தமிழ்நாடு

”தாயகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும்” - உக்ரைனில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர்

"உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்"

”தாயகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும்” - உக்ரைனில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (24.2.2022) அதிகாலையில் ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதை அறிவோம்! இச்செய்தியறிந்த அடுத்த கணமே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த, தொழில் முறைப்படிப்புகள் பயிலும் சுமார் 5000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதை, எடுத்துரைத்தும் - உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் தாம் பெற்று வருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வர ஆவன செய்திடுமாறும் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்து, ஒன்றிய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கவும், தமிழர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாகவும், மாநில ஒருங்கிணைப்பு அலுவலரை முதல்வர் நியமித்தார்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்துவர அந்நாட்டு அரசின் உயர் மட்ட அளவில் இப்பிரச்சினையை எடுத்துச்செல்லுமாறு ஒன்றிய அரசைத் தாம் கேட்டுக் கொள்வதாகவும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலிருந்து "வந்தே பாரத்" மிஷன் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க ஒன்றிய அரசு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், இது தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.

"இந்நிலையில், உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும்"" எனும் ஆறுதலான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று வெளியான அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:-

ரஷ்ய இராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில் முறைக் கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து, உதவிக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

நேற்று (25-2-2022) காலை 10 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக - மாநில தொடர்பு அலுவலரான ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories