். இதனிடையே, அதிக எடையுள்ள பொருளைத் தூக்கியபோது மீண்டும் தோள்பட்டை மூட்டு விலகியுள்ளது.

பின்னர் மீண்டும் தனியார் மருத்துவமனையில், பரிசோதனை செய்து பார்த்தபோது, கழுத்து முதுகுத்தண்டு பகுதியில் இருந்து இடது தோள்பட்டை வழியாக கை மூட்டுக்குச் செல்லும் 5 நரம்புகளில், 3 நரம்புகளின் செயல்பாடுகள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தனது கைகளை முழுமையாக தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளைப் பெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, சென்னை அண்னாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆலோசனைப்படி, அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் ஆர்.ஸ்ரீதர், ஜி.கார்த்திகேயன், மயக்க மருந்து நிபுணர்கள் மகேஷ், எல்.பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, கையில் உள்ள நரம்புகளை மாற்றி இணைத்தனர்.

சிகிச்சைக்குப் பின் பூரணமாக குணமடைந்த ஆறுமுக கமலேஷ், பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆறுமுக கமலேஷ் ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் அவரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories