தமிழ்நாடு

”ராகுல் காந்தி தன்னை ’தமிழன்’ எனக் கூறிக்கொள்ள தகுதியும் உரிமையும் கொண்டவர்” - எப்படி தெரியுமா?

தமிழன் என்று அழைத்துக் கொள்வதற்கான தகுதியும், உரிமையும், உறவும் ராகுல் காந்திக்கு நிரம்பவே இருக்கிறது.

”ராகுல் காந்தி தன்னை ’தமிழன்’ எனக் கூறிக்கொள்ள தகுதியும் உரிமையும் கொண்டவர்” - எப்படி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது.

அதில் நேற்று முன் தினம் மக்களவையில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வயநாடு தொகுதி எம்.பியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்தத் தலைவருமான ராகுல் காந்தி பேசியது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது.

அப்போது தமிழ்நாடு குறித்தும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் குறித்தும் ராகுல் காந்தி பேசியிருந்தார். பாஜக உறுப்பினர்களால் எதற்கும் பதிலளிக்கவோ எதிர்க்கவோ முடியாத அளவுக்கு அவரது பேச்சு அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அவையை விட்டு வெளியேறிய போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நானும் தமிழன் தான் எனக் கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலானது.

இந்த நிலையில், ராகுல் காந்தி, தன்னை "தமிழன்" என்று சொல்லிக் கொண்டுள்ளாரே எப்படி என்றால்; அதற்குக் காரணம் இதுதான் எனக் குறிப்பிட்டு முரசொலி நாளேட்டில் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

அதில், “தமிழன் என்பது ஒரு தேசிய இனத்தின் குறியீடு, உருவகம். "தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்றார் நாமக்கல் கவிஞர். தமிழன் என்ற தேசிய இனத்திற்கே உரிய தனிப் பெரும் குணங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்றுக்கொண்டு, அவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு பின்பற்றி, அவற்றின்படி ஒழுகி நடப்பவர்கள் எவராயினும், தம்மை "தமிழர்" என்று அழைத்துக் கொள்வது சரியே. ‘யாவரும் கேளிர்’ என்றார் கணியன் பூங்குன்றனார்.

எல்லோரும் தமிழர்க்கு உறவினரே. அந்த வகையிலேதான், ராகுல்காந்தி, தம்மை "தமிழன்" என்று பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். தமிழன் என்று அழைத்துக் கொள்வதற்கான தகுதியும், உரிமையும், உறவும் அவருக்கு நிரம்பவே இருக்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories