தமிழ்நாடு

“நீட் தேர்வால் யாருக்கு பலன்? உண்மை நிலை இதுதான்” - புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கும் கி.வீரமணி!

நீட் தேர்வால் சி.பி.எஸ்.இ மாணவர்களே அதிகம் பலன் அடைந்துள்ளனர் என புள்ளி விவரங்களுடன் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வால் யாருக்கு பலன்? உண்மை நிலை இதுதான்” - புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கும் கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நீட்’ தேர்வால் பலன் அடைந்தோர் யார்? பாதிக்கப்படுவோர் யார்? என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

‘நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை காரணமாக, தமிழ்நாட்டில் முதல் தலைமுறைப் படிப்பாளர்கள், கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள், ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களின் வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கும், தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கும் வாய்ப்பு குறைகிறது என திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கூறிக்கொண்டு வந்திருக்கின்றன.

இதன் தீர்வாக, முந்தைய அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் ஏற்கப்படாதது குறித்துக்கூட அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. தெரிந்த பிறகும் அ.தி.மு.க. அரசால் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

தி.மு.க. தனது 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆட்சிக்கு வந்ததுமே, இப்பிரச்சினை குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைப்படி, ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, தோழமைக் கட்சிகள், அ.தி.மு.க, பா.ம.க என அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் தந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அரசின் முறைப்படி, ஆளுநருக்கு 2021, செப்டம்பர் 13ஆம் தேதி அனுப்பப்பட்டது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன்படி, விரைவாகச் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தும், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் கடத்தி வந்தார் ஆளுநர். முதலமைச்சர் இருமுறை ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தியும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரின் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியும், எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், கடந்த 1.2.2022 அன்று மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.

“நீட் தேர்வால் யாருக்கு பலன்? உண்மை நிலை இதுதான்” - புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கும் கி.வீரமணி!

ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிட குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்கள், ஒன்று - மசோதா மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது; இரண்டு - ‘நீட்' தேர்வு ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த காரணங்களுமே நகைப்புக்குரியது மட்டுமல்ல, ‘நீட்' தேர்வு குறித்த புரிதல் இன்மையை வெளிக்காட்டுகிறது சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்கும் உண்டு.

மாணவி அனிதா முதல் ‘நீட்' தேர்வு காரணமாக தங்களை மாய்த்துக் கொண்ட பலரும் சமூகத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தாம். அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, ‘நீட்' தேர்வுக்கான பயிற்சியை பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியாமல் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதைத்தான் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது.

ஏன், தற்போது வெளிவந்துள்ள மருத்துவ இளங்கலை படிப்பு (எம்.பி.பி.எஸ்) க்கான கலந்தாய்வு சில விவரங்களை வெட்ட வெளிச்சமாக நமக்குத் தருகிறது.

இவ்வாண்டு நிலை என்ன?

மொத்த இடங்கள்: 6,999

அரசு கல்லூரிகள்: 4,349 இடங்கள்

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2,650 இடங்கள்

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் ஆதிக்கம் தரவரிசைப் பட்டியல்:

முதல் 10 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2, முதல் 100 ரேங்கில், சி.பி.எஸ்.இ மாணவர்கள் 81, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17, முதல் 1000 ரேங்கில், மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு. ‘நீட்' தேர்விற்கு முன், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் இருந்து ஒரு சதவிகிதம் (1%) மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இப்போது அது 39 சதவிகிதமாக (39%) ஆகிவிட்டது! என்னே கொடுமை!!

‘நீட்' தேர்வுக்கு முன், மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாக குறைந்துள்ளது.

‘நீட்' தேர்வுக்கு முன், கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ‘நீட்' தேர்வு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது.

யார் யாருக்கு இடம் கிடைத்துள்ளது?

ஆங்கில ‘இந்து' பத்திரிகையில் நேற்று (6.2.2022) வந்துள்ள ‘நீட்' தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2 இல் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017 இல் ‘நீட்' எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

தகுதிப் பட்டியலில் 9,976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது, 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று விடாது படையெடுப்போர். வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும். மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்துவரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால் யாருக்கு சாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்' தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘நீட்' தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங் மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான்.

மாநில அரசுக்கு உரிமை உண்டு

ஆகவேதான், மக்கள் நலன் சார்ந்த அரசு என்கிற முறையில் ‘நீட்' தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்ற முயல்கிறது. அரசமைப்புச் சட்டப்படியும் அத்தகைய சட்டம் கொண்டு வர எந்தத் தடையும் இல்லை என்கிற நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, மீண்டும் ‘நீட்' தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது நியாயமான, சமூகநீதியின்படியான நடவடிக்கையே!

தேர்வு மார்க்குகள் - திறனறிவின் உண்மை அளவுகோல் ஆகாது என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் தீர்ப்புப்படியே, ‘நீட்' தேர்வு ஏற்கத்தக்கதா?

12 ஆண்டுகள் படித்த படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் குப்பைக் கூடையில் தூக்கியெறிந்து, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மேட்டுக் குடியானவர்களுக்குச் சாதகமாக நடத்தும் தேர்வுதான் தகுதி- திறமைக்கு அடையாளமா? அளவுகோலா? பணம் படைத்தவர்களுக்குத்தான் படிப்பா?

‘நீட்'டுக்கு முன் ஒரு சதவிகிதம் இடம்பெற்ற சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில், ‘நீட்'டுக்குப் பிறகு 39 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளனர் என்றால், ‘நீட்' யாருக்கு சாதகம்? யாருக்குப் பாதகம்? என்பதைத் தெரிந்துகொள்ளலாமே!

‘மயிலே, மயிலே' என்றால் இறகு போடாது! பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வரவேண்டிய அவசரமும், காலமும் வந்துவிட்டது! எழுக, எழுக! விழித்தெழுக, எழுக! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தைப் பலப்படுத்துக! பலப்படுத்துக!!

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories