தமிழ்நாடு

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!

சேவல் சண்டை போட்டி வருகின்ற ஜனவரி 17ஆம் தேதியன்று நீதிமன்ற அனுமதியோடு உத்தமபாளையத்தில் நடைபெற உள்ளது.‌

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பல ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் நடைபெறாமல் இருந்த சேவல் சண்டை போட்டியானது இந்த ஆண்டில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதியன்று நீதிமன்ற அனுமதியோடு உத்தமபாளையத்தில் நடைபெற உள்ளது.‌ சேவல் கட்டுக்கு தயாராகி வரும் சண்டை சேவல்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு இது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் கட்டு என்றழைக்கப்படும் சேவல் சண்டை. முக்கியமாக தென் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கிடா முட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு அடுத்தபடியாக சேவல் கட்டு போட்டியானது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பண்டைய தமிழ்நாட்டில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய பாரம்பரியமிக்க விளையாட்டான சேவல்கட்டு போட்டியானது, தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வெப்போர் என்றழைக்கப்படும், வெத்துக்கால் முறையில் சண்டை செய்வது வழக்கம்.

இரு சேவல்களும் குறிப்பிட்ட எல்லைக்குள் மோதச் செய்து எந்தச் சேவல் கடைசிவரை களத்தில் வெளியேறாமலும், மூக்கைத் தரையில் குத்தாமலும் நின்று அடிக்கிறதோ அதுவே வெற்றி பெற்ற சேவலாக அறிவிக்கப்படும். வென்ற சேவலின் உரிமையாளருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!

ஆனால் ஒரு சில இடங்களில் கத்திக்கால் சண்டை முறைப்படி போட்டி நடைபெற்றதால் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.‌ சேவலின் காலில் சிறிய அளவிலான கத்தியை கட்டி ஒன்றோடொன்று மோத விடுவது வழக்கம். இதனால் சேவல்கள் சண்டையிடும் களத்திலேயே மடிந்துவிடும் நிலை இருந்தது. இதன் காரணமாக சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை பல ஆண்டுகளாக நீடிப்பதால், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது சண்டை சேவல் இனம்.‌

இந்நிலையில், அழிந்து வரும் சண்டை சேவல் இனத்தை பாதுகாக்க சேவல் கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தமபாளையத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.‌ அந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சேவல்களின் கால்களில் கத்தி மற்றும் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களை கட்டக் கூடாது, ஒவ்வொரு பந்தயத்தின் போதும் பங்கேற்கும் இரு சேவல்கள் போட்டியின் முடிவில் உயிருடன் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதியன்று உத்தமபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து போட்டியில் பங்கேற்பதற்காக சேவல் வளர்ப்பவர்கள் தங்கள் சேவல்களுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!

Edwin Photography

இயற்கையாகவே சண்டையிடும் குணமுள்ள சேவல்கள், நிறம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் வளர்க்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் அல்லிநகரம், போடி, பாலார்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் வளர்க்கப்படுகிறது. 180 வகையான சேவல் இனங்கள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது வெப்போர், கல்பிஷ்ரா, கருஞ்செவளை, சாம்பல் செவளை, மயில் மாரி, பொட்டு மாரி, வெள்ள நூரி, சீத்தா புள்ளி, வெள்ள புள்ளி, பியூலா உள்ளிட்ட 18 வகையான சண்டை சேவல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பொதுவாக ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவது போலத்தான் சேவல்கட்டுக்கும் சேவல்கள் தயார்படுத்தப்படுகின்றன. தானிய வகைகள், பாதாம், பிஸ்தா, முட்டை, இறைச்சி, என ஆரோக்கியமான உணவுகளை வழங்கி குழந்தைகளைப் போல பராமரித்து வருகிறோம். இது தவிர தடுப்பூசி, விட்டமின் மாத்திரைகள் என ஒரு சேவல் பராமரிப்பிற்கு மாதம் ரூபாய் 3000 ரூபாய் வரை செலவு செய்து சேவல் இனங்களை அழியாமல் பாதுகாத்து வருகிறோம் என சேவல் வளர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ‘சேவல் கட்டு’.. நீதிமன்ற அனுமதியோடு மோத தயாராகி வரும் சண்டை சேவல்கள்!

KN Photography

மேலும் இந்தப் பயிற்சியில் மண் வாருதல், நடை பழக்குதல், தண்ணீரில் நீச்சல் என தாக்குதலுக்கும் பிரத்யேகமாக பயிற்சி வழங்கி போட்டியில் பங்கேற்க வைப்போம், சில சேவல்கள் ஒரு மணி நேரம் கூட பந்தயத்தில் நின்று விளையாடும். ஆடு(ம்)களத்தை வென்றெடுக்கும் என்கிறார் சேவல் பயிற்சியாளர் முகம்மது ராஜா.

சண்டைக்கு பயன்படுத்த முடியாமல் பல ஆண்டுகளாக ஒரு காட்சிப் பொருளாகவே சேவல்கள் இருந்ததனால், பலரும் சேவல் வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இறைச்சிக்காக சேவல்களை விற்பனை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் சேவலின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டதோடு, வரும் காலங்களில் சண்டைச் சேவல் இனம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் தற்போது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சேவல் கட்டு போட்டி நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் எப்படி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அரசாணை வெளியிடப்பட்டதோ, அதேபோன்று சேவல் கட்டுக்கும் நிரந்தர அரசாணையை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் சேவல் வளர்ப்பார்கள்.

மேலும் ஆடுகளத்திற்கு கிடைத்த நீதிமன்ற அனுமதியால் புத்துயிர் பெற்றுள்ளது, அழிவின் விளிம்பில் இருந்த சண்டை சேவல்கள். பாரம்பரியமிக்க சேவல்கட்டு போட்டி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories