தமிழ்நாடு

”நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; சுற்றுச்சூழலை காப்பதே முக்கியமானது” -தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

”நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; சுற்றுச்சூழலை காப்பதே முக்கியமானது” -தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி அருகே பொட்டிப்புரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

திட்டம் அமையவுள்ள மதிகெட்டான் சோலை மற்றும் பெரியார் புலிகள் இடம் பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. எனவே, இத்திட்டற்கான வன உயிரியல் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உயிர் பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இந்த மலையில் மனித செயல்பாடுகளால் சிறு அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், இந்த மலை பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணிக்கு வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய இயந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். மேற்கண்ட காரணங்களை தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

எனவே, திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 22ம் தேதி நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories