தமிழ்நாடு

“வேளாண் பெருங்குடி மக்களுக்கு துரோகம் இழைத்தவர் ‘பாதம் தாங்கி’ பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்!

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காகப் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“வேளாண் பெருங்குடி மக்களுக்கு துரோகம் இழைத்தவர் ‘பாதம் தாங்கி’ பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காகப் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (15/02/2022) மாலை - காணொலி வாயிலாகத் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

சோழர்கள் ஆட்சியின் தலைநகர்!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்!

கோயில்களில் பெரிய கோயிலான பெருவுடையார் கோவில்!

அணைகளில் கம்பீரமான அணையான கல்லணை!

காவிரியின் செழிப்பு கொண்ட மண்!

இவ்வாறு எண்ணிலடங்காச் சிறப்புகளுடன் மற்றொரு பெரும் சிறப்பாக முத்தமிழறிஞர் கலைஞரைத் தந்த தஞ்சை மண்ணில் ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தேர்தல் பரப்புரையில் நான் கலந்துகொண்டு காணொலி வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் போராடிப் போராடி வளர்த்த மாவட்டம் இது.

1948-இல் திருவையாறு கருப்புக் கொடிப் போராட்டம் -

1951 - இராஜாஜி அவர்களுக்குக் கருப்புக் கொடிப் போராட்டம் -

1959 - போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் -

1962 - விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம்-

1964 - சட்ட எரிப்புப் போராட்டம் – அ

இவ்வாறு கலைஞரின் போராட்டத் தழும்பேறிய ஊர், இந்தத் தஞ்சை!

மாமன்னன் இராசராசனுக்குத் தஞ்சையில் கலைஞர் அவர்கள் சிலை வைத்தார்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவை நடத்தியவரும் நம் தலைவர் கலைஞர் அவர்கள்தான்!

அத்தகைய சிறப்புமிகு தஞ்சையில் இந்தக் கூட்டம் நடக்கிறது!

இதேபோலதான் மகாமகம் விழாவையும், 1968-இல் திமுக ஆட்சி சிறப்பாக நடத்தியது.

அப்போது பேரறிஞர் அண்ணா முதலமைச்சர்!

முத்தமிழறிஞர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சர்!

முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் கட்டளையை ஏற்று, கும்பகோணம் வந்த அமைச்சர் கலைஞர் அவர்கள், அந்த விழாவுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.

அப்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்.காசிராமன் அவர்கள்.

‘ராமன் அண்ட் ராமன்’ பஸ் கம்பெனி உரிமையாளர்.

மகாமகம் முடிந்த பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசைப் பாராட்டி நெடுநேரம் பேசினார்.

அந்த அளவிற்கு மகாமகம் விழாவை சிறப்பாக நடத்தியதுதான் திமுக ஆட்சி!

ஆனால், 1992-ஆம் ஆண்டு மகாமகம் எவ்வாறு நடந்தது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்!

அதற்குள் இப்போது விரிவாக செல்ல விரும்பவில்லை!

ஆனால், ஒன்று மட்டும், யாராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை!

தஞ்சை மக்கள் மட்டுமில்லை, தமிழ்நாட்டு மக்களே வியக்குமளவிற்குத் திமுக ஆட்சிதான் மகாமகத்தைச் சிறப்பாக நடத்திய ஆட்சி!

இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே நான் செய்த பணி காவிரி டெல்டா உழவர்களுக்கு சரியான நேரத்தில், ஜூன் 12-ஆம் நாள் அன்றே மேட்டூர் அணையை திறந்துவைத்தேன்.

அதற்கும் முன்னாடியே 65 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணியை அறிவித்து, 12 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி கண்காணிக்க வைத்து, காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கும் செல்வதை உறுதி செய்தவன்தான் இந்த ஸ்டாலின்!

அதுமட்டுமில்லை, கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் நாள் நான் தஞ்சைக்கு வந்து அரசு விழாவில் பங்குபெற்றேன்! தஞ்சை மாவட்டத்திற்கான அரசுப் பணிகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், என்னை இங்கு அழைத்து வந்து மாபெரும் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். அவர் தஞ்சை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதும், தஞ்சை மாவட்டம் முழுக்கச் சுற்றிச் சுழன்று, பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அவர் பெற்ற மனுக்களில், 22 ஆயிரத்து 997 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில், 43 ஆயிரத்து 321 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு பணிகளை ‘உங்கள் வீட்டுப் பிள்ளையாக’ இருக்கின்ற அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்.

‘சோழநாடு சோறுடைத்து’ -

‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்’-

இவ்வாறெல்லாம் புகழப்படும் வேளாண் பெருங்குடி மக்கள் நிரம்பிய மாவட்டம்தான் தஞ்சாவூர் மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வேளாண் துறை சார்பில், இந்தக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சில சாதனைகளை மட்டும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

* இந்த ஆண்டில் டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடி செய்திட 18 இலட்சத்து 53 ஆயிரத்து 735 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிப்ரவரி இரண்டாம் வாரம் முடிய, 20 இலட்சத்து 13 ஆயிரத்து 791 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

நிர்ணயித்ததைவிட ஏறக்குறைய 2 இலட்சம் ஏக்கர் அதிகமாகச் சாகுபடி செய்து சாதித்துக் காட்டியதுதான் இந்த திமுக அரசு!

* டெல்டா மாவட்ட உழவர்கள் பயன்பெறும் வகையில், குறுவைத் தொகுப்புத் திட்டம் 49 கோடியே 55 இலட்ச ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டது.

நெல்விதை, பசுந்தாள், உரவிதை, இரசாயன உரங்கள் கொடுத்ததன் காரணமாக, 2 லட்சத்து 87 ஆயிரம் உழவர்கள் பயனடைந்தார்கள்.

* டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு 3.5 இலட்சம் ஏக்கர் நிர்ணயித்திருந்தோம். ஆனால் 46 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு, 4.9 இலட்சம் ஏக்கர் பரப்பு சாகுபடி செய்திருக்கிறோம். ஏறக்குறைய ஒன்றரை லட்சம் ஏக்கர் சாகுபடி செய்திருக்கிறோம். தி.மு.க. அரசு எப்போதும் இலக்கை மட்டும் நிர்ணயிக்காது. இலக்கை தாண்டித்தான் சாதிக்கும்! அதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம்!

* டெல்டா மாவட்டங்களில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின்கீழ், 1,470 உழவர் ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தினோம்.

பின்னர், அந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து, 294 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்திருக்கிறோம்.

* அட்மா திட்டத்தின்கீழ், டெல்டா மாவட்டங்களில் 24 ஆயிரத்து 497 உழவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

* மானாவாரி பகுதி பயிர் செய்யும் 2000 உழவர்களுக்கு இடுபொருட்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.

* வேளாண் கருவிகள் தொகுப்பு 15 ஆயிரம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

* பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டப்படி, பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 1,366 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பில், 15 இலட்சத்து 85 ஆயிரத்து 13 உழவர்களுக்கு ஒப்பளிக்கப்பட்டிருக்கிறது.

* வடகிழக்குப் பருவமழையில் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு நிவாரணமாக, 33 கோடியே 86 இலட்சம் ரூபாய் உழவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

* வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின்கீழ், மொத்தம் 7 கோடியே 29 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது.

* காட்டுமன்னார்கோவில், பேராவூரணி, பொன்னமராவதி ஆகிய இடங்களில், 3 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட இருக்கிறது.

* திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய 6 உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* டெல்டா மாவட்டங்களில் 64 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 21 கோடியே 6 ஆறு லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

* நாகப்பட்டினம் கீழ்வேளூரில், அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க ஆணையிடப்பட்டிருக்கிறது.

- அதாவது எட்டுமாத காலத்தில், ஒரே ஒரு துறையின்கீழ் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் செய்யப்பட்ட சாதனைகள்தான் இவை!

இவ்வாறு துறைவாரியாக என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும்.

இந்த தஞ்சை மாவட்டத்திற்கு என நிதிநிலை அறிக்கையின்போது வெளியிடப்பட்டுள்ள சில திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன்.

* குறுநீர்ப் பாசனக் குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

* புதிய நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும்.

* புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனில், கால்நடைத் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூபாய் 25 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

* பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு, 1 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

* திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

* தஞ்சாவூரில் உள்ள ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்காக, உயர் திறன் சிகிச்சை பூங்கா அமைத்து தரப்படும்.

* கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம், ‘பிரம்ம நந்தீஸ்வரர் திருக்கோயிலில்’ 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

* தாமரன்கோட்டை அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய திருமண மண்டபம் கட்டித் தரப்படும்.

* சக்கராப்பள்ளி அருள்மிகு சண்டேஸ்வர சுவாமி ஆலயத்திற்குச் சொந்தமான இடத்தில், 1 கோடியே 25 இலட்ச ரூபாய் செலவுல் புதிய திருமண மண்டபம் கட்டித்தரப்படும்

* பூதலூரில் வாத்தலை அருள்மிகு நாச்சியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ரூபாய் 80 லட்சம் செலவில் புதிய திருமண மண்டபம் கட்டித்தரப்படும்.

* கண்ணதங்குடி மேலையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இரண்டு புதிய கட்டடங்களும் சுற்றுச் சுவரும் கட்டித் தரப்படும்.

* ‘ஒரத்தநாடு விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு’, அங்குள்ள உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சேமித்து வைப்பதற்காக, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கட்டடம் ரூபாய் 60 கோடியில் கட்டித்தரப்படும்.

* மத்திய கூட்டுறவு வங்கிக்கான புதிய கிளை தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தில் தொடங்கப்படும்.

* கூட்டுறவுத் துறையின் மூலம் பட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவரும் அரசு தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.

* கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணு நூலகங்கள் அமைக்கப்படும்; ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

- இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தஞ்சை மாவட்டத்திற்காக நிறைவேற்றப்பட உள்ளன!

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை காத்த - காக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்.

தஞ்சை என்பது காவிரி பாயும் பூமி!

காவிரி நீரைப் பங்கிடுவதில், கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பிரச்சினை வந்தபோதே, அதாவது 1970-ஆம் ஆண்டே காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக கலைஞர் அவர்கள் வைத்தார்.

இதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971-ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்.

1990-ஆம் ஆண்டு பிரதமர் ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களை வலியுறுத்தி, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வைத்தவர் தலைவர் கலைஞர்.

தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று, இடைக்காலத் தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவிரி நடுவர் மன்றத்திற்குப் பெற்றுத்தந்தவர் கலைஞர் அவர்கள். காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பும் தந்தது.

அதன்படி, அறிவிக்கப்பட்ட தண்ணீரை கர்நாடக அரசு ஒழுங்காக வழங்குகிறதா என்று யார் கண்காணிப்பது? அதற்கான ஒரு கண்காணிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை, 1997-ஆம் ஆண்டுமுதல் மேற்கொண்டவரும் தலைவர் கலைஞர்தான். பின்னர், மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனதும், அவர் மூலமாக காவிரி நதிநீர் ஆணையம் அமையக் காரணமாக இருந்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான். இறுதித் தீர்ப்பைப் பெற வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்டதும் கலைஞருடைய ஆட்சிதான். காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் 2007-ஆம் ஆண்டு வந்தது.

இவ்வாறு நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலம் முதல் - மண்ணைவிட்டு மறைந்து, நம் நெஞ்சங்களில் நிறைவாகக் குடியேறிய நாள்வரை, தான் பிறந்து - வளர்ந்த காவிரி மண்ணின் நலனைக் கட்டிக்காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

முதல்வர் என்பதைவிட கலைஞரின் புதல்வன் என்ற உரிமையோடும்- பெருமையோடும்- காவிரி மண்ணுக்கும்- வேளாண் பெருங்குடி மக்களுக்கும்- இந்த ஸ்டாலின் என்றும் துணை இருப்பான். 2017-ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது, தமிழ்நாடு அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. அந்த நிலையில் வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018-ஆம் ஆண்டு வந்தது. அதில், 14.75 டி.எம்.சி. நீரைக் கோட்டை விட்ட ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி!

அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக, நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு- இதனைச் செயல்படுத்தவில்லை.‘பல்லக்குத் தூக்கி’யாக இருந்த முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் ஒன்றிய அரசைத் தட்டிக் கேட்கவில்லை. ஆனால், உடனே காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுகதான். தமிழ்நாடு வந்த பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டோம். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை திமுக நடத்தியது. திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன். நம் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் பொதுவுடைமைத் தோழர்கள்- உழவர் பேரியக்கங்கள்- உள்ளிட்ட பலரும் காவிரியில் நமது உரிமையைக் காக்கப் போராடினோம்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், ஒன்றிய அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பை- நீர்வளத்துறையோடு சேர்ந்த ஒரு அமைப்பை- ‘காவிரி மேலாண்மை ஆணையம்’-என்று தொடங்கியது. அதற்கும் ‘ஜால்ரா’ போட்டு, ஆட்சியில் இருந்த பழனிசாமி ஒன்றிய பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்கவில்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை அப்போது கர்நாடக அரசு பார்த்தது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை பழனிசாமி சந்திக்கவில்லை. இவ்வாறு தஞ்சை மாவட்ட உழவர்களுக்கு மட்டுமல்ல-

டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல-

தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல-

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிச்சு வாக்களித்ததன் மூலமாக - ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி!

அவரை ‘பா.ஜ.க’ பழனிசாமி என்றே அழைக்கலாம்! அந்தளவிற்கு பா.ஜ.க. வாய்ஸில் ‘மிமிக்ரி’ செய்துகொண்டு இருக்கிறார்! வயிற்றுக்குச் சோறுபோடும் வேளாண் உழவர்கள், தங்களுடைய உரிமைகளை பாதுகாக்கப் போராடினால், அவர்களை பார்த்து ‘தரகர்கள்’-என்று ஒருத்தர் சொல்கிறார் என்றால், அவருக்கு எப்படிப்பட்ட கல் நெஞ்சம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.‘நானும் ஒரு விவசாயிதான்’என்று பச்சைத் துண்டு போட்டு வேஷம் போட்டார். பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போட திட்டம் போட்டவர்தான் பழனிசாமி! அப்படிப்பட்ட துரோகம் செய்த பழனிசாமியைத்தான் இந்தத் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் தோற்கடித்தீர்கள்.

அப்போதும் அவர் பாடம் கற்றுக்கொள்ளாமல் பாதம் தாங்வதிலேயே குறியாக இருக்கிறார்!‘பாதம் தாங்கி’ பழனிசாமி, உழவர்களுக்கு செய்த துரோகம் ஒன்றா இரண்டா?,

* காவிரியில் 14.75 டி.எம்.சி. நீரைக் கோட்டை விட்டார்.

* நெல், அரிசி பதுக்கும் சட்டத்தை ஆதரித்தார்.

* பேராசிரியர் ஜெயராமனை சிறையில் அடைத்தார்.

* எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்த உழவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தடியடி நடத்தினார்.

* குடிமராமத்து திட்டத்தில் ஊழல் செய்தார்.

* கால்வாய் தூர்வாரும் பணியிலும் கரன்சியைத் தூர்வாரினார்.

* கிசான் திட்டத்தில், உழவர்கள் பெயரில் 6 லட்சம் போலிகளை உருவாக்கி, மோசடி செய்தார்.

* கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றியதில் கூட ஊழல் செய்தார்.

* உழவர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே வழக்குப் போட்டார்.

இவ்வாறு உழவர்களுக்கு நாள்தோறும் துரோகத்தை மட்டுமே செய்தவர் பழனிசாமி!

மூன்று வேளாண் சட்டங்களைத் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று வாதிட்டோம். உழவர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று சுட்டிக்காட்டினோம். இது கார்ப்பரேட்களுக்கு கைகொடுக்கின்ற சட்டம் என்று சொன்னோம். ஆனால், இதை உழவர்களுக்கு பயனளிக்கின்ற சட்டம் என்று பழனிசாமி சொன்னார்.

ஆனால், இப்போது என்ன நடந்தது? உழவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணிந்தது! மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளது! சட்டத்தைக் கொண்டுவந்து உழவர்களை வஞ்சிக்க நினைத்த பிரதமர் மோடியே பின்வாங்கி, உழவர்களின் நெஞ்சுரத்தின் முன்பு தோல்வியடைந்து நிற்கிறார். இறுதியில் உண்மைதான் வென்றுள்ளது! பழனிசாமி உழவர்களின் தலையில் போட நினைத்த துண்டு, அவரது தலையிலேயே விழுந்துள்ளது! நான் பழனிசாமி அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்! பா.ஜ.க.விற்கு ஒரு ஆபத்து என்றால் ஓடோடி வந்து முட்டுக்கொடுத்து, ‘டப்பிங் பேசும்’ பழனிசாமி அவர்களே! மாண்புமிகு பிரதமர் அவர்களே மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டார். இப்போதாவது போராடிய உழவர்களை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும் - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் - வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? பதவியை பெற கூவத்தூரில் மண்டியிட்டு தவழ்ந்தீர்களே- உழவர்களுக்குச் செய்த துரோகத்திற்கும் மண்டியிட்டு மன்னிப்புக் கேளுங்கள்! பெரிய மனது படைத்தவர்கள் நமது உழவர்கள்! நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள்!

இன்று உழவர் பெருமக்களுக்கான திமுக அரசு நடக்கிறது. திமுக அரசுதான், ஆட்சிப் பொறுப்பேற்ற மேடையிலேயே உழவர்களின் 7000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த கலைஞருடைய அரசு! இலவச மின்சாரம் கொடுத்த அரசு! மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய துணிச்சலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு! இப்போது, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தந்துள்ள அரசு! நானும் ஒரு விவசாயிதான் என்று சொல்லிக்கொண்டு, பழனிசாமி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாரா? இல்லை.

ஆனால், நம்முடைய ஆட்சியில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சென்றார். உழவர்கள், வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத்தான் அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கும்போதே, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர் பெருமக்களை நினைவுகூர்ந்தார்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள். அந்த அறிக்கை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

* இரு போக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்த்தப்படும்.

* ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

* நெல் ஜெயராமன் அவர்களின் பெயரால், மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.

* அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

* பனை மரங்கள் வளர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்.

* பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்.

* உழவர் சந்தைகளுக்கு புத்துயிரூட்டுதல்.

* மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள்.

* கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை.

* நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், பழங்குடியினர் உழவர்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

* ‘அண்ணா பண்ணை மேம்பாடு திட்டம்’- அனைத்து உழவர்களும் பயன்பெறும் வகையில், ‘அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப்பண்ணை’-யாக மேம்படுத்தப்படும்.

* சிறுதானிய உற்பத்திக்கு முக்கியத்துவம்.

* உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கம்.

* காய்கறித் தோட்டம்.

* தேனீ வளர்ப்பு.

* கால்நடைகள் வளர்ப்பு.

* சென்னையில் விவசாய அருங்காட்சியகம்.

- இவ்வாறு அனைத்தும் கொண்டதாக அந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டது.

34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டமிடுதல்கள் இதில் இருக்கிறது.

இது அனைத்தையும் செயல்படுத்தி முடிக்கும்போது, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வேளாண் புரட்சி நடத்தப்பட்டிருக்கும்!

கடந்த முறை நான் தஞ்சை வந்தபோதே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னார். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு, சாதனையாக நெல் சாகுபடி அதிகம் ஆகியிருக்கிறது என்று அவர் சொன்னார். 48 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை அளவாக, 1 இலட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார். குறுவை இலக்கு என்பது 1 இலட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர்தான். அதையும் தாண்டி மிக அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை அடைய அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள்தான் காரணம்!

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,

* ஜூன் 12-ஆம் தேதி மிகச்சரியாக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தோம்.

* இவ்வாறு திறந்து விடுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை துரிதமாக செய்தோம்.

* இதனால் கடைமடைப் பகுதி வரைக்கும் தண்ணீர் சென்று சேர்ந்தது.

* குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவித்தோம். இதன் மூலம் மானியத்தில் உரங்கள் வழங்கினோம். நெல் விதைகளை 50 விழுக்காடு மானியத்தில் வழங்கினோம்.

இவை அனைத்தும் சேர்ந்துதான் நெல் சாகுபடியை அதிகப்படுத்தி இருக்கிறது. இதுதான் உண்மையான சாதனை. நான் என்னை உழவன் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், உண்மையில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து, புரிந்து நான் செயல்பட்டேன். பழனிசாமியைப் போல வெளிவேஷம் போட்டு ஏமாற்றவில்லை. இத்தகைய சாதனைகளின் அரசுதான்- திமுக அரசு. ஆனால் ஊழல்கள், முறைகேடுகளின் ஆட்சியாக கடந்தகால அதிமுக ஆட்சி அமைந்திருந்தது!

