தமிழ்நாடு

“19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கைப் பெண் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கைது” : ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் போலி பாஸ்போா்ட் வழக்கில், இலங்கை பெண் ஒருவரை போலிஸார் கைது செய்து ஒப்படைத்துள்ளனர்.

“19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கைப் பெண் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கைது” : ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (69). இவருக்கு 19 வயதாக இருக்கும்போது, 1977ஆம் ஆண்டில் இலங்கை பாஸ்போா்ட்டில் சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்தாா். அதன்பின்பு இலங்கை திரும்பாமல் தமிழ்நாட்டில் கோவையில் நிரந்தரமாக தங்கி இருந்தாா்.

அப்போது கோவை ஆா்.எஸ்.புரத்தை சோ்ந்த இந்தியரான அய்யாகண்ணு என்பவருக்கும், சரோஜினிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதன்பின்பு சரோஜினி தனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்லாமல், இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

சரோஜினி இந்தியரை திருமணம் செய்து கொண்டதோடு, இலங்கை பிரஜை என்பதை மறைத்து, இந்தியா் என போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் வாங்கி விட்டாா். சரோஜினி 48 ஆண்டுகளாக தாய்நாடான இலங்கை செல்லாமல் இந்தியாவிலேயே வசித்துவந்தாா்.

இந்நிலையில், சரோஜினிக்கு தற்போது தனது நாடான இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து இவர் சென்னையில் இருந்து இலங்கை செல்வதற்காக நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார். காலை 11.30 மணிக்கு இலங்கை கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து உள்ளே வந்தாா்.

“19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கைப் பெண் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கைது” : ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில், இலங்கையை பூா்வீகமாக கொண்ட சரோஜினி, இந்திய பாஸ்போா்ட்டில் இலங்கை செல்ல வந்திருப்பதை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அதிகாரிகள் விசாரணையில், தான் இலங்கையில் பிறந்தவராக இருந்தாலும், இந்தியரை திருமணம் செய்ததால், இந்தியா் என்று வாதிட்டாா். ஆனால் குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து சரோஜினியின் இலங்கை பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதோடு கியூபிராஞ்ச் போலிஸ், மத்திய உளவு பிரிவு போலிஸாரும் பல மணி நேரம் விசாரணை நடத்தினா். அப்போது சரோஜினி முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாா். இதையடுத்து நேற்று இரவு குடியுரிமை அதிகாரிகள் சரோஜினியை கைது செய்தனா்.

அதன்பின்பு சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலிஸுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் இன்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்து, சரோஜினியை சென்னையில் உள்ள தங்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories