தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியில் புத்தெழுச்சியை பெறும் ‘தமிழ்ப்படைப்புலகம்’- மெல்லத் தமிழினி வாழும்”: முரசொலி புகழாரம்!

தமிழ்ப்படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் அரசாக தமிழக அரசு உயர்ந்து நிற்கிறது. இதுதான் தமிழாட்சியின் அடையாளம் ஆகும்.

“தி.மு.க ஆட்சியில் புத்தெழுச்சியை பெறும் ‘தமிழ்ப்படைப்புலகம்’- மெல்லத் தமிழினி வாழும்”: முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்ப்படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் அரசாக தமிழக அரசு உயர்ந்து நிற்கிறது. இதுதான் தமிழாட்சியின் அடையாளம் ஆகும்.

45ஆவது சென்னைப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த அறிவிப்புகள் மூலமாக தமிழ்ப்புத்தக உலகம், புத்தாக்கம் அடையும். கடந்த சனவரி 6ஆம் நாள் சென்னைப் புத்தகக் காட்சி தொடங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலக் கட்டுப்பாடுகள் போடப்பட்டது. இதன் காரணமாக சென்னைப் புத்தகக் காட்சியைத் தள்ளி வைக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று அந்த அமைப்பினர் தள்ளிவைத்தார்கள். இதன் காரணமாக அந்த அமைப்பினருக்கு மிகுந்த நிதிச் சிக்கல் எழுந்தது. கண்காட்சி நடத்தமுடியவில்லை, இந்தக் கண்காட்சியை நம்பி ஏராளமான பதிப்பாளர்கள் அதிக நூல்களைப் பதிப்பித்து விட்டார்கள், அரங்கம் அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் அதையும் எடுக்க முடியாது, இதனால் அந்த இடத்துக்கு தொடர்ந்து வாடகை தர வேண்டிய நெருக்கடி... இப்படிப் பல்வேறு நெருக்கடிகளை அந்த அமைப்பினர் சந்தித்தார்கள். அதே நேரத்தில் கண்காட்சி நடக்குமா, நடத்த முடியுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்தது.

இந்த நிலையில், தங்களது கண்ணீர் கோரிக்கையுடன் அவர்கள் முதலமைச்சரைச் சந்தித்தார்கள். கொரோனா தொற்று லேசாகக் குறையத் தொடங்கியதும், கண்காட்சி நடத்துவதற்கான அனுமதியை நிச்சயம் தருவோம் என்ற உறுதியை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதேபோல், பதிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை தமிழக அரசின் சார்பில் முடிந்த வரை சரி செய்து தருவோம் என்ற உறுதியையும் முதலமைச்சர் அவர்கள் அளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து இழப்பீடாக 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் கண்காட்சி நடத்துவதற்காக 75 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் இருக்கிறது. ஆக மொத்தம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். இது தமிழ்ப் பதிப்புலகத்துக்கு மிகப்பெரிய புத்தெழுச்சியை உருவாக்குவது ஆகும்.

இதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் அவர்கள், இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் தமிழக அரசு விரைவில் வழங்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். ‘நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடப்பதால் இந்த மேடையில் என்னால் அதனை அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்து இருந்தீர்கள். இடையில் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பானது அனைத்துப் பதிப்பாளர்களுக்கும், பதிப்புலகத்துக்கும் புத்தாக்கம் வழங்கும் அறிவிப்பாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனிடையே, தமிழ்ப் பதிப்புத்துறையிலும் தமிழக அரசு முனைப்போடு இறங்கி இருக்கிறது. ‘முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்' என்பதன் அடிப்படையில் கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற மகத்தான படைப்பின் மொழியாக்கத்தை முதலமைச்சர் வெளியிட்டு இருக்கிறார்.

மொழியியல் அறிஞர் மரியாதைக்குரிய பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் இதனை மொழிபெயர்த்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகமும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனமும் இணைந்து இதனை வெளியிட்டுள்ளது. தமிழின் முக்கியப் படைப்புகளை ஆங்கிலம் மற்றும் திராவிட மொழிகளில் வெளியிடத் தொடங்கி இருக்கிறது அரசு. ‘திசை தோறும் திராவிடம்' என்பது இதன் பொதுத்தலைப்பாகும். சிலப்பதிகாரம், தோப்பில் முகமது மீரான் கதைகள், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கதாவிலாசம்', ஹெப் சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு', ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரசு வெளியிட்டுள்ளது. பொது நூலகங்களுக்கு கலை, இலக்கிய இதழ்களை வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். அதேபோல் பொது நூலகங்களுக்கு ஆங்கிலம் மற்றும் போட்டித் தேர்வு இதழ்களை வாங்குவதற்கு 2.35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலமாக நூலகங்கள் புத்தாக்கம் பெற இருக்கிறது. இவை எல்லாம் பதிப்பாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்காமல், வேண்டுகோள் வைக்காமல் செய்யப்பட்ட செயலாகும்.

இதனை ‘நவீன விருட்சம்' சிற்றிதழ் ஆசிரியர் எழுத்தாளர் அழகிய சிங்கர் தனது முகநூலில் எழுதி இருக்கிறார். “தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் ஆஞ்ஞைப்படி பாடநூல் கழக நிதியிலிருந்து 450 பிரதிகள் எல்லா நூல் நிலையங்களுக்கும் ‘நவீன விருட்சம்' வாங்குவதற்கு ஆணை வந்துள்ளது. ஜனவரி 2022லிருந்து டிசம்பர் 2022 வரை. விருட்சம் போல் பல சிற்றேடுகளுக்கும் இது மாதிரி வாங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக விருட்சம் இலக்கிய இதழை, தமிழக அரசின் நூலகங்களுக்கு வாங்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறு பத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன். தமிழக அரசுக்கும், முதல்வர் மு.கஸ்டாலின் அவர்களுக்கும் இப்பணியைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்று அழகியசிங்கர் எழுதி இருக்கிறார். இதைவிட முதலமைச்சருக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இருக்க முடியாது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்.

தமிழ்நூல்கள் நாட்டுடைமை.

எழுத்தாளர்கள் பிறந்த நாளில் கூட்டங்கள்.

குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு.

திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்.

இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது.

உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்.

நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்.

இலக்கியமாமணி விருதுகள்.

உயரிய விருது பெற்ற எழுத்தாளர்க்கு கனவு இல்லம்.

திசை தோறும் திராவிடம்.

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்.

- இப்படி தமிழ்ப்படைப்புலகம் சார்ந்து கடந்த ஒன்பது மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ள செயல்கள் என்பவை; புத்தக உலகத்துக்கும் தமிழ்ப் படைப்புலகத்துக்கும் புதுப்பிக்கும். வாழ்விக்கும். மெல்லத்தமிழினி வாழும்!

banner

Related Stories

Related Stories