* உறவினர்கள் மூலம் ஊழல் செய்தவர் பழனிசாமி என்று- அப்போதே அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலமாகச் செய்திகள் வந்ததே!

* வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த புகார்கள் பன்னீர்செல்வம் மீது இருக்கிறது!

* உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, ஸ்மார்ட் சிட்டி வரை அனைத்திலும் புகார்களுக்கு உள்ளானவர் வேலுமணி!

* தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தில் இருந்து, நிலக்கரி இறக்குமதிவரை முறைகேடு செய்ததாகத் தங்கமணி மீது புகார் இருக்கிறது!

* குட்காவில் புகழ் பெற்றவர் டாக்டர் விஜயபாஸ்கர்!

* பருப்பு கொள்முதலில் காமராஜும்,

* பால் கொள்முதலில் ராஜேந்திரபாலாஜியும்,

* முட்டை கொள்முதலில் சரோஜாவும்,

* பத்திரப்பதிவில் வீரமணியும் - சிக்கினார்கள்.

இவ்வாறு- ஊழல் மயம்! லஞ்ச மயம்! கொள்ளை மயம்! என ஆட்சி நடத்திய கூட்டம்தான்- பழனிசாமி காமெடி நாடகக் கம்பெனி!

‘அதிமுகவை எதிர்க்க தி.மு.க.விற்குத் தெம்பும் திராணியும் இல்லை'-என்று, பழனிசாமி பேசியிருக்கிறார். அவர் தூக்கத்தில் பேசுகிறாரா என்று தெரியவில்லை! நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர, அனைத்திலும் அதிமுக கூட்டணியைத் தோற்கடித்திருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருக்கிறது! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை பழனிசாமி மறந்துவிட்டாரா? தனது பதவியை வைத்து, தமிழ்நாட்டு மக்களுக்குத் துளியும் நன்மையைச் செய்யாத பழனிசாமிக்கு- ஊழல் முறைகேடுகளில் மட்டுமே அக்கறையாக இருந்த பழனிசாமிக்கு-

இப்போதுதான் மக்களைப் பற்றி நினைவு வந்திருக்கிறது போல! மக்களால் புறந்தள்ளப்பட்ட இந்தக் கூட்டம் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறது. நான் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, காணொலி வழியாகப் பரப்புரை செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கும் நான் நேரடி பரப்புரை செய்தால், கூடுகின்ற கூட்டத்தை பார்த்து இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று, அனைவருக்கும் நன்றாக தெரியும்.

நாள்தோறும் கோட்டையில் பணிகளை முடித்துவிட்டு, மாலையில் காணொலி வாயிலாக உங்களைச் சந்தித்து, நம்முடைய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஆதரவு கேட்கிறேன். சிலர் கடந்தகாலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளைப் பரப்புரைக்கு அனுமதிக்காமல், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அவர்கள் மட்டும் பரப்புரைக்கு சென்றார்கள். மக்கள் ஆதரவு தந்தார்களா? ரிசல்ட் என்ன ஆனது? நியாபகம் இருக்கிறதா? பச்சைப் பொய்களைக் கூறி அனைவரையும் ஏமாற்றிட முடியாது என்பதை, பழனிசாமி-பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி உணர வேண்டும்! இப்போதும் மக்கள் அதை உணர்த்தத்தான் போகிறார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலிலும்-

சட்டமன்றத் தேர்தலிலும்-

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த சவுக்கடியை - தண்டனையை - இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு தாருங்கள்.

நாடாளுமன்றத் தேர்தலிலும்-

சட்டமன்றத் தேர்தலிலும்-

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த வெற்றியை-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வுக்குத் தாருங்கள்! அதை முழுமையான வெற்றியாகத் தாருங்கள்! சமூக விரோத கட்சிகளைத் தூக்கி எறிந்து- திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு- உதயசூரியன் சின்னத்திலும்-

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நமது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு- அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தாருங்கள் என்று வேண்டி விரும்பிக்கேட்டு விடைபெறுகிறேன். விரைவில் நாம் வெற்றிவிழாவின்போது நேரில் சந்திப்போம்! தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories